Latest Updates
-
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்..
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்!
World Sight Day 2026: இந்தியாவில் தற்போது சுமார் 101 மில்லியனுக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயுடனும், சுமார் 136 மில்லியன் மக்கள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக உலகிலேயே சர்க்கரை நோயாளிகளை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்த சர்க்கரை நோயானது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் வரக்கூடிய ஒரு நாள்பட்ட மருத்துவ நிலையாகும். இந்நிலையில் உடலால் இன்சுலினை போதுமான அளவு உற்பத்தி செய்யவோ அல்லது அதை பயன்படுத்தவோ முடியாமல் போய், அதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

காலப்போக்கில் இந்த சர்க்கரை நோய் உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கலாம். அதில் கண்களைப் பாதிக்கும் முக்கியமான சிக்கல்களில் ஒன்று சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு/நீரிழிவு விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy) ஆகும். சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய இந்த கண் பாதிப்பு குறித்து ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தற்போது கண் பிரச்சனைகளையும் ஏராளமானோர் சந்திக்கின்றனர்.
கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 08 ஆம் தேதி உலக பார்வை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு என்றால் என்ன, அதன் அறிகுறிகள், யாருக்கு அதிக ஆபத்து உள்ளது மற்றும் இதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பன குறித்து சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவு இயக்குநரான டாக்டர் ரவீந்திர மோகன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
நீரிழிவு விழித்திரை பாதிப்பு என்றால் என்ன?
"சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு என்பது கண்ணின் பின்புறத்தில் உள்ள ஒளியை உணரும் திசுவான விழித்திரையின் சிறிய இரத்த நாளங்களை பாதிக்கும் ஒரு நிலையாகும். இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால், காலப்போக்கில் பார்வை பாதிக்கப்படுவதுடன், தீவிரமான நிலைகளில் நிரந்தர பார்வை இழப்பும் ஏற்படலாம்" என்று டாக்டர் கூறினார்.
சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
"தொடர்ந்து அதிகமாக இருக்கும் இரத்தச் சர்க்கரை அளவு, விழித்திரைக்கு இரத்தத்தை வழங்கும் சிறிய இரத்த நாளங்களைப் பாதிக்கலாம். இதனால் இந்த இரத்த நாளங்களில் இருந்து திரவம் அல்லது இரத்தம் கசியலாம் அல்லது அவை அடைபடலாம். இதன் காரணமாக விழித்திரைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பது குறையலாம்.
நோய் தீவிரமடையும் நிலையில், விழித்திரையில் அசாதாரணமான புதிய இரத்த நாளங்கள் உருவாகலாம். இவற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, கடுமையான பார்வைக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
"நீரிழிவு விழித்திரை பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான வெளிப்படையான அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம். அதுவும் நோய் முன்னேறும் போது பின்வரும் அறிகுறிகள் தெரியலாம். அவையாவன:
* பார்வை மங்கலாகுதல் அல்லது பார்வையில் ஏற்ற இறக்கம் ஏற்படுதல்
* பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது மிதக்கும் புள்ளிகள் தோன்றுதல்
* இரவில் பார்ப்பதில் சிரமம்
* பொருட்கள் வளைந்து அல்லது சிதைந்துபோல் தோன்றுதல்
* தீவிரமான நிலையில் திடீர் பார்வை இழப்பு" என்று டாக்டர் கூறினார்.
யாருக்கு அதிக ஆபத்து உள்ளது?
"நீண்ட காலமாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும், இரத்தச் சர்க்கரை அளவை சரியாகக் கட்டுப்படுத்தாதவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகம். மேலும், பின்வரும் காரணிகளும் ஆபத்தை அதிகரிக்கலாம்.
* உயர் இரத்த அழுத்தம்
* அதிக கொழுப்பு
* புகைப்பிடித்தல்
* சிறுநீரக நோய்
* சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்கள்
முக்கியமாக பல ஆண்டுகளாக சர்க்கரை நோயுடன் இருப்பவர்கள், தொடர்ந்து கண் பரிசோதனை செய்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்." என்று டாக்டர் மோகன் கூறினார்.
சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
"சிகிச்சையானது நோயின் நிலை மற்றும் தீவிரத்தை பொறுத்து மாறுபடும். ஆரம்ப கட்டங்களில், இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகளைச் சரியாகக் கட்டுப்படுத்துவதுடன், தொடர்ந்து கண்காணிப்பது போதுமானதாக இருக்கலாம். நோய் தீவிரமடைந்த நிலையில், கண் மருத்துவர் பின்வரும் சிகிச்சைகளில் தேவையானதைப் பரிந்துரைக்கலாம். அதில்
* கண்ணுக்குள் மருந்து செலுத்தும் சிகிச்சை
* லேசர் சிகிச்சை
* விழித்திரையில் ஏற்பட்ட பாதிப்பைப் பொறுத்து அறுவை சிகிச்சை போன்றவை குறிப்பிடத்தக்கவை" என்று டாக்டர் கூறினார்.
சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பைத் தடுக்க முடியுமா?
"சர்க்கரை நோயால் ஏற்படும் கண் பாதிப்பை எப்போதும் முழுமையாகத் தடுக்க முடியாது. இருப்பினும், கடுமையான பார்வை இழப்பு ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்க முடியும். இதற்கு,
* இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
* இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்துதல்
* மருத்துவர் பரிந்துரைத்த சர்க்கரை நோய் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுதல்
* புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல்
* தொடர்ந்து கண்ணின் விரிவான பரிசோதனை செய்து கொள்ளுதல் ஆகியவை மிகவும் முக்கியம்." என்று டாக்டர் கூறினார்.
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது பார்வையில் மாற்றங்கள் ஏற்படும் வரை காத்திருக்காமல் கண்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து , சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது பார்வையைப் பாதுகாக்கவும், நீரிழிவு விழித்திரை பாதிப்பு தீவிரமடைந்து மீள முடியாத பார்வை இழப்பாக மாறுவதைத் தடுக்கவும் உதவும். எனவே இந்த உலக பார்வை தினத்தில், "பார்வை தெளிவாக இருக்க, கண் பரிசோதனையைத் தாமதிக்க வேண்டாம்" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.



Click it and Unblock the Notifications




