வெண்டைக்காயை இந்த மாதிரி வெட்டி நீரில் ஊற வெச்சு குடிச்சா.. உடம்புல என்னென்ன அதிசயம் நடக்கும் தெரியுமா?

Ladies Finger Water In Tamil: காய்கறிகளில் வெண்டைக்கா பிசுபிசுப்புத்தன்மையுடன் இருப்பதால், பெரும்பாலானோர் வெண்டைக்காயை தங்களின் விருப்பமான காய்கறியாக கூறமாட்டார்கள். ஆனால் வெண்டைக்காய் என்ன தான் பிசுபிசுத்தன்மையுடன் இருந்தாலும், அது சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. இந்த வெண்டைக்காயை ஒருவர் பச்சையாகவும் சாப்பிடலாம், சாம்பார், புளிக்குழம்பு, சிப்ஸ் என்று பலவாறு உட்கொள்ளலாம்.

ஆனால் வெண்டைக்காயை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் என்பதை நாம் பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். குறிப்பாக வெண்டைக்காய் நீரானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று கூறுவார்கள். இப்போது இந்த வெண்டைக்காய் நீரை எப்படி தயாரிப்பது, அந்நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எப்போது இந்நீரைக் குடிக்க வேண்டும் என்பன போன்றவற்றைக் காண்போம்.

Ladies Finger Water: How To Make Okra Water And Its Benefits In Tamil

ஆயுர்வேதத்தில் வெண்டைக்காய் நீர்

ஆயுர்வேதத்தில் வெண்டைக்காய் நீர் மிகவும் நல்லதாக கூறப்படுகிறது. முக்கியமாக இது எடை இழப்பிற்கு நல்லது, இதய நோய், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த வெண்டைக்காய் நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உடலில் உள்ள பல பிரச்சனைகளை எதிர்த்து பாதுகாப்பளிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்

வெண்டைக்காயில் புரோட்டீன், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. எனவே வெண்டைக்காயை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வெண்டைக்காய் நீரை தயாரிப்பது எப்படி?

* முதலில் 4-5 வெண்டைக்காயை எடுத்து நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் முனைகளை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக்கி, ஒரு டம்ளர்/ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 லிட்டர் நீரை ஊற்றி, மூடி வைத்து 8 மணிநேரம் வெண்டைக்காயை நீரில் ஊற வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, வெண்டைக்காயில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, வெண்டைக்காயை அகற்ற வேண்டும்.
* பின் அந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இப்போது வெண்டைக்காய் நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

சர்க்கரை நோய்க்கு நல்லது

வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல பொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேட்டில் இருந்து குளுக்கோஸைப் பிரித்தெடுக்க உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இந்த இன்சுலின் கணையத்தால் வெளியிடப்படுகிறது. இந்த இன்சுலின் குறைபாடு ஏற்படும் போது தான், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. ஆனால் வெண்டைக்காய் நீரைக் குடிக்கும் போது, அது கணையத்தில் பீட்டா செல்களை மேம்படுத்தி, இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் விளைவாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெண்டைக்காய் உதவுகிறது.

உடல் களைப்பைக் குறைக்கும்

வெண்டைக்காய் நீரை ஒருவர் வழக்கமாக குடித்து வந்தால், மல்டிவைட்டமின் மாத்திரைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் இந்த நீரிலேயே நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இதன் விளைவாக உடல் களைப்பு மற்றும் சோம்பல் போன்றவை நீங்கும்.

எடை இழப்பிற்கு உதவும்

வெண்டைக்காயில் உள்ள பல உட்பொருட்கள் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. எலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், சர்க்கரை நோய் உள்ள எலிகளுக்கு 8 வாரம் வெண்டைக்காய் சாறு கொடுக்கப்பட்டதில், அந்த எலிகளின் எடை கணிசமாக குறைந்திருப்பது தெரிய வந்தது.

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்

வெண்டைக்காயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. முக்கியமாக இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பளித்து, உடலுறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அத்துடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கின்றன. எனவே புற்றுநோயாளிகள் வெண்டைக்காய் நீரைக் குடிப்பது மிகவும் நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, April 11, 2023, 15:45 [IST]
Desktop Bottom Promotion