For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக இதய தினம்: இருதயத்தை காக்க இதமான யோசனைகள்

By Mayura Akilan
|

இருதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகிறது. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால்தான் நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்யமுடிகிறது. நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. கண்டதையும் சாப்பிடுகிறோம். தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொள்கிறோம் விளைவு இருதயம் நோய்க்கு ஆளாகிவிடுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு இடைஞ்சல் என்றால் மட்டுமே நாம் அதைப்பற்றி கவலைப்படுகிறோம்.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ.வி., மற்றும் டி.பி., ஆகியவற்றால் 38லட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர் என்கிறது புள்ளிவிபரம். இதிலிருந்து இருதய நோயின் பாதிப்பு எந்தளவிற்கு உள்ளது என தெரிந்து கொள்ளலாம் என, உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இருதய குறைபாட்டுடன் பிறக்கின்றன. உலகில் 10 மாணவர்களில் ஒருவர், அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர். இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29 ம் நாள் உலக இருதய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று உலக இருதய தினத்தை ஒட்டி இருதயத்தை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் படியுங்களேன்.

நோ டென்சன் ரிலாக்ஸ்

உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரிணியே மௌனம், தியானம், நிதானம்தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே எந்த செயலையும் அழுத்தமின்றி செய்ய பழகிக்கொண்டாலே இருதயத்தில் அழுத்தமோ, டென்சனோ ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும்.

இதயத்தை காக்க மற்ற உணவுவகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன் என்றே சொல்லலாம். முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன் உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது. தோலில்லா கோழியிறைச்சி இவைகள் உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவையான புரோட்டினைத் தந்து காக்கும். பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி,பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்துக்கு வேண்டிய கொழுப்பை தந்து இதயத்தை காக்கும்.

சீரான ரத்த ஓட்டம்

இதயநோய்கள், அட்டாக் இவை வருவதற்கு முதல்காரணமாக இருப்பவை ரத்த ஓட்டத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த ரத்த ஓட்டத்தை சீர்படுத்த தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் இ, சி, போன்றவை இதயத்திற்கு வலுசேர்க்கின்றன.

ஒவ்வொருவரும் ஒரு நாளில் காய்கறி அல்லது பழங்களின் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்

புகை வேண்டாமே

இருதயத்தின் முக்கிய எதிரி புகைதான். எனவே புகையை விட்டொழியுங்கள். புகையிலை சேர்ந்த எந்தப்பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அது வெற்றிலைபாக்கு போடும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ எந்த போதை பழக்கமாக இருந்தாலும் இப்போதே விட்டுவிடுங்கள்.

சிரிங்க சிரிக்க வைங்க

வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். அவ்வப்போது சில நிமிடம் காலார நடை போடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் இருதயம் கடைசி வரை ஆரோக்கியமாய் இயங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

World heart day : Save our heart | உலக இதய தினம்: இருதயத்தை காக்க இதமான யோசனைகள்

Cardiovascular diseases are the world's largest killers, claiming 17.3 million lives a year. Risk factors for heart disease and stroke include raised blood pressure, cholesterol and glucose levels, smoking, inadequate intake of fruit and vegetables, overweight, obesity and physical inactivity.
Story first published: Saturday, September 29, 2012, 11:36 [IST]