சாமை கார கொழுக்கட்டையும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Samai Kara Kozhukattai With Kara Chutney Recipe In Tamil: எப்பவும் ஒரே மாதிரி காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? சற்று சத்தான, அதே சமயம் ருசியான காலை டிபனை சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் அவ்வப்போது சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் சிறுதானியங்களைக் கொண்டு வெறும் கஞ்சி தான் செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். அதைக் கொண்டும் உப்புமா, தோசை, பொங்கல் என்று செய்யலாம். அதுவும், அதைக் கொண்டு கொழுக்கட்டை செய்தால், இன்னும் அருமையாக இருக்கும்.

Samai Kara Kozhukattai With Kara Chutney How To Make This Healthy Breakfast Recipe

இன்று நாம் பார்க்கப்போவது சாமை கார கொழுக்கட்டை பற்றி தான். இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். அதுவும் இதை காலையில் டிபனாகவோ அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றோ சாப்பிடலாம். இந்த கொழுக்கட்டையை கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னு பிரமாதமாக இருக்கும்.

இந்த சாமை கார கொழுக்கட்டை மற்றும் கார சட்னி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சாமை கார கொழுக்கட்டை மற்றும் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாமை கார கொழுக்கட்டை மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கொழுக்கட்டைக்கு...

* சாமை - 1 கப்
* மோர் - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்

கார சட்னிக்கு ...

* நல்லெண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 30 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சாமையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நீரில் 2 முறை கழுவி, ஒரு வடிகட்டியில் போட்டு நீர் முழுமையாக வடிகட்டும் வரை விட வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த சாமையை எடுத்து, அத்துடன் 1 கப் மோர் சேர்த்து கலந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதே சமயம் 1/4 கப் பாசிப்பருப்பையும் நீரில் 2 முறை கழுவிவிட்டு, நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, 2 கப் நீரை ஊற்றி, துருவிய தேங்காயையும் சேர்த்து கிளறி, நன்கு கொதி வந்ததும், அதில் ஊற வைத்துள்ள சாமையை சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, நீர் வற்றி உப்புமா பதத்திற்கு வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும். முக்கியமாக அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* சாமை நன்கு வெந்து நீர் வற்றியதும், அதை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். சாமை நன்கு குளிர்ந்ததும், அதை நன்கு பிசைந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வேண்டிய வடிவத்தில் உருட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* பிறகு அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான சாமை கார கொழுக்கட்டை தயார்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வெங்காயத்தை நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்தால், சுவையான கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, May 30, 2026, 7:10 [IST]
Desktop Bottom Promotion