நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும

Posted By:

Nilgiri Veg Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரிக்கு எப்போதும் ஒரே மாதிரி உருளைக்குழங்கு குருமாவைதான் செய்வீர்களா? ஏதாவது புது சைடிஷை செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யும் குருமா சூப்பராவும், வித்தியாசமாவும் இருக்கணும்னு ஆசைப்படுறீங்களா? அப்படினா இந்த நீலகிரி ஸ்டைல் வெஜ் குருமாவை ஒருதடவை செஞ்சு பாருங்க.

Nilgiri Veg Kurma Recipe How to Make at Home in Tamil

இந்த நீலகிரி வெஜ் குருமா ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவானது. மலைப்பகுதிகளில் தாராளமாகக் கிடைத்த தரமான காய்கறிகளை வைத்து இந்த குருமா கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்டது. இந்த வெஜ் குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, இடியாப்பத்திற்கும் சூப்பர் காம்போவாக இருக்கும். இந்த குருமாவின் சுவையும் அட்டகாசமாக இருக்கும், செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும்.

உங்களுக்கு நீலகிரி வெஜ் குருமாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நீலகிரி வெஜ் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைக்க:

- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
- ¼ தேக்கரண்டி சோம்பு
- 5 கொத்து கொத்தமல்லி இலைகள்
- 5 கொத்து புதினா இலைகள்
- 5 பச்சை மிளகாய்
- ½ அங்குல இஞ்சித் துண்டு
- 5 பல் பூண்டு
- ½ கப் தண்ணீர்

வெள்ளை விழுது அரைக்க:

- 1 ஸ்பூன் வெள்ளை கசகசா
- 15 முந்திரிப் பருப்புகள்
- அரை கப் துருவிய தேங்காய்
- ½ கப் தண்ணீர்

பிற பொருட்கள்:

- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் நெய்
- ¼ ஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் உப்பு
- ½ கப் பச்சை பட்டாணி
- ½ கப் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு
- ¼ கப் நறுக்கிய கேரட்
- ¼ கப் நறுக்கிய பீன்ஸ்
- அரை கப் கெட்டித் தயிர்
- 1½ கப் தண்ணீர்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்

செய்முறை:

- முதலில் ஒரு மிக்சி ஜாரில் ஏலக்காய், சோம்பு, கிராம்பு, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

- கசகசா மற்றும் முந்திரியை அரை கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பின் ஊறிய கசகசா மற்றும் முந்திரியை, அதிலுள்ள தண்ணீருடனும் தேங்காயுடனும் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்துச் சூடாக்கவும். அதில் சோம்பு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

- பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் அரைத்த பச்சை நிற விழுதையும் உப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர் காய்கறிகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியை மூடி வைத்து, 10 நிமிடங்கள் மிதமான தீயில் காய்கறிகளை வேகவிடவும்.

- பின்னர் கெட்டியான தயிர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளறவும்.

- பின்னர் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். வெள்ளை விழுதை அரைக்கப் பயன்படுத்திய மிக்ஸி ஜாரை ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கழுவி, அந்தத் தண்ணீரையும் வாணலியில் சேர்க்கவும்.

- குருமா மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

- பாத்திரத்தை மூடி வைத்து, குருமாவை 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். நன்கு வாசனை வந்ததும் அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான நீலகிரி வெஜ் குருமா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, September 4, 2026, 17:44 [IST]
Desktop Bottom Promotion