Aadi Pooram 2023: ஆடிப்பூரம் எதனால் கொண்டாடப்படுகிறது? ஆடிப்பூரம் அன்று வீட்டில் என்ன செய்ய வேண்டும்?

Aadi Pooram 2023: ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். இந்த ஆடிப்பூரம் திருவிழா லட்சுமி தேவியின் அவதாரமான ஆண்டாள் தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

ஆடிப்பூரம் தமிழ் நாட்காட்டியின்படி ஆடி மாதத்தின் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் பிறப்பை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆடிப்பூரம் சக்தி தேவியின் நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நன்னாளில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ தங்கள் குல தெய்வத்தை வழிபடுகின்றனர்.

Aadi Pooram: Significance And How It Is Celebrated In Tamil

ஆடிப்பூரத்தின் முக்கியத்துவம்

ஆடி என்ற சொல் தமிழ் மாதத்தில் நான்காவது மாதத்தைக் குறிக்கிறது. இதில் பூரம் என்ற சொல் ஜோதிடத்தில் கூறப்பட்ட 27 நட்சத்திரங்களில் பூரம் நட்சத்திரத்தை குறிக்கிறது. ஆண்டாள் ஸ்ரீ விஷ்ணுவின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவள். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து விஷ்ணு கோயில்களிலும் ஆடிப்பூரம் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த நாளில் அம்மனின் வளைகாப்பும் நடைபெறுகிறது. அதனால் தான் ஆடிப்பூரம் அன்று அம்மனை வணங்குபவர்கள் குழந்தை பாக்கியத்தை பெறுகின்றனர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. அம்மனின் சந்ததியில் வளையங்களை வைத்து வணங்கி பிறகு பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த வளையல்களை அணிவதால் தம்பதிகள் புத்திர பாக்கியத்தை பெறுகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் இந்த வளையல்களை அணிவதால் அனைத்து தீய சக்திகளிடம் இருந்து வயிற்றில் வளரும் குழந்தையை காக்க உதவுகிறது.

ஆண்டாளின் கதை

ஆடிப்பூரம் ஆண்டாளின் கதையை எடுத்துக் கூறுகிறது. ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிறந்தவர். கோதா தேவி என்று அழைக்கப்படும் ஆண்டாள் குழந்தையாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள கோயில் தோட்டத்தில் தான் கண்டெடுக்கப்பட்டார். இவர் அந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகரான பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டார். அதனால் ஆண்டாள் சிறு வயதில் இருந்தே விஷ்ணுவின் பக்தராக வாழ்ந்தார்.

ஆண்டாள் தினமும் தான் பறித்த பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து அதை விஷ்ணுவிற்கு அணிவித்து தூய்மையான அன்புடனும் பக்தியுடனும் அவரை வணங்கி வந்தார். ஆண்டாள் தன்னை ரங்கநாதரின் மணமகளாகக் கருதி, அவனுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற ஏக்கத்தை "திருப்பாவை" மற்றும் "நாச்சியார் திருமொழி" என்று நூலில் தனது கவிதைகளாக வெளிப்படுத்தியதாக புராணம் கூறுகிறது.

ஆண்டாளின் கவிதைகள், மத உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்தவை. தலைமுறைகள் கடந்து லட்சக்கணக்கான பக்தர்களை அந்தக் கவிதைகள் ஊக்கப்படுத்துகின்றன. இப்படி ஆண்டாளின் பக்தியையும் அருளையும் பெறும் நோக்குடன் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆடிப்பூரம் நாளில் கோயில்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. கோயிலில் தெய்வங்கள் பல்லக்குகளில் எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்கள் மந்திரங்களை ஓதிய வண்ணம் வழிபடுவர்.

விஷ்ணுவுக்கு ஆண்டாள் திருமஞ்சனம் செய்வது திருவிழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். "ஆண்டாள் கல்யாணம்" என்று அழைக்கப்படும் தெய்வீக திருமண விழா நடைபெறும். தேவி மற்றும் இறைவனுக்கு இடையேயான புனிதமான சங்கமத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

ஆடிப்பூரம் அன்று வீட்டில் என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பூரம் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாகும். இதில் கடைசி நாள் அதாவது 10 ஆம் நாள் ஆடிப்பூரம் அனுசரிக்கப்பட்டு ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரங்கநாதசுவாமிக்கு பிரமாண்ட திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வைத் தான் திருக்கல்யாணம் என்று அழைக்கின்றனர்.

ஆடிப்பூரம் அன்று வீட்டில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து அழகான கோலத்தால் தங்கள் வீட்டை அலங்கரிப்பார்கள். ஆண்டாள் தேவிக்கு தாமரை மலர், சிவப்பு நிறம், கல்கண்டு மற்றும் அரிசி மிகவும் பிடிக்கும். தேவிக்கு பிடித்தமான பிரசாதங்கள் வீட்டில் சமைக்கப்படுகிறது.

கோயில்களில் ஆண்டாள் தேவியை அழகான பட்டுப் புடவையால் அலங்கரிப்பார்கள். பளபளக்கும் நகைகள், மலர்களால் அலங்கரித்து வணங்குவார்கள். இந்த ஆடிப் பூரத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வழிபடுவார்கள்.

இந்த நன்னாளில் அம்மனுக்கு இசையுடன் பல சிறப்பு சடங்குகள் செய்யப்படுகிறது. இரவு தீபாராதனைக்கு பிறகு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த நன்னாளில் பக்தர்கள் 'திருப்பாவை' மற்றும் 'லலிதா சஹஸ்ரநாமம்' ஓதுவார்கள். நிறைய பக்திப் பாடல்கள் படிப்பார்கள்.

ஆடிப் பூரத்தின் நன்மைகள்

* ஆடிப் பூரத்தன்று திருமணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் திருமண பாக்கியம் கை கூடும்.

* இந்த ஆடிப்பூரம் நாளில் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதைப் போல அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதால் குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் அம்மனை வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* உங்களால் முடிந்தால் மற்ற பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வளையல்கள் போன்றவற்றை அவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். இதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நடக்க அம்மன் உறுதுணையாக இருப்பார். இப்படி செய்வது உங்கள் இல்லறம் சிறக்க உதவும்.

எனவே மனம் போல மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஆடிப்பூரம் அன்று அம்மனை வழிபட்டு வாருங்கள். பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு வளையல்கள் வாங்கி காணிக்கையாக்குங்கள்.

Desktop Bottom Promotion