90 சதவீத ஆண்கள் செய்யும் சுகாதார தவறுகள்.. நீங்களும் இந்த தவறை பண்றீங்களான்னு பாருங்க..

Worst Hygiene Mistakes: மனிதனுக்கு தனிப்பட்ட சுகாதாரம் மிகவும் இன்றியமையாதது. ஒருவர் நன்கு சுத்தமாகவும், அழகாகவும் இருந்தால், அது அவரை மற்றவர்களிடம் சிறப்பாக வெளிக்காட்டுவதோடு, ஒரு நற்பெயரையும் வாங்கித் தரும். முக்கியமாக சுத்தமாக இருந்தால், நோய்களின் தாக்குதல்களைத் தடுக்கலாம்.

சுத்தம் என்று வரும் போது, அதில் பெண்களை விட ஆண்கள் சற்று குறைவாகவே உள்ளனர். சொல்லப்போனால் பெரும்பாலான ஆண்கள் சுத்தமாக இருப்பதில்லை என்றே கூறலாம்.சுத்தம் என்பது கைகளைக் கழுவி விட்டு சாப்பிடுவது மட்டுமல்ல, நமது உடலுறுப்புக்களை சுத்தமாக வைத்துக் கொள்வதும் அடங்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால், தனிமனித சுகாதாரம் மிகவும் முக்கியம்.

Worst Hygiene Mistakes Most Men Make In Tamil

நிறைய ஆண்களுக்கு தாங்கள் செய்யும் சுகாதார தவறுகள் என்னவென்று தெரிவதில்லை. எனவே கீழே பெரும்பாலான ஆண்கள் செய்யும் சுகாதார தவறுகளையும், அவற்றை எப்படி சரிசெய்வது என்பது குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உங்களிடம் இருந்தால் சரிசெய்து கொள்ளுங்கள்.

அந்தரங்க பகுதியை சரியாக கழுவாமல் இருப்பது

அந்தரங்க பகுதிகளில் வெறும் நீரை மட்டும் ஊற்றினால், அப்பகுதி சுத்தமாகிவிடாது. மைல்டு மாய்ஸ்சுரைசிங் சோப்பை கைகளில் தேய்த்து, நன்கு நுரை வந்த பின், அதை நுரையைக் கொண்டு அந்தரங்க பகுதியை தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள், அழுக்குகள் முழுவதுமாக நீக்கப்படும். அதே சமயம் அளவுக்கு அதிகமாக அந்தரங்க பகுதியில் சோப்பை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உள்ளாடையுடன் தூங்குவது

இரவு தூங்கும் போது உள்ளாடையை அணிந்து கொண்டு தூங்கினால், அந்தரங்க பகுதியில் அந்த ஆடையானது உராய்வை ஏற்படுத்தி, வியர்வையை உண்டாக்கும். அந்தரங்க பகுதியில் அதிகமாக வியர்த்தால், அதன் விளைவாக அப்பகுதியில் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்ச்சி அடைந்து, தொற்றுக்களை ஏற்படுத்திவிடும். இதைத் தவிர்க்க இரவு நேரத்தில் உள்ளாடை அணியாமல் தூங்க வேண்டும். இதனால் அந்தரங்க பகுதியானது நல்ல காற்றோட்டத்தால் ஈரப்பதமின்றி இருக்கும் மற்றும் தொற்றுநோய்களின் அபாயமும் தடுக்கப்படும்.

அந்தரங்க பகுதியில் ஷேவ் செய்வது

அந்தரங்க பகுதியில் முடி புதர் போன்று இருந்தால், அதிகம் வியர்ப்பதோடு, அங்கு அழுக்குகளும், எண்ணெயும் அதிகம் சேர்த்து தொற்றுக்களின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் அந்தரங்க பகுதியில் வளரும் முடிகளை நீக்க ஷேவ் செய்தால், ரேசரின் கூர்மையான பகுதியால் காயங்களும், அரிப்புக்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை நீக்க சிறந்த வழி ட்ரிம் செய்வது தான். எனவே அதற்காக தனி ட்ரிம்மர் வாங்கி பயன்படுத்துங்கள்.

பெட்சீட்டுக்களை நீண்ட நாட்கள் துவைக்காமல் பயன்படுத்துவது

பெரும்பாலான ஆண்கள் தாங்கள் பயன்படுத்தும் பெட்சீட்டுக்களை மாதக்கணக்கில் துவைக்காமல் பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் சோம்பேறித்தனம் தான். இப்படி துவைக்காமல் ஒரு பெட்சீட்டை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால், வியர்வையை உறிஞ்சிய அந்த பெட்சீட்டில் தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்திருப்பதோடு, சில சமயங்களில் அதுவே சரும தொற்றுக்களையும் ஏற்படுத்தும்.

எனவே நாம் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது, நாம் பயன்படுத்தும் பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு வாரம் ஒருமுறை தவறாமல் பெட்சீட்டுக்களை துவைத்து வெயிலில் காயப் போட்டு எடுக்க வேண்டும்.

நாக்கை சுத்தம் செய்யாமல் இருப்பது

வாய் துர்நாற்றம் வாழ்க்கைத் துணையுடனான நெருக்கத்தைக் குறைக்கும். ஒருவரது வாய் துர்நாற்றம் வீசுவதற்கு தினமும் நாக்கை சுத்தம் செய்யாமல் இருப்பதும் ஓர் முக்கிய காரணம். பொதுவாக பெண்கள் தங்கள் மீது துர்நாற்றம் வீச விரும்பமாட்டார்கள். இதனால் நல்ல மணத்துடன் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் சற்றும் சோம்பேறித்தனப்படாமல் செய்வார்கள்.

ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. சில ஆண்கள் பற்களைத் துலக்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். எனவே ஆண்களே உங்கள் வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், தினமும் பற்களுடன் நாக்கையும் சுத்தம் செய்வதோடு, நீர் அதிகம் குடிக்க வேண்டும், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும், காபி, டீ, ஆல்கஹால் போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி தலைக்கு குளிப்பது

ஆண்களின் தலைமுடி சிறியது என்பதால் பெரும்பாலான ஆண்கள் தினமும் தலைக்கு குளிப்பார்கள். ஆனால் இப்படி தினமும் தலைக்கு குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் பசை நீக்கப்படுவதோடுடு, முடியில் உள்ள இயற்கை எண்ணெயும் நீங்கி, தலைமுடி வறண்டு, ஆரோக்கியமின்றி காணப்படும். எனவே தினமும் தலைக்கு குளிப்பதைத் தவிர்த்து, வாரத்திற்கு 2-3 முறை குளியுங்கள் போதும்.

எனவே ஆண்களே மேலே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை நீங்களும் செய்து வந்தால், இனிமேல் அவற்றை தவிர்த்து, ஆரோக்கியமான பழக்கத்தை அறிந்து, அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்து, நீங்களும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் சுற்றுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion