பணிபுரிபவரின் மனநலத்தை யோகா, தியானத்தால் மேம்படுத்த முடியுமா? டாக்டர். சுனில் என்ன சொல்றாரு பாருங்க..

World Mental Health Day 2024: நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டும் அளவிற்கு மக்கள் தங்கள் மனநலத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஒருவரது மனநலம் மோசமாக இருந்தால், அதன் தாக்கம் உடல்நலத்தில் நன்கு தெரியும்.

தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன், பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால், பலரின் உடல் நலத்துடன், மனநலமும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதுவும் பணியிடத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்கும் பலருக்கு அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள். இப்படியான வழக்குகளை சமீப காலமாக அதிகம் காண முடிகிறது.

World Mental Health Day Exclusive Interview With Psychologist Dr Sunil Kumar About Mental Health In Workplace

இன்று உலக மனநல தினம். இந்நாளில் மனித நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பல நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் திட்டமிடப்படும். இந்த ஆண்டிற்கான உலக மனநல தினத்தின் கருபொருள் "பணியிடத்தில் மனநலம்". அதாவது வேலை செய்யும் இடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதாகும்.

இந்த உலக மனநல தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டின் கருபொருளான 'பணியிடத்தில் மனநலம்' குறித்து உளவியலாளர் டாக்டர். சுனில் குமார் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, "இந்த ஆண்டிற்கான கருபொருளான 'பணியிடத்தில் மனநலம்' ஏற்கனவே 2017 ஆம் ஆண்டே கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது உலக சுகாதார அமைப்பும், உலக வர்த்தக மையமும் சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தியது. அதில் மனநலம் சார்ந்த பிரச்சனையால் உலகளவில் சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்தது. அதே ஆய்வில் 2030-க்குள் மனநல பிரச்சனையால் 16 ட்ரில்லியன் டாலர் அளவில் உலக பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். அதேப் போல் உலக வர்த்தக மையமும், உலக மனநல கூட்டமைப்பும் நடத்திய ஆய்வில், ஒரு கம்பெனி அதன் ஊழியருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு 1 டாலரை செலவழித்தால், அந்த ஊழியர் மூலம் 4 டாலர் திரும்ப கிடைக்கும் என தெரிய வந்தது.

இன்று வேலை செய்வோர் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பலவிதமான கேள்விகளுடன் வேலை செய்து வருகிறார்கள். அதில் வேலை பாதுகாப்பு, ஊதிய உயர்வு, உரிமைகளை கேட்க முடியாமல் இருப்பது, பணி நிரந்தரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மனதில் இவ்வளவு கேள்விகளுடன் பணிபுரியும் ஒருவரின் மனநலத்தை மேம்படுத்த, பாதுகாக்க, வெறும் தியானம், யோகா மற்றும் பிற மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை பின்பற்றினால் முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.

பணிபுரிபவர்களின் மனநலத்தை மேம்படுத்த முதலாளிகளில் பக்கத்தில் இருந்து தொழிலாளிக்கு மனநலத்தை மேம்படுத்தும் டிப்ஸ்களையும், வழிகளையும் கொடுப்பது தான் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரின் வேலை என்று நீங்கள் நினைத்தால், அது நிஜமல்ல. தொழிலாளிகளின் பக்கத்தில் இருந்து அவர்களின் மனதை மேம்படுத்தும் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு சரிசெய்ய ஒருவித அரசியல் ரீதியான முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.

எனவே பணியிடத்தில் மனநலம் என்பது ஒரு அரசியல் ரீதியான தீர்வை நோக்கி நகரும் போது மட்டுமே ஏற்படும். ஒரே நாளில் யோகா சொல்லித் தருவதாலோ, மனதை மேம்படுத்தும் உடற்பயிற்சி செய்வதாலோ, ஊக்கமூட்டும் பேச்சுக்களை கொடுப்பதாலோ, தொழிலாளிகளின் மனநலத்தை மேம்படுத்த முடியும் என்று நான் நம்பவில்லை. பணியிடத்தில் மனநலத்தை மேம்படுத்த வேண்டுமானால் அடிப்படை உரிமைகள், சமத்துவம், மனித உரிமைகள் காக்கப்படணும், பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களின் கூட்டு கலவை தான் மனநலம்" என்று கூறினார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion