பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய.. பெண்களை அதிகம் தாக்கும் 5 நோய்கள்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பெண்களை அதிகம் தாக்கும் நாள்பட்ட நோய்கள் குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

International Womens Day 2023: பொதுவாக வயது அதிகரிக்கும் போது, நோய்களின் அபாயமும் அதிகம் இருக்கும். குறிப்பாக பெண்கள் 30-40 வயதை தாண்டிவிட்டால், அவர்களின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரத் தொடங்கும். குடும்பம் மற்றும் குழந்தைகளின் மீது அதிக அக்கறை காட்டும் பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த தவறுகிறார்கள். இதனால் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக தங்களை அறியாமலேயே பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட நோய்களின் அபாயத்திற்கு அதிகம் ஆளாகிறார்கள்.

International Womens Day 2023: Five Chronic Diseases Women Should Be Aware Of In Tamil

பெண்களுக்கு ஏற்படும் நாள்பட்ட நோய்களானது மாதவிடாய் சுழற்சி முதல் கர்ப்பம், இறுதி மாதவிடாய் போன்ற பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டிருக்கக்கூடும். ஏனெனில் பெண்கள் இந்த ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும் உடலின் ஹார்மோன்களில் பல்வேறு மாற்றங்களை காண்கிறார்கள். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களானது, உடலில் பல நோய்கள் வருவதற்கு காரணங்களாக உள்ளன.

ஒரு வீட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், அந்த வீடு ஆரோக்கியமாக இருக்கும். எனவே சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பெண்களை அதிகம் தாக்கும் நாள்பட்ட நோய்கள் குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தைராய்டு

1. தைராய்டு

தைராய்டு, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். இந்த தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்களானது, உடலின் மெட்டபாலிசத்தை கட்டுப்படுத்துவதோடு, பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பராமரிக்கிறது. எப்போது தைராய்டு சுரப்பியால் சரியான அளவில் தைராய்டு ஹார்மோன்களை சுரக்க முடியவில்லையோ, அப்போது தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த தைராய்டு பிரச்சனையால் ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதோடு, கருத்தரிக்கும் வாய்ப்பும் பாதிக்கப்படும் மற்றும் விரைவிலேயே இறுதி மாதவிடாயை சந்திக்க நேரிடும். ஆய்வுகள் கூட, தைராய்டு பிரச்சனையால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றன.

பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்சனைகள்

* ஹைப்போ தைராய்டு

* ஹைப்பர் தைராய்டு

* தைராய்டிடிஸ்

* தைராய்டு புற்றுநோய்

அறிகுறிகள்

* பலவீனம்

* மனநிலை மாற்றங்கள்

* எடை இழப்பு அல்லது உடல் பருமன்

* மாதவிடாய் சுழற்சி பிரச்சனைகள்

* தூங்குவதில் சிரமம்

* அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக வியர்ப்பது

சிகிச்சைகள்

தைராய்டு பிரச்சனையை சந்திப்பவர்கள் மருந்து மாத்திரைகளின் மூலம் பிரச்சனைகளை நிர்வகிக்கலாம். சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். இருப்பினும், மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் பெண்கள் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகி, அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

2. ஆஸ்டியோபோரோசிஸ்

2. ஆஸ்டியோபோரோசிஸ்

ஆண்களை விட பெண்கள் தான் எலும்பு தொடர்பான நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக வயது அதிகரிக்கும் போது எலும்புகள் அதன் அடர்த்தி/வலிமையை இழக்கும் மற்றும் எலும்புகளால் புதிய எலும்புகளை உருவாக்க முடியாமல் போகும். இந்நிலையில் தான் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு நோய் ஏற்படுகிறது. இந்த எலும்பு நோயில் எலும்புகள் வேகமாக உடையக்கூடும் மற்றும் எலும்புகளானது மிகவும் பலவீனமாக இருக்கும்.

காரணங்கள்

* ஈஸ்ட்ரோஜென் குறைபாடு

* உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் போவது

* உடலில் கால்சியம் அல்லது வைட்டமின் டி குறைவாக இருப்பது

ஆபத்து காரணிகள்

* மரபணுக்கள்

* தைராய்டு வரலாறு

* கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு

* எலும்பு உருவாக்கத்தில் இடையூறை ஏற்படும் மருந்துகளை உட்கொள்வது

* அதிகப்படியான மது அல்லது புகைப் பழக்கம்

* உடலுழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை

அறிகுறிகள்

* முதுகு வலி

* எலும்புகள் எளிதில் உடைவது

* குனிந்த தோரணை

3. மார்பக புற்றுநோய்

3. மார்பக புற்றுநோய்

பெண்களின் மார்பகங்களானது மூன்று பகுதிகளால் ஆனது. அவை லோபுல்கள், குழாய்கள் மற்றும் இணைப்புத் திசு. இதில் லோபுல்கள் பாலை உற்பத்தி செய்யும், குழாய்கள் பாலை முலைக்காம்புகளுக்கு கொண்டு செல்லும் மற்றும் இணைப்புத் திசுக்கள் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கும். பெரும்பாலான மார்பக புற்றுநோய்களானது லோபுல்கள் அல்லது குழாய்களில் தான் தொடங்குகின்றன. மார்பகங்களில் வளரும் புற்றுநோய் செல்கள் கட்டுப்பாட்டின்றி வளரும் போது நிலைமை மோசமாகும். எனவே ஆரம்பத்திலேயே கண்டறிய முயல வேண்டும்.

ஆபத்து காரணிகள்

* மரபணு

* உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை

* ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை வரலாறு

* அதிகப்படியான மது அருந்துவது

அறிகுறிகள்

* மார்பக பகுதிகளில் சிறிய அல்லது பெரிய கட்டிகள் இருப்பது

* மார்பகங்களின் அளவு அல்லது சருமத்தில் மாற்றம் தெரிவது

* மார்பக காம்புகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது

* மார்பகங்களைச் சுற்றி வலி அல்லது வீக்கம் இருப்பது

சிகிச்சைகள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்ய வேண்டும். மார்பக புற்றுநோயை கண்டறிய மருத்துவர் பயோப்சி அல்லது இமேஜிங் சோதனையை செய்ய பரிந்துரைப்பார். பதட்டப்படாமல் அமைதியாக இருந்து சிகிச்சையை மேற்கொண்டு வந்தால், மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்துவிடலாம்.

4. இதய நோய்

4. இதய நோய்

ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயம் அதிகம் உள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி மக்கள் இதய நோயால் இறக்கிறார்கள். அதில் 16.9 சதவீத பெண்கள் இதய நோயால் இறக்கிறார்கள். இதய நோயின் இறப்புகள் அதிகரித்து வருவதால், பெண்களும் அதன் அறிகுறிகளை அறிந்து, அவை ஏற்படுவதைத் தடுக்கும் செயல்களில் உடனே ஈடுபட வேண்டும்.

ஆபத்து காரணிகள்

* மரபணு

* உடல் பருமன்

* அதிகப்படியான புகை அல்லது மது

* சர்க்கரை நோய்

* ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

அறிகுறிகள்

* நெஞ்சு வலி அல்லது மார்பு பகுதியில் அசௌகரியம், தாடையில் வலி

* சோர்வு

* வாந்தி

* குமட்டல்

சிகிச்சைகள்:

இதய நோயின் அறிகுறிகளை கொண்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதுவும் ஏற்கனவே இதய நோயைக் கொண்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களை சந்தித்தால், உடனே இதய மருத்துவரை அணுக வேண்டும். மொத்தத்தில் இதய நோய் வரக்கூடாதெனில், இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும்.

5. ஆட்டோஇம்யூன் நோய்கள்

5. ஆட்டோஇம்யூன் நோய்கள்

மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலம் தான், வைரஸ், பாக்டீரியா போன்ற உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன. ஆனால் ஆட்டோஇம்யூன் நோய்களைக் கொண்டவர்களின் உடலில் உள்ள நோயெதிர்ப்ப மண்டலமானது, உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை தாக்க ஆரம்பித்து, அதன் விளைவாக சில தீவிர நோய்களை ஏற்படுத்தும். உலகளவில் சுமார் 78% பெண்கள் ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்டோஇம்யூன் நோய் வகைகள்

* சர்க்கரை நோய்

* குடல் அழற்சி நோய் (IBD)

* ஸ்க்லரோசிஸ்

* சொரியாசிஸ்

* விட்டிலிகோ

* ஆட்டோஇம்யூன் ஹெபடைடிஸ்

ஆபத்து காரணிகள்

* மரபணு

* உடல் பருமன்

* அதிகப்படியான மது அல்லது புகைப்பழக்கம்

* ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை

* நோய்த்தடுப்பு மருந்துகள்

அறிகுறிகள்

* மிகுந்த உடல் சோர்வு

* கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் இருப்பது

* தசை மற்றும் அடிவயிற்று வலி, மூட்டு பிடிப்புகள்

* மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு

* அசாதாரண மாதவிடாய் சுழற்சி

* கணிசமான எடை இழப்பு

* அல்சர்

முடிவு

முடிவு

பெண்களுக்கு நாள்பட்ட நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. உங்கள் குடும்பத்தை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால், முதலில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உடலைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் சில பிரச்சனைகள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை விட சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion