10 வருடத்திற்கு பின் உங்களுக்கு மாரடைப்பு வருமா என்பதை கணித்து கூறும் புதிய AI கருவி பற்றி தெரியுமா?

New AI Tool Can Predict Heart Attack Risk: உலகளவில் நாளுக்கு நாள் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 25 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் சமீப காலமாக மாரடைப்பால் இறந்து வருகிறார்கள். இப்படி மாரடைப்பு வழக்குகள் அதிகரித்து வருவதால், பலருக்கும் மனதில் பயத்துடன் கவலையும் அதிகமாக இருக்கும். மேலும் மாரடைப்பானது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்பதால், யாருக்கு எப்போது வரும் என்பதை சரியாக கூற முடியாது.

இப்படி மாரடைப்பை கணிக்க முடியாததால், இதுக்குறித்த பயம் மக்களிடையே அதிகமாக உள்ளது. ஆனால் தற்போதைய நவீன உலகில் பல புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கருவி மூலம் ஒருவருக்கு எதிர்காலத்தில் மாரடைப்பு வரும் அபாயத்தை கண்டறிய முடியும் என்பது தான். என்ன ஆச்சரியமாக உள்ளதா? இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

Study Finds A New AI Tool Can Predict Heart Attack Risk After 10 years

மாரடைப்பை கண்டறியும் AI கருவி

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவியின் முதல் உலகளாவிய சோதனை குறித்து சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 40,000 பேர் கலந்து கொண்டனர். அதில் இந்த AI கருவியின் மூலம் ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் மாரடைப்பு வருவதற்கான அபாயம் உள்ளதா என்பதை கணித்து கூற முடியும். அதோடு இந்த கருவியின் மூலம் மார்பு வலி உள்ள நோயாளிகளை சுமார் 45 சதவீதம் வரை சிகிச்சை மூலம் மேம்படுத்த முடியும் என இங்கிலாந்தின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆய்வு எப்படி மேற்கொள்ளப்பட்டது

இந்த சோதனைக்காக இங்கிலாந்தில் உள்ள 8 மருத்துவமனைகளில் CT ஸ்கேன் செய்த 40,000 நோயாளிகளின் தரவுகளை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். அதில் தமனிகளில் அடைப்பு மற்றும் வீக்கம் குறைவாக இருப்பவர்களை விட தமனிகளில் வீக்கத்தைக் கொண்ட நோயாளிகளுக்கு மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கான அபாயம் 10 மடங்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

புதிய சூத்திரம்

இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட AI கருவியில் மாரடைப்பின் அபாயத்தை துல்லியமாக கண்டறியும் படி சூத்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த சூத்திரத்திற்கு கோட்-ACS சூத்திரம் என்று பெயரிடப்பட்டது. அது என்ன சூத்திரம் என்றால், தமனி அழற்சி வடிவங்கள், அடைப்பு தீவிரம் மற்றும் பிற மருத்துவ ஆபத்து காரணிகள் ஆகியவற்றை சோதனை செய்யும்படியான சூத்திரமாகும். இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி AI கருவியை உருவாக்கியிருப்பதால், இது எதிர்கால மாரடைப்பு நிகழ்வுகள் மற்றும் மரணத்தை சுயாதீனமாக கணிக்க முடியும்.

தற்போதைய சோதனை முறைகளுடன் ஒப்பிடும் போது இந்த கோட்-ACS சூத்திரம் கொண்ட AI சோதனையானது 99.6 சதவீதம் துல்லியமாக மாரடைப்பின் அபாயத்தைக் கண்டறியும் திறன் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

எளிமையாக அனைவருக்கும் புரிபும் படி கூற வேண்டுமானால், இந்த AI கருவியைக் கொண்டு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுமா இல்லையா என்பதை முன்கூட்டியே கணிக்க முடிவதோடு, மாரடைப்பால் ஏற்படும் இறப்பைத் தடுக்க முடியும். மேலும் மாரடைப்பு வழக்கால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும்.

அனைத்து துறைகளிலும் கால் பதிக்கும் AI

AI-இன் பயன்பாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமின்றி, தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் AI நமது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முக்கியமாக இந்த AI எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் நிச்சயம் பெரிதும் உதவியாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, November 29, 2023, 15:00 [IST]
Desktop Bottom Promotion