மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? கூடாதா? - உண்மை என்ன?

Menstrual Hygiene Day 2023: பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்த மாதவிடாய் சுகாதார தினம் மே 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்த பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன.

குறிப்பாக மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி தவறான கருத்துக்கள் மக்களிடையே உள்ளன. இதற்கு முக்கிய காரணம் இதுக்குறித்த உரையாடல்கள் மற்றும் அது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான்.

Menstrual Hygiene Day 2023: Is It Safe To Have Intercourse During Periods In Tamil

சரி, மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா? மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்புள்ளதா? மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடலாமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் இருக்கும். ஆனால் இதுக்குறித்து பேச யாருமே தயாராக இல்லை. இப்போது மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி மனதில் உள்ள பல கேள்விகளுக்கான விடையைக் காண்போம்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா?

பலரும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக, மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் சௌகரியமாக உணரும் வரை, மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாம்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் பெறும் நன்மைகள்

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பின்வரும் நன்மைகள் கிடைக்கும். அவையாவன:

* மாதவிடாய் கால வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது ஆக்சிடாக்சின் என்னும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியிடப்பட்டு, மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, மன அழுத்தம் குறைந்து, மனம் நன்கு சந்தோஷமாக இருக்கும்.
* இரத்தப்போக்கு ஏற்படும் நாட்கள் குறையும்.
* நல்ல தூக்கம் கிடைக்கும்.
* தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்.
* பாலுணர்ச்சி அதிகரிக்கும்.
* யோனியில் ஏற்படும் வறட்சி தடுக்கப்படும்.
* உடல் ஃபிட்டாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் எம்மாதிரியான தொற்று ஏற்படும்?

பொதுவாக பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்டால், அது இரண்டு வகையான தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளன. அவை பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் யோனியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களால் சந்திக்கும் பிரச்சனைகளான ஈஸ்ட் தொற்றுகள், பாக்டிரியல் வஜினோசிஸ் போன்றவை. இவற்றில் ஈஸ்ட் தொற்றுகள் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடாமலேயே ஏற்படலாம் என்றாலும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், அது ஆண்களுக்கும் ஈஸ்ட் தொற்றுக்களை ஏற்படுத்தி, ஆண்களின் ஆண்குறி தலையில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இது பாலனிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது தவிர, மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளும் போது, பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளதால், இந்த சமயத்தில் உடலுறவில் ஈடுபடும் போது காண்டம் பயன்படுத்துவது நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைத்து, நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்புள்ளதா?

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இந்த நாட்களானது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். அதில் சிலருக்கு 26-32 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். ஒரு மாதவிடாய் சுழற்சியானது மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி, அடுத்த சுழற்சியின் முந்தைய நாள் வரை ஆகும். மாதவிடாய் சுழற்சியின் மிகவும் வளமான நாட்கள் (Ovulation Days) 8 முதல் 19 நாட்கள் ஆகும்.

இந்த ஓவுலேசன் நாட்களில் கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறி, கருவுறுதல் நிகழும் ஃபாலோபியன் குழாய் வழியாக பயணிக்கும். இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது விந்தணுக்கள் கருமுட்டையுடன் எளிதில் இணைந்து கருவுற நேரிடும். எனவே கருவுற நினைப்பவர்கள் இந்த நாட்களில் உடலுறவில் ஈடுபட்டால், விரைவில் கருத்தரிக்கலாம்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவே தவிர, கருத்தரிக்க முடியாது என்பதில்லை. ஏனெனில் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது குறுகிய நாட்களை கொண்டிருக்கும். இத்தகையவர்களுக்கு ஓவுலேசன் நாட்களானது எதிர்பார்ப்பதை விட முன்னதாக இருக்கலாம். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.

பாதுகாப்பான உடலுறவின் முக்கியத்துவம்

பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைத் தடுக்கும் சிறந்த வழிகளுள் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் பரவுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை அறிகுறியற்றவையாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 37.4 கோடி புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட வேண்டும். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நல்ல பாதுகாப்பைத் தருவது காண்டம். எனவே மாதவிடாய் காலங்களில் உடலுறவில் ஈடுபட விரும்பினால், காண்டமை பயன்படுத்தி ஈடுபடுங்கள். இதனால் நோய்த்தொற்றுக்களின் அபாயமும் குறையும், பாலியல் ஆசையும் நிறைவேறும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, May 27, 2023, 16:40 [IST]
Desktop Bottom Promotion