தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் இந்திய-அமெரிக்க டாக்டர்!

Guava Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கை நமக்கு ஏராளமான உணவுகளை அளித்துள்ளது. அவற்றில் ஒன்று தான் பழங்கள். இந்த பழங்களில் பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் விலைக்குறைவில் கிடைக்கும் ஒரு அற்புதமான மற்றும் சுவையான பழம் தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழம் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது.

சொல்லப்போனால் ஆப்பிளை விட கொய்யாப்பழத்தில் தான் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்துக்களும் அதிகமாக உள்ளன. அதுவும் ஒரு கொய்யாப்பழமானது 4 ஆரஞ்சு மற்றும் 10 எலுமிச்சைக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சொல்லப்போனால், இந்த பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம்.

Indian-American Gastroenterologist List Four Reasons Why You Should Take Guava Everyday

இந்திய அமெரிக்க இரைப்பைக்குடல் நிபுணரான டாக்டர். பால் மாணிக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 4 முக்கிய காரணங்களைப் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. கொலஸ்ட்ரால் குறையும்

"கொய்யாப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்" என்று டாக்டர் பால் கூறினார். மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சோடியத்தின் அளவை சமநிலையில் பராமரித்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

2. மலச்சிக்கல் நீங்கும்

கொய்யாப்பழத்தில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலத்தை இளகச் செய்து, மலச்சிக்கலில் இருந்து எளிதில் விடுவிக்கும் என்று டாக்டர் கூறினார். தற்போது நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வை தேடிக் கொண்டிருந்தால், கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.

3. சர்க்கரை நோய்க்கு நல்லது

கொய்யாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. ப்ரீ டயாபெட்டிக் உள்ளவர்கள் இதை உட்கொண்டால், அது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் என்று டாக்டர் கூறினார். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் மிகவும் நல்லது.

4. எடை குறையும்

கொய்யாப்பழம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் என்று டாக்டர் பால் கூறினார். ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், உங்கள் தினசரி உணவில் கொய்யாப்பழத்தை சேர்த்து வாருங்கள்.

எந்த நிற கொய்யாப்பழம் நல்லது?

கொய்யாப்பழத்தில் இரண்டு வகைகள் உள்ளளன. அவை பிங்க் நிற கொய்யாப்பழம் மற்றும் வெள்ளை நிற கொய்யாப்பழம். "இரத்த சோகை உள்ளவர்கள் பிங்க் கொய்யாப்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி புரிந்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் ப்ரீ டயாபெடிக் உள்ளவர்கள் வெள்ளை கொய்யாப்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரை சற்று குறைவு" என்று டாக்டர் பால் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, January 6, 2026, 12:54 [IST]
Desktop Bottom Promotion