Exclusive: மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.. விளக்குகிறார் உணவியல் நிபுணர் நிவேதா

வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, பருவமழை பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக, பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். இதனால், டெங்கு, டைபாய்டு, காய்ச்சல் தொற்று, சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், மழைக்காலத்தில் உடலுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. ஒரு சிறிய கவனக்குறைவு உடலை தொற்றுநோய்க்கு ஆளாக்கும்.

செரிமான பிரச்சனைகள் மற்றும் அழற்சி போன்றவை ஏற்படக்கூடும். இவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து கலர்ஸ் ஹேல்த் கேரில் உணவியல் நிபுணராக பணிபுரியும் டயட்டீஷியன் ஆர். நிவேதாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.. அதற்கு அவர் அளித்த பதில்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

eat these foods and nutrition During Monsoons stay healthy explains Dietitian Nivetha

1. மழைக்காலத்தில் உடலைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ”முதலில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் அவசியம். அதிலும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியம். கட்டாயம் வெளியில் சாப்பிடுவதையும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ஜீரணிப்பதில் சிரமம் இருக்கலாம். இந்த பருவத்தில் உணவு விரைவில் பாக்டீரியாவால் மாசுபடும். இந்நிலையில், புதிய மற்றும் சூடான உணவை மட்டுமே சாப்பிடுங்கள்” என்றார்...

2. மழைக்காலத்தில் எதை சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர்,” உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மழைக்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம் மற்றும் வெள்ளரிகள், பாகற்காய், ப்ளாக்பெர்ரி, பீச், பப்பாளி, பிளம்ஸ் மற்றும் சுரைக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்” என்றார்.

3. மழைகாலத்தில் அசைவ உணவுகளை சாப்பிடலாம? என்ற கேள்விக்கு பதிலளித்த உணவியல் நிபுணர்,” அதிகமான கொழுப்பு உள்ள அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.. குறிப்பாக மட்டன் மற்றும் சிவப்பு இறைச்சிகளையும் தோலுடன் இருக்கும் கோழிகளையும் எடுப்பதை விட மீன்களை எடுத்துக் கொள்ளலாம். காரணம் கடல் உணவில்தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நோயெதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன. பருவமழையில், உணவு மற்றும் நீர் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் போது, ​​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன், இறால், சிப்பிகள், கொட்டைகள் மற்றும் வால்நட்ஸ், பிஸ்தா, சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற எண்ணெய் வித்துக்களில் உள்ளன. ஆனாலும் மீன்களையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. காரணம் இந்த பருவத்தில் கடல் உணவுகளை உட்கொள்வது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

4. மஞ்சள் பால் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ”கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மழைக்காலத்தில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது நல்லது. மஞ்சளில் குர்குமின் அதிகமாக உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற, நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இரைப்பை புண்களைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது மற்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு செயல்பாடுகளில் மலேரியாவுக்கு எதிராக செயல்படுகிறது.. ஒரு டீஸ்பூன் மஞ்சளை பால், தேனுடன் அல்லது வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது” என்று கூறினார் உணவியல் நிபுணர் நிவேதா...

5. உடற்பயிற்சி அல்லது நடப்பயிற்சி செய்யலாம? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,” கண்டிப்பாக செய்ய வேண்டும். மழை காரணமாக சில சமயம் உடற்பயிற்சி செய்ய வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்படும். நடைப்பயிற்சியும் செய்ய முடியாது. ஆனால் வீட்டில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் உடல் எடை குறைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும். அதனால் அவ்வளவு சீக்கிரமாக மழைக்கால தொற்றுகள உங்கள் உடலை தாக்காது” என்றார் உணவியல் நிபுணர் ஆர். நிவேதா..

6. அதனைத் தொடர்ந்து பேசியவர், இஞ்சி மற்றும் பூண்டின் முக்கியதுவத்தை பற்றிக் கூறினார்... இஞ்சி மற்றும் பூண்டு குளிர் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவுகிறது, நெஞ்செரிசலை நீக்குகிறது மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அவை அழற்சி எதிர்ப்பு, ஆண்டிபயாடிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளையும் கொண்டுள்ளன. இஞ்சி டீ தொண்டை வலியைக் குறைக்க உதவும். 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அரைத்த இஞ்சி அல்லது அதன் சாறை தேனில் சேர்க்கலாம். இதை சூப்களில் அல்லது வயதானவர்களுக்கு தேநீரில் சேர்க்கலாம். பூண்டு ஆண்டிமைக்ரோபியல் அல்லது பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு பொருளாகும். கிரேவி, சட்னி, சூப், டீ போன்றவற்றில் இதை சேர்க்கலாம்” என்று கூறினார்.

7. மேலும் புரதங்களை உணவில் சேர்த்துக் கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், உங்கள் உணவில் ஆரோக்கியமான புரதங்களைச் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நோயிலிருந்து மீள அது மிகவும் உதவுகிறது. பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு வகைகள், ராஜ்மா, சோயா, முட்டை மற்றும் கோழி ஆகியவை ஆரோக்கியமான புரதங்களின் நல்ல ஆதாரங்கள். அதனால் இவற்றயெல்லாம் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திறகு நல்லது” என்றார்.

8. மழைகாலத்தில் சாப்பிடக்கூடாதவைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், நீர் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும், தெரு உணவுகளை தவிர்க்கவும், இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள் மற்றும் உணவு நச்சுத்தன்மையைத் தவிர்க்க, தெரு உணவைத் தவிர்ப்பது மற்றும் அதற்குப் பதிலாக வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவது நல்லது. காரமான உணவைத் தவிர்க்கவும், வறுத்த உணவுகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

காரணம் வறுத்த உணவுகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான மழைக்கால உணவைப் பராமரிக்க இந்த உணவுகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். அத்துடன் அதிகமான உப்பை தவிர்க்கவும், அதிகப்படியான உப்பு நீர் தேக்கம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகளை மோசமாக்கும். மழைக்கால உணவின் ஒரு பகுதியாக உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் இந்த நேரத்தில் தேவையற்ற உடல்நல சிக்கல்களைத் தவிர்க்கிறது. கடல் உணவுகளை கட்டுப்படுத்துவது அல்லது தவிர்ப்பது மற்றும் சீசன் முடியும் வரை காத்திருப்பது பாதுகாப்பானது” என்றார் உணவியல் நிபுணர் ஆர். நிவேதா

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion