74 வயதிலும் ரஜினிகாந்த் ஃபிட்டாக, சுறுசுறுப்பாக இருப்பதன் ரகசியம் இதுதாங்க.. அது என்னன்னு பாருங்களேன்!

Actor Rajinikanth's Fitness And Diet Routine: சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியானது. ஐந்து தசாப்தங்களாக திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்களின் 171 ஆவது திரைப்படம் தான் கூலி. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பைப் பார்த்தால், அவருக்கு 74 வயது என்று கூறினால் நம்ப முடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர் அவ்வளவு துடிப்பாக நடித்ததோடு, நடனமாடியும் உள்ளார்.

இப்படி 74 வயதாகியும் இன்னும் ஹீரோவாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார், இவ்வளவு ஃபிட்டாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார் என்றால், அதற்கு அவரது உணவுப் பழக்கங்களும், மேற்கொண்டு வரும் உடற்பயிற்சிகளும் தான் முக்கிய காரணம். ரஜினிகாந்த் அவர்கள் தனது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முன்னுரிமை அளித்து வந்தால், இத்தனை வயதிலும் இவரால் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது என்று யோசித்து பாருங்கள்.

Coolie Actor Rajinikanth s Fitness And Diet Routine At The Age Of 74

அதுவும் தற்போது இணையத்தில் ரஜினிகாந்த் அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ரஜினிகாந்த் அவர்கள் தனது பயிற்சியாளருடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதைக் காணலாம். அதுவும் இந்த வீடியோவில் முதலில் ரஜினிகாந்த் அவர்கள் பெஞ்சில் சாய்ந்து கொண்டு டம்பெல் பிரஸ் பயிற்சி செய்வதைக் காணலாம். அதைத் தொடர்ந்து ஜிம் பெஞ்சில் அமர்ந்து ஸ்குவாட்ஸ் செய்கிறார். வீடியோவின் இறுதியில் தான் ஸ்ட்ராங்க்காக இருப்பதை காட்டும் வகையில் இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டுகிறார்.

இந்த வீடியோவில் ரஜினிகாந்த் செய்யும் இரண்டு உடற்பயிற்சிகளுமே ஒட்டுமொத்த உடலுக்கும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக வயதான காலத்தில் இந்த வகையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

1. இன்க்லைன் டம்பெல் பிரஸ்

இந்த இன்க்லைன் டம்பெல் பிரஸ் என்பது 30 அல்லது 45 டிகிரியில் சாய்ந்த நிலையில் அமர்ந்து, கைகளில் டம்பெல்லை எடுத்துக் கொண்டு கைகளை மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, நேராக கைகளை உயர்த்துவதாகும். இந்த பயிற்சியானது மார்பு, தோள்பட்டை மற்றும் ட்ரைசெப்ஸ் போன்றவற்றை இலக்காக கொண்டிருப்பதோடு, மேல் மார்பு தசைகளை வலுப்படுத்துகிறது. இந்த உடற்பயிற்சி மேல் உடலின் வலிமையையும் அளவையும் அதிகரிக்க உதவுகிறது.

2. ஸ்குவாட்ஸ்

ஸ்குவாட்ஸ் பயிற்சியானது மூட்டுகள் மற்றும் தசைகளுக்கான மிகவும் சிறந்த உடற்பயிற்சியாகும். இது மேல் மற்றும் கீழ் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த பயிற்சியை சரியாக செய்யும் போது, அது உடலின் கலோரிகளை எரிக்கவும், காயங்களை தடுக்கவும், கோர் தசைகளை வலுப்படுத்தவும், உடல் நிலையை மேம்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்தமாக உடல் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. அதுவும் பெஞ்ச் ஸ்குவாட்ஸ் அல்லது சேர் ஸ்குவாட்ஸ் என எது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பயிற்சியை செய்வதனால் உடலின் வலிமை, சமநிலை மற்றும் இயக்கம் போன்றவை மேம்படுவதோடு, அடிக்கடி தடுக்கி விழும் அபாயமும் குறையும்.

ரஜினிகாந்த் மேற்கொள்ளும் டயட்

74 வயதிலும் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வெள்ளை நிற உணவுகளை முழுமையாக தவிர்ப்பதாக கூறியுள்ளார். அதுவும் சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், பால், தயிர், வெண்ணெய், மாத்திரை என எதையும் எடுப்பதில்லை என்றும் கூறினார். இந்த உணவுகள் நமது உடலில் எந்த மாதிரியான மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து டாக்டர் ப்ரீத்தி மிருனாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார். அந்த வீடியோ உங்களுக்காக இதோ!

இது தவிர, ரஜினிகாந்த் அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து டாக்டர் சிவா சுந்தர் அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "சூப்பர் ஸ்டார் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க அவர் பெரும்பாலான வெள்ளை உணவுகளை தவிர்ப்பது தான் முக்கிய காரணம். சூப்பர் ஸ்டார் சொல்வது போன்று வெள்ளை உணவுகளை முழுமையாக தவிர்ப்பது என்பது கஷ்டம். ஆனால் முடிந்த அளவு எவ்வளவு குறைவாக எடுக்கிறோமோ, அவ்வளவு நல்லது. ஏனெனில் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு 80% டயட் மற்றும் 20% உடற்பயிற்சி மிகவும் அவசியம். இந்த டயட்டில் முடிந்தவரை வெள்ளை உணவுகளை குறைத்து, வண்ணமயமான காய்கறிகள், பழங்கள், நட்ஸ், சிறுதானியங்கள் போன்றவற்றை எடுப்பது நல்லது. உடற்பயிற்சிக்கு காலை உணவுக்கு பின் 10 நிமிட நடைப்பயிற்சி, மதிய உணவுக்கு பின் 10 நிமிட உடற்பயிற்சி, இரவு உணவுக்கு பின் 10 நிமிட உடற்பயிற்சி மற்றும் காலையில் எழுந்தது சிறிது ஸ்ட்ரெட்ச்சிங் செய்வது போன்றவற்றை செய்தாலே, டாப் 10 ஃபிட்னஸ் மக்களுக்குள் ஒருவராக மாறலாம்." என்று டாக்டர் கூறினார்.

என்ன நண்பர்களே! இப்போது உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஃபிட்னஸ் மற்றும் டயட் ரகசியத்தை தெரிந்து கொண்டீர்களா? நீங்களும் 75 வயதிலும் ஃபிட்டாக இருக்க விரும்பினால், ரஜினிகாந்த் சொல்வது போன்று வெள்ளை உணவுகளைத் தவிர்த்து, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வாருங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion