2025 சனிப்பெயர்ச்சி: அர்த்தாஷ்டம சனியில் சிக்கும் தனுசு ராசிக்காரர்கள்.. அடுத்த 2 1/2 வருடம் எப்படி இருக்கும்?

Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் ராசிமாற்றம் மார்ச் மாத இறுதியில் நிகழவுள்ளது. சனிபகவானின் இந்த பெயர்ச்சி தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?

சனி பகவான் வரும் 29ஆம் தேதி முதல் மீன ராசியில் பயணம் செய்யப்போகிறார். தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் ராசியான மீன ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்யப்போகும் சனிபகவானால், குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

Saturn Transit 2025 Sani Peyarchi Palangal 2025 Sagittarius Dhanusu Prediction In Tamil

தனுசு ராசியில் இதுநாள் வரை முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருந்த சனிபகவான் இனி நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப்போகிறார். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மாறுபடும்.

உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் 4ஆம் வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்யப்போகிறார். 4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்யுங்கள். உங்க வேலையை காதலித்தால்தான் அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வேலையை விட வேண்டியிருக்கும்.

அவசரப்பட்டு வேலையை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார்.

நான்காம் இடம் தாய் ஸ்தானம் இந்த இடத்தில் சனி அமர்வதால் அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். எனவே அம்மாவை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி உடல்நலத்தை கவனிக்கவும். சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.

நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும். ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். சரியான, சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சனி பகவான் ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.

நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும். பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும்.

எதிரிகள் அதிகமாக வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே பிரகாசிக்க முடியும். ஜெயிக்கவும் முடியும். புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள்.

கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும். மகிழ்ச்சி நீடிக்கும். பேச்சில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் முடியும், சிலருக்கு தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய ஓய்வு எடுங்க. வயிறு பிரச்சினைகள் வராமல் இருக்க நேரத்திற்கு சாப்பிடுங்க.

மாணவர்கள் உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருந்தால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களை பெற முடியும், விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும். விளையாட்டுகளில் கவனம் தேவை. கல்விக்கடன் கிடைப்பதில் இழுபறி ஏற்படும். தேவையற்ற நண்பர்களை வெட்டி விடுங்கள். சோம்பலை விரட்டி சுறுசுறுப்பாக இருங்க படிப்பில் ஜொலிக்கலாம்.

அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய கால பைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, March 29, 2025, 11:06 [IST]
Desktop Bottom Promotion