Best Juices For Diseases In Tamil: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் தான் பழங்களும், காய்கறிகளும். ஏனெனில் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. அதுவும் நிறைய பேருக்கு ஜூஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ்களை சரியான முறையில் தயாரித்து சரியான அளவில் குடித்து வந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு ஜூஸ்களிலும் உள்ள சத்துக்கள் வேறுபடுவதால், அவை உடலின் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த பலனைத் தருகின்றன. உதாரணமாக, சர்க்கரை சேர்க்காத ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேப் போல் பீட்ரூட், கேரட், ஆப்பிள், தர்பூசணி, அன்னாசி, நெல்லிக்காய் ஜூஸ்களும் ஒவ்வொரு பிரச்சனைகளை சரிசெய்ய மற்றும் உடலுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
அந்த வகையில் டாக்டர் பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னென்ன ஜூஸ் குடித்தால் என்னென்ன நோய்கள் சரியாகும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. சளி, காய்ச்சல்
காலநிலை மாறினால் அடிக்கடி சளி, காய்ச்சல் பிடித்து பாடாய் படுத்தும். இந்நிலையில் அன்னாசிப் பழத்துடன், இஞ்சி மற்றும் பூண்டு ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்து சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். இதனால் அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் மற்றும் பூண்டில் உள்ள அல்லிசின், புரோமிலைன் போன்றவைகளும் சேர்ந்து, உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
2. தலைவலி
ஒருவருக்கு தலைவலி பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் சிலருக்கு அதிக வேலைப்பளுவாலும், டென்சனாலும், இன்னும் நிறைய பேருக்கு சரியாக நீரிழிப்பின் காரணமாகவும் வரலாம். இந்நிலையில் வெள்ளரிக்காய், செலரி, க்ரீன் ஆப்பிள் ஆகியவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்தும் குடித்து வரலாம். இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டு, தலைவலியைத் தடுக்கும்.
3. மலச்சிக்கல்
மலச்சிக்கல் ஒருவருக்கு நீர்ச்சத்து, நார்ச்சத்து குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. இந்நிலையில் கேரட், ஆப்பிள், பேரிக்காய் ஆகிய மூன்றையும் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
4. அல்சர்
இன்று நிறைய பேர் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான் அல்சர். இந்த அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைக்கோஸ் மற்றும் செலரியை ஜூஸாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.
5. இரத்த அழுத்தம்
தற்போது பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான் இரத்த அழுத்தம். இந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட், ஆப்பிள், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வரும் போது, இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
6. உடல் சோர்வு
எப்போதும் மிகுந்த உடல் சோர்வு அல்லது பலவீனத்தை சந்திப்பவர்கள், ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றையும் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைத்து, மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
7. மன அழுத்தம்
தற்போது மன அழுத்தம் ஒரு பெரிய நோயாக மாறிவருகிறது. யாரைக் கேட்டாலும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறுகிறார்கள். இந்த மன அழுத்தத்திற்கு ஏற்ற ஜூஸ் என்றால் வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய் ஆகிய மூன்றையும் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், உடல் ரிலாக்ஸாகவும், அமைதியாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி இதில் மக்னீசியம், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. மேலும் இவற்றில் கார்டிசோல் அளவைக் குறைக்கும் பண்புகள் உள்ளன.
8. சிறுநீரகங்களை சுத்தம் செய்ய..
சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்க தர்பூசணியுடன், மல்லி விதைகளை சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், சிறுநீரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும்.
9. கண் மற்றும் சரும பிரச்சனைகள்
கண்கள் தெளிவாகவும், சருமம் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் தெரிய கேரட், பீட்ரூட், குடைமிளகாய் ஆகிய மூன்றையும் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வரலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டீன் தான் சருமம் பொலிவாக முக்கிய காரணம்.
10. கல்லீரலை சுத்தம் செய்ய..
கல்லீரலை சுத்தம் செய்ய இஞ்சி, பூண்டு, மஞ்சள், எலுமிச்சை, பட்டை ஆகியவற்றை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சுத்தமாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
More Articles
- வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க...
- நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
- World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
- தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
- ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!'
- சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது?