கோதுமை ரவா ஊத்தாப்பமும்.. தேங்காய் சட்னியும்.. - டக்குன்னு எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Wheat Rava Vegetable Uthappam With Coconut Chutney Recipe: தினமும் ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? ஆனால் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையுடன், ஒருசில சத்தான பொருட்களை சேர்த்து ஊற வைத்து, மாவு அரைத்து, ஊத்தாப்பம் செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவா ஊத்தாப்பமும்.. தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா ஊத்தாப்பம் மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wheat Rava Vegetable Uthappam How To Make Wheat Rava Dosa With Coconut Chutney Recipe

தேவையான பொருட்கள்:

தோசை மாவிற்கு...

* கோதுமை ரவை - 1 கப்
* வெள்ளை சோளம் - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* கெட்டி அவல் - 1/4 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

காய்கறி மசாலாவிற்கு...

* வெங்காயம் - 1
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை, வெள்ளை சோளம், பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கெட்டி அவல் மற்றும் வெந்தயம் சேர்த்து, நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 4 மணிநேரம் கழித்து ஊற வைத்த பொருட்களை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவுடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து மாவை நன்கு கலந்துவிட்டு, தோசை மாவு கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை சற்று மொத்தமாக ஊத்தாப்பம் போன்று ஊற்றி, மேலே வெங்காய மசாலாவை பரவலாக வைத்து, எண்ணெய் ஊற்றி, தோசை கரண்டியால் மசாலாவை அழுத்திவிட்டு, திருப்பிப் போட்டு, வேக வைத்து எடுத்தால், கோதுமை ரவா வெஜிடேபிள் ஊத்தாப்பம் தயார்.
* இந்த ஊத்தாப்பத்திற்கு சட்னி செய்ய, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி மற்றும் துருவிய 1/2 மூடி தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, March 26, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion