தினமும் காலையில் இந்த கஞ்சியை 1 கப் குடிங்க.. கெட்ட கொழுப்பும், கெட்ட நீரும் வெளியேறி எடை வேகமாக குறையும்..

Posted By:

Samba Godhumai Rava Kanji Recipe In Tamil: உடல் பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இந்த உடல் பருமனைக் குறைக்க தினமும் கடுமையான உடற்பயிற்சியுடன் டயட்டில் இருந்து வருகிறீர்களா? பெரும்பாலும் டயட்டில் இருப்பவர்கள் காலையில் ஓட்ஸ், பிரட் என்று தான் சாப்பிடுவார்கள்.

நீங்களும் அப்படி சுவை இல்லாத உணவை கட்டாயத்தின் பேரில் சாப்பிட்டு வருகிறீர்களா? அப்படியானால் இனிமேல் அப்படியான உணவுகளை சாப்பிடாமல், காலையில் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி செய்து குடித்து வாருங்கள்.

Samba Godhumai Rava Kanji How To Make a Samba Wheat Rava Kanji Recipe

சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சம்பா கோதுமை ரவை. இந்த சம்பா கோதுமை ரவையில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் இது செரிமானத்திற்கு உதவுத், உடல் எடையைக் குறைக்க உதவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.

இப்படிப்பட்ட சம்பா கோதுமை ரவையைக் கொண்டு பொதுவாக உப்புமா தான் செய்வார்கள். ஆனால் உப்புமா என்றாலே உங்களுக்கு பிடிக்காதெனில், அந்த ரவையைக் கொண்டு கஞ்சி செய்து சாப்பிடுங்கள். இந்த சம்பா கோதுமை ரவை கஞ்சி மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த கஞ்சி பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு சம்பா கோதுமை ரவை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சம்பா கோதுமை ரவை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சம்பா கோதுமை ரவை - 1 கப்
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 5 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு குக்கரை எடுத்து, அதில் 1 கப் சம்பா கோதுமை ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கடலைப் பருப்பை சேர்த்து, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் ரவைக்கு 5 கப் நீரை ஊற்றி, அத்துடன் சீரகம், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கரண்டியால் கிளறி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 2 பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் காய்கறிகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, காய்கறிகள் வெந்துவிட்டதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்துள்ள ரவையை அப்படியே சேர்த்து, கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, ஒரு கொதி விட வேண்டும்.
* இறுதியாக மிளகுத் தூளை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சம்பா கோதுமை ரவை கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion