1/2 கப் அரிசியும், 1/4 கப் வேர்க்கடலையும் இருந்தா.. இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. வேற லெவல் டேஸ்ட்-ல இருக்கும்..

Posted By:

Peanut Sweet Recipe In Tamil: ஈவ்னிங் நேரத்தில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்வீட் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் 1/2 கப் சாப்பாட்டு அரிசியும், 1/4 கப் வேர்க்கடலையும் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு ஸ்வீட்டை செய்யுங்கள்.

அதுவும் இனி அடுத்த மாதத்தில் இருந்து நிறைய விசேஷங்கள் வரவுள்ளன. அப்போது என்ன ஸ்வீட் செய்வது என்று யோசிக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் இப்படியான சின்ன சின்ன ஸ்வீட் பற்றி தெரிந்து வைத்துக் கொண்டால், சுலபமாக இருக்கும் அல்லவா. அதுவும் வேர்க்கடலை கொண்டு ஸ்வீட் செய்வதை தெரிந்து கொண்டால், வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும், அவர்களிடம் நல்ல பாராட்டைப் பெறலாம்.

Peanut Sweet How To Make Instant Peanut Burfi Recipe

உங்களுக்கு வேர்க்கடலை மற்றும் அரிசியைக் கொண்டு எப்படி ஸ்வீட் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* புழுங்கல் அரிசி/பச்சரிசி - 1/2 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்
* கடலை மாவு - 1/2 கப்
* பொடித்த வெல்லம் - 3/4 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* பால் - 1/4 கப்
* கசகசா/எள்ளு விதைகள் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், 1/2 கப் புழுங்கல் அரிசியை சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் வேர்க்கடலையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதே பேனை அடுப்பில் வைத்து, அதில் மீண்டும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், 1/4 கப் கடலை மாவை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போய் திரண்டு வரும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* கடலை மாவானது நன்கு திரண்டு வந்ததும், அதை இறக்கி வறுத்த அரிசி, வேர்க்கடலையுடன் சேர்க்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த அரிசி, வேர்க்கடலையுடன் கடலை மாவையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் அரைத்ததை சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, வெல்லத்தை கரைய விட வேண்டும்.
* பின்னர் அதில் 1/4 கப் பாலை ஊற்றி நன்கு, திரண்டு வரும் வரை கிளறி விட வேண்டும்.
* கலவையானது நன்கு திரண்டு வந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு தட்டையான கிண்ணத்தில் நெய் தடவி, அதில் தயாரித்த ஸ்வீட்டை தட்டையாக பரப்பி, மேலே கசகசா அல்லது எள்ளு விதைகளைத் தூவி ஒருமுறை தட்டிவிட்டு, நன்கு குளிர வைத்தால், சுவையான வேர்க்கடலை பர்பி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 29, 2025, 18:31 [IST]
Desktop Bottom Promotion