மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Malli Dosa With Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியரா? தினமும் உங்கள் வீட்டில் காலை வேளையில் பெரும்பாலும் தோசை தான் டிபனாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரி ப்ளைன் தோசை சுட்டு சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை மல்லி தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு மல்லி, கறிவேப்பிலை, புதினா இருந்தால் போதும். இந்த மல்லி தோசையானது நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

Malli Dosa With Coconut Chutney How To Make Coriander Dosa With Coconut Chutney

இந்த மல்லி தோசை குறித்து காத்துவாக்குல சமையல் என்னும் இன்ஸ்டாபக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லி தோசை மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கறிவேப்பிலை - 1/2 கப்
* கொத்தமல்லி - 1/2 கப்
* புதினா - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* வெங்காயம் - 2
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* இட்லி மாவு - 2 கப்

தேங்காய் சட்னிக்கு..

* சின்ன வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 3
* மாங்கா இஞ்சி - சிறிது
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 3
* துருவிய இளம் தேங்காய் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் 1/2 கப் கறிவேப்பிலை, 1/2 கப் கொத்தமல்லி, 1/4 கப் புதினாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 3 பச்சை மிளகாய், 2 நறுக்கிய வெங்காயம், 2 பல் பூண்டு சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் இட்லி மாவை எடுத்துக் கொண்டு, அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவு கொண்டு தோசை சுட்டு எடுத்தால், சுவையான மல்லி தோசை தயார்.
* இந்த தோசைக்கு தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். அந்த சட்னி செய்வதற்கு மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்கா இஞ்சி, பொட்டுக்கடலை மற்றும் முந்திரியை சேர்த்து முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய இளம் தேங்காயை 2 கப் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று சட்னியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 12, 2026, 6:58 [IST]
Desktop Bottom Promotion