ஹோட்டல் ஸ்டைல் குருமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Hotel Style Chapati Kurma Recipe In Tamil: இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு 15 நிமிடத்தில் ஒரு சிம்பிளான, அதே சமயம் சுவையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம், தக்காளி மட்டும் தான் உள்ளதா?

அப்படியானால் 15 நிமிடத்தில் ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமாவை செய்யுங்கள். இந்த சப்பாத்தி குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், வேகமாகவும் செய்யக்கூடியவாறு இருக்கும். ஒருமுறை இந்த குருமாவை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை வீட்டில் உள்ளோருக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும். குறிப்பாக இது சப்பாத்தியுடன் மட்டுமின்றி, தோசை, இட்லியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Hotel Style Kurma How To Make a Chapati Kurma Recipe

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
* சின்ன வெங்காயம் - 3-5
* முந்திரி - 5
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கசகசா - 1/4 டீஸ்பூன்
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 2
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 3
* கல்பாசி - சிறிது
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (முழுமையாக சேர்க்கவும்)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், சோம்பு, முந்திரி, கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து, ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 1, 2025, 19:51 [IST]
Desktop Bottom Promotion