Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?

உலகம் முழுவதும் பலவிதமான மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதில் சில மதுபானங்கள் நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்தது மற்றும் வித்தியாசமானது. தென்கிழக்கு ஆசியாவின் பரபரப்பான இரவுச் சந்தைகளில், விற்பனைக்கு வைக்கப்படும் மதுபானங்களில் 'பாம்பு மது' (snake wine) மிகவும் பிரபலமானது.

What Is Snake Wine and Why It Is Very Famous

இந்த மதுபானத்தின் தனித்துவமே இதன் பாட்டிலுக்குள் சிறிய பாம்புகள் இருப்பதுதான். இதுவே அந்த மதுவிற்கு ஒரு சிறப்பான சுவையையும் தன்மையையும் அளிக்கிறது. இது கேட்பதற்கு மிகவும் வினோதமாக இருந்தாலும், தெளிவான கண்ணாடி ஜாடிகளில் மதுபானத்தில் முழுமையாக ஊறவைக்கப்பட்ட சுருண்ட விரியன் பாம்புகள் இதில் காணப்படுகின்றன.

'Snake Wine' என்று அழைக்கப்படும் இந்த பழங்கால பானம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண்டைய சீனாவில் அரச குடும்பத்தினருக்கான ஒரு மருத்துவத் தீர்வாகத் தொடங்கிய இது, தற்போது நாட்டுப்புற மருத்துவம், விருந்தோம்பல் மற்றும் பார்ப்பதற்கே வியப்பூட்டும் தோற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மதுபானமாக மாறியுள்ளது. இந்த வினோதமான மதுபானம் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Snake Wine என்றால் என்ன?

Snake Wine என்பது அதன் தனித்துவமான தோற்றத்திற்காக அறியப்படும் ஒரு பாரம்பரிய மதுபானம் ஆகும். இதில் தெளிவான ஆல்கஹால் நிரம்பிய பாட்டிலுக்குள் ஒரு முழுப் பாம்பு சுருண்டு வைக்கப்பட்டிருக்கும். இந்த மதுபானத்தின் வரலாறு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவின் 'மேற்கு ஜோ' (Western Zhou) வம்ச காலகட்டத்தைச் சேர்ந்தது. இது இந்தியாவில் கிடைக்காவிட்டாலும் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் தென் சீனா முழுவதும் கிடைக்கிறது.

இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

மிகவும் ஸ்ட்ராங்கான அரிசி மது அல்லது தானிய ஆல்கஹால் நிரம்பிய ஜாடியில் பாம்பை போட்டு உற்பத்தியாளர்கள் இதைத் தயாரிக்கிறார்கள். பெரும்பாலும் இதனுடன் தேள்கள், ஜின்செங் அல்லது உள்ளூர் மூலிகைகளும் சேர்க்கப்படுகின்றன. பாம்பு இந்தப் பாட்டில் சில மாதங்கள் ஊறவைக்கப்படுகிறது. ஆல்கஹாலில் உள்ள எத்தனால், பாம்பின் நச்சுப் புரதங்களைச் சிதைப்பதன் மூலம் அதன் விஷத்தன்மையைச் செயலிழக்கச் செய்கிறது. இதனால் இந்த ஆல்கஹால் குடிப்பதற்குப் பாதுகாப்பானதாக உள்ளது.

பாரம்பரிய மருத்துவம்

இந்த மது பானம் பிரபலமாக இருப்பதற்கு பாரம்பரிய சீன மருத்துவமே முக்கியக் காரணமாகும். மூலிகை மருத்துவர்கள் பாம்புகளை உடலுக்கு வெப்பத்தை அளிக்கும் மற்றும் உடலில் உள்ள ஈரத்தை வெளியேற்றும் ஆற்றல்மிக்க ஒரு மூலப்பொருளாகக் கருதுகின்றனர். மேலும் இது மூட்டு இறுக்கத்தைக் குறைக்கவும், மூட்டுவலிக்குத் தீர்வு காணவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்வைப் போக்கவும் மக்கள் இந்த மதுவை அருந்துகின்றனர்.

நாட்டுப்புற நம்பிக்கைகள்

இந்த பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள் இப்பானத்தை ஒரு உடலை வலுவூட்டும் இயற்கையான டானிக்காக கருதுகிறார்கள். பாம்புகள் இயற்கையான உடல் ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக இருப்பதால், இந்த மதுவை அருந்துவதன் மூலம் அந்தப் பண்புகள் குடிப்பவருக்கும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் இது ஆண்களின் பாலியல் ஆற்றலை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

கலாச்சார முக்கியத்துவம்

மருத்துவப் பயன்பாடுகளுக்கு அப்பால், Snake WIne ஒரு மரியாதைக்குரிய அடையாளமாகவும் விளங்குகிறது. கிராமப்புறங்களில் விருந்தினர்களை வரவேற்கும் குடும்பங்கள், தங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு கிளாஸ் பாம்பு மதுவை வழங்குவது வழக்கம். அதே நேரத்தில், இரவுச் சந்தைகளில், தாங்கள் செல்லும் இடத்தின் நினைவாக ஒரு வித்தியாசமான நினைவுப் பொருளை வாங்கிச் செல்ல விரும்பும் பயணிகளுக்காகச் சிறிய, விலை மலிவான பாட்டில்களிலும் இது விற்பனை செய்யப்படுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, September 4, 2026, 20:35 [IST]
Desktop Bottom Promotion