உங்க வாய் எப்பவும் 'கப்பு' அடிக்குதா? அப்ப இந்த பழங்களை வாங்கி அடிக்கடி சாப்பிடுங்க..

Fruits For Teeth In Tamil: ஒருவரது ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு வாய் சுகாதாரம் மிகவும் இன்றியமையாது. ஆனால் நிறைய பேர் வாய் சுகாதாரத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், உண்ணும் உணவுகள் வழியாக கிருமிகள் உடலினுள் நுழைந்து பல ஆரோக்கியப் பிரச்சனைகளைத் தூண்டிவிடும். எனவே தான் வாய் சுகாதாரம் இன்றியமையாதது என்று கூறுகிறார்கள்.

Top 6 Fruits To Have For Healthy Teeth and Gums In Tamil

நிறைய பேர் தங்கள் பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள, கடைகளில் விற்கப்படும் பல்வேறு வகையான டூத் பேஸ்ட்டுகளை வாங்கி தினமும் இரண்டு வேளைக்கு 3 வேளையாக பற்களைத் துலக்குவார்கள்.

ஆனால் வெறுமனே பற்களைத் துலக்கினால் மட்டும் பற்கள் மற்றும் ஈறுகள் சுத்தமாகிவிடாது. அதற்கு ஒருசில பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதுவும் நீங்கள் அடிக்கடி பழங்களை வாங்கி சாப்பிடுபவரானால், உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் குறிப்பிட்ட பழங்களை வாங்கி தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், வாய் துர்நாற்றம், ஈறு பிரச்சனைகள், மஞ்சள் நிற பற்கள் போன்ற பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்களைக் காண்போம்.

1. ஆப்பிள்

தினமும் ஒரு நற்பதமான ஆப்பிளை கடித்து மென்று சாப்பிடுவது வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும். ஏனெனில் ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி பற்களின் எனாமலில் ஏற்படும் சேதத்தைத் தடுப்பதோடு, ஈறு நோய்களையும் தடுக்கும்.

அதோடு இதில் வைட்டமின் சி உள்ளதால், பற்கள் சொத்தையாவதைத் தடுக்க உதவி புரியும். மேலும் ஆப்பிளில் வைட்டமின் சி, மாங்கனீசு, பொட்டாசியம், பெக்டின் போன்ற சத்துக்கள் வளமான அளவில் இருப்பதால், இது ஈறு நோய்களை எதிர்த்துப் போராட உதவி புரியும்.

2. கிரான்பெர்ரி

சிறிய அளவிவான கிரான்பெர்ரி பழங்களில் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதுவும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பற்களில் ப்ளேக்குகளை உருவாக்கும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது.

மேலும் கிரான்பெர்ரியில் வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கித்திற்கு தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் உள்ளன. ஒருவேளை கிரான்பெர்ரி பழம் கிடைக்காவிட்டால், அதன் ஜூஸையாவது வாங்கி குடியுங்கள்.

3. கிவி

புளிப்புச் சுவையைக் கொண்ட கிவி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முக்கியமாக கிவி பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் இருப்பதால், இது ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு கிவி பழத்தில் பீட்டா-கரோட்டீன் உள்ளது. இது ஈறு நோயை சரிசெய்ய உதவுகிறது. எனவே தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிட்டு, வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

4. ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் பற்களில் ப்ளேக்குகள் உருவாவதைத் தடுக்க உதவும் வைட்டமின் சி அதிகம் உள்ளன. மேலும் இப்பழத்தில் சொத்தை பற்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் அமிலங்கள் உள்ளன.

எனவே ஸ்ட்ராபெர்ரி பழத்தை உட்கொண்டு வந்தால், அது பற்களின் எனாமலை பாதுகாப்பதோடு, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் மற்றும் பற்களையும் வலுப்படுத்தும்.

5. ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இவை பற்களை வலுப்படுத்துவதோடு, தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. முக்கியமாக ஆரஞ்சு பழத்தில் உள்ள ஹெஸ்பெரிடின் என்னும் கலவை ஈறு நோய்களைத் தடுக்க உதவுகிறது. ஆகவே ஆரஞ்சு பழத்தை அடிக்கடி வாங்கி சாப்பிட்டு, உங்கள் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

6. தர்பூசணி

தர்பூசணி பழத்தில் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரியும் லைகோபைன், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதோடு தர்பூசணியில் கலோரிகள் குறைவு, நீர்ச்சத்து அதிகம் என்பதால், வாய் வறட்சி தடுக்கப்படுவதோடு, உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.

வாய் வறண்டு போனால் தான் வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாய் துர்நாற்றாம் போக வேண்டுமானால், தர்பூசணி பழத்தை சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் நீரையாவது அடிக்கடி அதிகம் குடியுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion