மலச்சிக்கலால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்க போதும்...

Summer Fruits For Constipation: கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெளியே சிறிது நேரம் சென்றாலே, உடல் வறண்டு போகும் அளவில் சூரிய கதிர்கள் சுட்டெரிக்கின்றன. இப்படி வெயில் அதிகம் அடிப்பதால், வெளியே அலைந்து வேலை செய்பவர்கள் கோடையில் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் மலச்சிக்கல்.

ஒருவருக்கு மலச்சிக்கலானது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் ஏற்படக்கூடும். இப்படியான நீர்ச்சத்து குறைபாட்டை கோடையில் அதிகம் சந்திக்க நேரிடும். எனவே தான் மற்ற காலங்களை விட கோடையில் மலச்சிக்கல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுகின்றனர்.

Summer Fruits For Constipation In Tamil

மலச்சிக்கலைத் தடுக்க வேண்டுமானால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நார்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் கோடைக்கால பழங்களை உட்கொண்டு வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். பொதுவாக சீசன் பழங்களானது, அந்த சீசனில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.

எனவே கோடைக்காலத்தில் நீங்கள் மலச்சிக்கலை அதிகம் சந்தித்து வந்தால், கோடைக்கால பழங்களை தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள். ஒருவேளை மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொண்டால், பின் அது தீவிரமாகி மூலநோயை வரவழைத்துவிடும். எனவே எப்போதும் மலச்சிக்கல் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இப்போது கோடையில் சந்திக்கும் மலச்சிக்கலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய கோடைக்கால பழங்களைக் காண்போம்.

ஆப்பிள்

குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதில் ஆப்பில் மிகச்சிறந்த பழம். ஏனெனில் ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலில் இருந்து விடுபட பெரிதும் உதவி புரியும். அதுவும் ஆப்பிளின் முழு பலனையும் பெற விரும்பினால், அந்த ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழமும் மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பதில் மிகச்சிறந்த பழம். இனிப்பும், புளிப்பும் கலந்த ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. கூடுதலாக ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

பப்பாளி

பப்பாளி கோடைக்காலத்தில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய விலை குறைவான பழமாகும். இந்த பப்பாளியை காலை அல்லது மதிய வேளையில் தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், குடலியக்கம் சீராக இருக்கும். இதில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், உணவுகளை எளிதில் உடைத்தெறிந்து, குடலில் எளிதில் நகர்ந்து செல்ல உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் குடலியக்கத்தை சீராக்கும்.

மாம்பழம்

கோடைக்கால பழமான மாம்பழம் சுவையானது மட்டுமின்றி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிப்பதில் சிறந்தது. இதற்கு மாம்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான் காரணம். இது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, குடலியக்கத்தையும் சீராக்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலசிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

தர்பூசணி

கோடைக்கால பழமான தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இந்த தர்பூசணியில் நார்ச்சத்தும் உள்ளன. எனவே மலச்சிக்கலால் அவதிப்படும்போது, தர்பூசணி பழத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.

கனிந்த வாழைப்பழம்

அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். அதுவும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். இப்படியான பழத்தில் தான் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருக்கும். இதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். அதுவே கனியாத வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் மலச்சிக்கல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். அதனால் தான் வயிற்றுப் போக்கின் போது கனியாத வாழைப்பழத்தை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, April 12, 2025, 13:21 [IST]
Desktop Bottom Promotion