58 வயதிலும் ஷாருக்கான் ஃபிட்டா இருக்க.. அவர் பின்பற்றும் டயட் எதுன்னு தெரியுமா?

Shah Rukh Khan Follows OMAD Diet: பாலிவுட்டின் கிங் என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான், இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளார். இதற்கு அவரது திறமையான நடிப்பு மட்டுமின்றி, 58 வயதிலும் நன்கு ஃபிட்டாக இருப்பதும் ஒரு காரணம். வேலை என்று வந்துவிட்டால், தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்து தருபவர் தான் ஷாருக்கான். இவர் சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் தனது தினசரி வழக்கம் மற்றும் டயட் குறித்து வெளிப்படுத்தினார்.

அந்த இன்டர்வியூவில் ஷாருக்கான், நான் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறினார். மேலும் இவர், நான் காலையில் 5 மணிக்கு தான் தூங்குவேன். அமெரிக்க நடிகர் மார்க் வால்பெர்க் எழுந்ததும், நான் தூங்கிவிடுவேன். ஷூட்டிங் இருந்தால், காலை 9 அல்லது 10 மணிக்கு எழுவேன். ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு இரவு 2 மணிக்கு வருவேன். வந்ததும் குளித்துவிட்டு, உடற்பயிற்சியில் சிறிது நேரம் ஈடுபட்டு பின்னரே தூங்க செல்வேன் என்றும் கூறினார்.

Shah Rukh Khan Follows OMAD Diet All You Need To Know About This Diet In Tamil

58 வயதிலும் ஷாருக்கான் ஃபிட்டாக இருக்க, ஒரு முக்கியமான காரணம் என்றால், அது OMAD டயட் என்னும் ஒரு நாள் ஒரு உணவு திட்டம் என்றே கூறலாம். சரி, அதென்ன ஒரு நாள் ஒரு உணவுத் திட்டம் என்று கேட்கலாம். இப்போது OMAD டயட் என்றால் என்ன? அந்த டயட்டை பின்பற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும், ஃபிட்டாக இருக்க இந்த டயட்டை பின்பற்றலாமா, இது ஆரோக்கியமானது தானா என்பது குறித்து காண்போம்.

OMAD டயட் ஆரோக்கியமானதா?

சமீப ஆண்டுகளாக மக்களிடையே பரவலாக அதிகம் பின்பற்றப்படும் ஒரு டயட்டாக OMAD டயட் உள்ளது. இந்த டயட்டில் உள்ளோர் ஒரு நாளைக்கு வேண்டிய அனைத்து கலோரிகளையும் ஒரு வேளை உணவில் எடுப்பார்கள். பல்வேறு ஆய்வுகளில், இந்த OMAD டயட் எடை இழப்பு, கவனத்தை மேம்படுத்துவது, சீரான மற்றும் ஆரோக்கியமான மெட்டபாலிசத்தைப் பராமரிக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த டயட் உண்மையிலேயே ஆரோக்கியமானதா? OMAD டயட் என்பது இடைப்பட்ட உண்ணாவிரதம் அல்லது இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங்கின் (Intermittent Fasting) ஒரு தீவிரமான வடிவமாகும். இதில் ஒரு நபர் 1-2 மணிநேரம் மட்டுமே உண்பார், மீதமுள்ள 22 மணிநேரமும் எதுவும் சாப்பிடாமல் விரதமிருப்பார். இந்த டயட்டில் நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் இந்த வகையான டயட்டை எடையை குறைக்க நினைப்போர் மேற்கொள்வார்கள்.

OMAD டயட்டினால் கிடைக்கும் நன்மைகள்

எடை இழப்பு

OMAD டயட்டை நிறைய பேர் மேற்கொள்ள முதன்மையான காரணம் எடையை குறைக்க தான். ஆய்வுகளில் கூட, OMAD டயட்டானது கலோரிகளை குறைக்கவும், எடையைக் குறைக்கவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது. ஒபீசிட்டி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இடைப்பட்ட உண்ணாவிரதம் 3-24 வாரங்களில் உடல் எடையை 3-8 சதவீதம் குறைக்க உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான மெட்டபாலிச ஆரோக்கியம்

சில ஆய்வுகளில் இடைப்பட்ட உண்ணாவிரதம் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டியை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது. ஜர்னல் ஆஃப் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் ஆய்வில், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் OMAD டயட்டை மேற்கொள்ளும் போது, அது இன்சுலின் சென்சிடிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கவனத்தை அதிகரிக்கும்

உண்ணாவிரதமானது மனதில் தெளிவையும், கவனத்தை மேம்படுத்தவும் உதவுவதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. ஃபிரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வானது, இடைவிடாத உண்ணாவிரதம் மூளை பிளாஸ்டிசிட்டியை அதிகரிப்பதன் மூலமும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம் என்று கூறுகிறது.

நினைவில் கொள்ள வேண்டியவை

OMAD டயட்டானது எப்போதுமே நீண்ட காலம் பின்பற்ற ஏற்றது அல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் அடிக்கடி எச்சரிக்கின்றனர். என்ன தான் OMAD டயட் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அனைவருக்குமே இந்த டயட் பொருந்தாது. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக இது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கலாம். எனவே எந்த ஒரு டயட்டை பின்பற்றுவதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது முக்கியம் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion