ஆண்களே! இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா.. அசால்ட்டா இருக்காதீங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. உஷார்..

Prostate Cancer Symptoms In Tamil: ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதி தான் புரோஸ்டேட் சுரப்பி. இந்த சுரப்பி 3 முக்கியமான பணிகளை செய்கிறது. அதில் விந்தணுவிற்கு ஊட்டமளித்து கொண்டு செல்ல தேவையான விந்தணு திரவத்தை உற்பத்தி செய்தல், சிறுநீர்க்குழாய் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உச்சக்கட்டத்தின் போது விந்துவை வெளியேற்ற உதவுதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்படிப்பட்ட முக்கியமான வேலையை செய்யும் புரோஸ்டேட் சுரப்பியில் உருவாகக்கூடிய ஒரு வகையான புற்றுநோய் தான் புரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களை மட்டுமே தாக்கும் புற்றுநோய்களுள் ஒன்றாகும். இந்த புற்றுநோய் பொதுவாக மெதுவாக வளரும் மற்றும் அவ்வளவு எளிதில் அறிகுறிகளை வெளிப்படுத்தாது. அப்படியே வெளிக்காட்டினாலும், அது சாதாரணமாக சந்திக்கும் ஒரு பிரச்சனை போன்றே வெளிக்காட்டும்.

Prostate Cancer Symptoms Top 5 Early Warning Signs Of Prostate Cancer

பெரும்பாலும் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள், அதை முற்றிய நிலையில் தான் கண்டறிந்து, மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த வகை புற்றுநோயும் ஆரம்ப காலத்தில் அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை கவனித்து உடனே மருத்துவரை அணுகினால், எளிதில் சிகிச்சை வழங்கி, சரிசெய்யலாம். இப்போது இந்த புரோஸ்டேட் புற்றுநோயின் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

1. அடிக்கடி சிறுநீர் கழிப்பது

புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் முதல் அறிகுறி இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படி இரபு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதால், போதுமான தூக்கம் கிடைக்காமல் பகல் வேளையில் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும். சிறுநீர் குழாயை சுற்றியுள்ள புரோஸ்டேட் சுரப்பி தான் சிறுநீர் வெளியேற அனுமதிக்கிறது. ஒருவேளை புற்றுநோய் ஏற்பட்டால், புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீர்குழாயின் மீது அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிகிறது. எனவே வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிக்க தொடங்குவதில் சிரமத்தை சந்திக்க நேரிடலாம். சொல்லப்போனால் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சிறுநீர் கழிப்பது சவாலானதாக இருக்கும். ஏனெனில் புரோஸ்டேட் சுரப்பியில் கட்டிகள் வளரும் போது, அது அடைப்புக்களை உருவாக்கி, சிறுநீர்க்குழாயில் சிறுநீர் செல்ல இடையூறை ஏற்படுத்தும். எனவே திடீரென்று சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்தித்தால், மாததிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இது புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.

3. சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உணர்வு

சில புரோஸ்டேட் நோயாளிகள் இந்த புற்றுநோயின் ஆரம்பத்தில் சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது விந்து வெளியேறும் போதோ மிகுந்த வலியை அனுபவித்ததாக புகாரளித்துள்ளனர். ஏனெனல் இந்த புற்றுநோய் புரோஸ்டேட் திசுக்கள் அல்லது சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த எரிச்சல் அல்லது வலியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

4. சிறுநீர் அல்லது விந்துவில் இரத்தம்

புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் உள்ளது என்பதன் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்று சிறுநீர் மற்றும் விந்துவின் இரத்தம் கலந்து வெளியேறும். இப்படி வழக்கத்திற்கு மாறாக ஆண்கள் தங்களின் சிறுநீரில் இரத்தத்தைக் கண்டாலோ அல்லது விந்துவில் இரத்தம் கலந்திருப்பதைக் கண்டாலோ, அதை சாதாரணமாக எடுக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். இதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து சரிசெய்யலாம்.

5. திடீர் விறைப்புத்தன்மை குறைபாடு

வயதான காலத்தில் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருப்பது ஒரு பொதுவான நிலையாகும். ஆனால் அதுவே இளம் வயதில் காரணமில்லாமல் விறைப்புத்தன்மையில் பிரச்சனையை சந்தித்தால், புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சி புரோஸ்டேட் சுரப்பிக்கு அருகில் அமைந்துள்ள விறைப்புத்தன்மையைக் கட்டுப்படுத்தும் நரம்புகளை அழுத்துவதால் இது நிகழ்கிறது. ஆகவே எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல், விறைப்புத்தன்மை குறைபாட்டினை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, September 1, 2025, 12:57 [IST]
Desktop Bottom Promotion