சைனஸ் தலைவலியை அடிக்கடி சந்திப்பீங்களா? அப்ப டாக்டர் சொல்ற இடத்துல மசாஜ் பண்ணுங்க..

Sinus Headache Remedies: மழைக்காலம் என்பதால் நிறைய பேர் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் நிறைய பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் சைனஸ் தலைவலி, காது அடைப்பு போன்றவை. பொதுவாக இந்த சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு காலநிலை சற்று குளிர்ச்சியானாலோ, அதிகாலையில் எழுந்து பனியில் நனைந்தாலோ அல்லது தலைக்கு குளித்தாலோ, தலை பாரம் அல்லது சைனஸ் வலியை சந்திப்பார்கள். எனவே சைனஸ் பிரச்சனையைக் கொண்டவர்கள் குளிர்ச்சியான காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த சைனஸ் பிரச்சனையைக் கொண்டவர்கள் தாங்கள் சந்திக்கும் சைனஸ் வலியை அல்லது அசௌகரியத்தை எப்படி வீட்டிலேயே ஈஸியாக சரிசெய்வது என்பது குறித்து காது மூக்கு தொண்டை நிபுணரான டாக்டர் விக்னேஷ் கோகுல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ENT Doctor Shared Tips To Get Relief from Sinus Headache And Ear Block During Monsoon

4 விதமான சைனஸ்கள்

"நமக்கு 4 விதமான சைனஸ்கள் உள்ளன. அதில்

1. நெற்றியில் இருப்பது - ப்ரான்டல் சைனஸ்

2. கண்ணிற்கு அருகில் உள்ள மூக்கு பகுதியில் இருப்பது - எத்திமாய்டு சைனஸ்

3. மூக்கிற்கு பின் - ஸ்பீனாய்டு சைனஸ்

4. கன்னங்களில் இருப்பது - மேக்ஸில்லரி சைனஸ்

இந்த 4 சைனஸ் சுரப்பிகளிலும் அழுத்தம் அதிகம் இருந்தாலோ அல்லது நீர் கோர்த்திருந்தாலோ, அதை சரிசெய்ய எப்படி மசாஜ் செய்வது என்பதை தெரிந்து கொண்டால், சைனஸ் பிரச்சனையால் சந்திக்கும் வலி அல்லது அசௌகரியத்தை வீட்டிலேயே சரிசெய்யலாம்." என்று டாக்டர் கூறினார்.

"அதில் ப்ரான்டல் சைனஸில் மசாஜ் செய்வதால், அதுவும் புருவங்கள் தொடங்கும் பகுதியில், புருவங்களுக்கு மேல் பெருவிரல்களை வைத்து, அந்த ஒரு இடத்தில் மென்மையாக அழுத்தம் கொடுத்து வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யும் போது, ப்ரான்டல் சைனஸில் உள்ள நீர் வடிகட்டி வெளியேறிவிடும்.

எத்திமாய்டு மற்றும் ஸ்பீனாய்டு சைனஸ்கள் மூக்கிற்கு பின்னால் இருப்பதால், அங்கு மசாஜ் செய்ய முடியாது. ஆனால் புருவங்கள் தொடங்கும் பகுதியில் ஆள்காட்டி விரல்களை வைத்து, மெல்ல அழுத்தம் கொடுத்தவாறு விரல்களை புருவங்கள் முடியும் பகுதி வரை சென்று, பின் அப்படியே விரல்களை புருவங்களுக்கு மேல், அதாவது நெற்றி வழியாக வந்து, மீண்டும் புருவங்களின் தொடக்கத்திற்கு வர வேண்டும். இப்படி வட்ட சுழற்சியில் புருவங்களின் மேல் அழுத்தம் கொடுத்தால், எத்திமாய்டு மற்றும் ஸ்பீனாய்டு சைனஸ்களின் பாதைகளை விரிவடையச் செய்து நீர்க்கோர்த்தலை சரிசெய்யலாம்.

Take a Poll

அடுத்து மேக்ஸில்லரி சைனஸ். இது தான் பெரும்பாலானோர் பாதிக்கப்படக்கூடிய பொதுவான சைனஸ். ஏனென்றால் இந்த சைனஸின் குழாயானது மேலே சென்று பின் கீழிறக்கும். எனவே தான் இந்த சைனஸ் சுரப்பில் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இந்த மேக்ஸில்லரி சைனஸை மசாஜ் செய்வதற்கு மூக்கின் துளைகளுக்கு பக்கவாட்டில் ஆள்காட்டி விரலால் அழுத்தம் கொடுத்து, அப்படியே அந்த சுரப்பி அமைந்துள்ள கன்னத்தில் உள்ள எலும்புகளைச் சுற்றி அழுத்தம் கொடுத்துக் கொண்டே, மேல் நோக்கி நெற்றிக்கு சென்று புருவங்களை சுற்றி வந்து, புருவங்களின் தொடக்க பகுதி வழியாக, ஆரம்பித்த இடத்திற்கு வர வேண்டும். இப்படி வட்ட சுழற்சியில் மூன்று முறையும், எதிர் கடிகார சுழற்சியில் மூன்று முறையும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு சைனஸ் சுரப்பிகளில் மசாஜ் செய்வதன் மூலம், சைனஸில் உள்ள அடைப்புக்களை நீக்கி, சைனஸ் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்" என்று டாக்டர் விக்னேஷ் கூறினார்.

காது அடைப்பு

"சைனஸ் பிரச்சனையை சந்திப்பவர்கள் சந்திக்கும் மற்றொரு பொதுவான பிரச்சனை காது அடைப்பு. இந்த காது அடைப்பை சரிசெய்ய, பெருவிரலை மூக்கிற்கு பக்கவாட்டில், அதுவும் துளைகளுக்கு அருகில் கிடைமட்டமாக வைத்து அழுத்தம் கொடுத்தவாறு, மற்றொரு கையால் காதுகளை பிடித்து இழுத்து, ஒரு 10 நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். இப்படி ஒரு 3 முறை செய்யலாம். இது தவிர, காதுகளுக்கு பின், காது முடியும் இடத்தில் ஆள்காட்டி விரலை வைத்து, அழுத்தம் கொடுத்தவாறு கீழே கொண்டு வர வேண்டும். இப்படி ஒரு 3-4 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், காதுகளில் ஏற்பட்டுள்ள அடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்." என்று டாக்டர் கூறினார்.

"முக்கியமாக இப்படியான சைனஸ் மசாஜை ஆவி பிடித்த பின் செய்வதன் மூலம் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் இந்த மசாஜ் அனைவருக்குமே நல்ல நிவாரணத்தை அளித்துவிடாது. அதே சமயம் இந்த மசாஜ்ஜை செய்வதால், எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது." என்றும் டாக்டர் விக்னேஷ் கூறினார்.

எனவே நண்பர்களே! நீங்கள் சைனஸ் தலைவலியை அதிகம் சந்தித்தால், சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டு, டாக்டர் கூறிய சைனஸ் மசாஜ்களை செய்து பாருங்கள். இதனால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion