அதிகரிக்கும் சிக்குன்குனியா.. சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க..

Chikungunya Cases Rise In TamilNadu: தமிழ்நாட்டில் தற்போது சிக்குன்குனியா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கொசுக்கள் மூலம் பரவக்கூடிய சிக்குன்குனியா வழக்குகள் தமிழ்நாட்டின் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் (DPH) மாநிலம் தழுவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பருவகால மாற்றங்கள் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக இருப்பதால், மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்குன்குனியா என்பது டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் நாள் முழுவதும், குறிப்பாக அதிகாலை மற்றும் பிற்பகல் நேரங்களில் மனிதர்களை கடிக்கும். இந்த சிக்குன்குனியாவால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அது காய்ச்சலுடன், மூட்டு வலி, தசைவலி, மிகுந்த உடல் சோர்வு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Chikungunya Cases Rise In TamilNadu Can Eating Chicken Cause Chikungunya

தற்போது சிக்குன்குனியா பரவிக் கொண்டிருப்பதால் பலர் சிக்கன் சாப்பிடுவது குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிக்கன் சாப்பிடுவதன் மூலம் தான் சிக்குன்குனியா பரவுவதாக பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது உண்மை தானா? சிக்கன் சாப்பிடுவதால் சிக்குன்குனியா பரவுகிறதா என்பதற்கான தெளிவான விளக்கத்தை டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சிக்குன்குனியாவின் அறிகுறிகள், அது ஏன் மூட்டு வலியை ஏற்படுத்துகிறது, எந்த வகையான இரத்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.

சிக்கன் சாப்பிட்டால் சிக்குன்குனியா வருமா?

அதில் அவர் கூறியதாவது, "சிக்குன்குனியா தமிழ்நாட்டில் அதிகமாக பரவிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருவதால், நிறைய பேர் சாப்பிடுவதால் தான் சிக்குன்குனியா வருவதாக நினைத்து, சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால் சிக்கனுக்கும், சிக்குன்குனியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாம் சாப்பிடும் சிக்கன் CHICKEN.இதுவோ CHICKUN.கிமோகாண்டே என்னும் ஆப்பிரிக்க மொழியில் இருந்து இந்த வார்த்தையை எடுத்துள்ளனர். அதற்கான சரியான அர்த்தம் என்னவென்றால் கடுமையான மூட்டு வலியையும், தசை வலியையும் ஏற்படுத்தக்கூடிய காய்ச்சல் தான் இது." என்று கூறினார்.

சிக்குன்குனியா வைரஸ் எப்படி உடலை பாதிக்கிறது?

"டெங்கு காய்ச்சலைப் பரப்பும் அதே ஏடிஸ் கொசுக்கள் தான் இந்த சிக்குன்குனியாவையும் பரப்புகிறது. இந்த வகை கொசுக்களின் கால்கள் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகள் இருப்பதால், இதை புலி கொசுக்கள் என்றும் அழைப்பர். இந்த வைரஸ் கிருமி நமது ஃபைப்ரோபிளாஸ்ட்கள், தசை செயற்கைக்கோள் செல்கள், மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வு மற்றும் அவற்றில் உள்ள தசைநாண்களை கடுமையாக பாதிக்கிறது. இது வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மூட்டுகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் என்று கூறினார்.

எப்போது இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்?

"தற்போது நிறைய பேர் மூக்கு ஒழுகல், தொண்டை கரகரப்பு போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள். இதனால் சிக்கன்குனியா இருக்குமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள். ஆனால் இதற்கும் சிக்குன்குனியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தற்போது, ​​ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்ற வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது. இது ஜலதோஷம் மற்றும் தொண்டை புண் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சிலருக்கு மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகளும் ஏற்படலாம். இவை தவிர, குளிர்காலத்தில் சளி, இருமல், மூக்கடைப்பு மற்றும் தும்மல் போன்றவை பொதுவானவை. இந்த அறிகுறிகள் சிக்குன்குனியாவுடன் தொடர்புடையவை அல்ல என்பதால், இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

ஒருவேளை கடுமையான காய்ச்சல் மற்றும் டெங்குவின் அறிகுறிகள் போன்று தெரிந்தால், உடனே CBC என்னும் இரத்த பரிசோதனை செய்து பார்த்து, அதில் பிளேட்லெட்டுகளின் அளவு குறைவாக இருந்தால், சிக்குன்குனியா பரிசோதனை செய்து பாருங்கள். இல்லாவிட்டால் தேவையில்லை" என்றும் டாக்டர் கூறினார்.

செய்யக்கூடாதவை

"பொதுவாக காய்ச்சல், உடல் வலி இருக்கும் போது DEXA+DICLOFENAC-ஐ கலந்து போடுவார்கள். இப்படி போடும் போது காய்ச்சல், உடல் வலி குறைந்திருப்பது போன்று இருக்கும். ஆனால் டெங்கு அல்லது சிக்குன்குனியாவாக இருந்து, இதை போட்டால், காய்ச்சல் நமக்கு தெரியாமலேயே உடலினுள் பிளேட்லெட்டுகளின் அளவு குறைந்து, நிலைமை மோசமாகிவிடும். எனவே இந்த காம்பினேஷனை ஒருபோதும் எடுக்காதீர்கள்" என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! சிக்கனுக்கும் சிக்குன்குனியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பயப்படாமல் சிக்கனை சாப்பிடுங்கள். உங்கள் வீட்டில் வெள்ளை கருப்பு கோடு கொண்ட கொசுக்கள் இருந்தால், அதை உடனே அடித்து கொன்றுவிடுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion