உங்க வீட்ல இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கே தெரியாமல் புற்றுநோயை உண்டாக்குமாம்... ஜாக்கிரதை...!

பெரும்பாலும் மக்கள் புகைபிடித்தல், புகையிலை பயன்படுத்துவது போன்ற தேவையற்ற பழக்கங்களால் மட்டும் தான் கேன்சர் வரும் என நினைக்கிறார்கள். சிலருக்கு எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாத போதும் கேன்சர் இருப்பதாக கேள்விப்படும் போது நாம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைவோம். இதற்கு காரணம் நாம் நமக்கே தெரியாமல் வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்கள் தான்.

ஆம், நாம் வீட்டில் சமைக்க, சமையல் பொருட்களை சேமிக்க என பயன்படுத்தும் பொருட்கள்தான் இந்த அபாயத்தை தருகிறது. ஏன் நாம் கடைகளில் வாங்கும் குளிர்பானங்கள், ஏன் தண்ணீர் பாட்டில்கள் கூட அத்தகைய ஆபாயத்தை கொண்டிருக்கின்றன. இந்த பொருட்களில் காலப்போக்கில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் நம்மை இந்த நிலைக்கு தள்ளுகின்றன. இங்கு நாம் வீட்டில் இருக்கும் கேன்சர் அபாயத்தை கொண்டிருக்கும் பொருட்களை இங்கு பார்க்கலாம்.

Cancer-Causing Things Present in Every Home

நான்-ஸ்டிக் பாத்திரங்கள்

நாம் வீட்டில் பயன்படுத்தும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள் சமைக்கும் போது ஒட்டாமலும் அடிப்பிடிக்காமலும் நமது வேலையை குறைப்பதால் இவற்றை பயன்படுத்துகிறோம். நான்-ஸ்டிக் பாத்திரங்கள் அதிக அளவில் வெப்பமடையும் போது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களையும் வெளியிடும் தன்மையைக் கொண்டது. இதில் உள்ள பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் மற்றும் நான்-ஸ்டிக் பூச்சுகளில் உள்ள பிற நச்சுக் கலவைகள் புற்றுநோய் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியவை.

இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நாளடைவில் சிறுநீரகம் மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இவற்றிற்கு மாற்றாக ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல், வார்ப்பிரும்பு அல்லது பீங்கான் சமையல் பாத்திரங்களை உபயோகிப்பது நல்லது. நான்-ஸ்டிக்கை பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்றால் குறைந்த வெப்பத்தில் செய்யும் சமையல்களுக்கு பயன்படுத்தலாம். முடிந்தவரை எவர்சில்வர் கரண்டிகளை வைத்து நான்-ஸ்டிக்கின் மேற்பரப்பை சுரண்டாமலோ கீறாமலோ இருப்பது நல்லது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள்

தண்ணீரைக் கொண்டு செல்லவும் சேமிக்கவும் முடிந்த வரை பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்களில் பிஸ்பெனால் ஏ (BPA) மற்றும் பித்தலேட்டுகள் எனப்படும் ஹார்மோன்னை சீர்குலைக்கும் பண்புகளுக்கு பெயர் போன இரசாயனங்கள் இருக்கின்றன. இந்த நச்சுகள் வெப்பநிலை அதிகமாகும் போது கசிந்து தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக பாட்டில்களை காரில் வைத்துவிட்டு செல்லும் போது இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

சில ஆராய்ச்சி முடிவுகள் BPA இரசாயனத்தை அதிகமாக பயன்படுத்தும் போது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாக கூறுகின்றன. முடிந்தவரை கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவது சிறந்தது. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தவோ அல்லது அதிக வெப்பநிலையில் பயன்படுத்தவோ வேண்டாம்.

அலுமினிய ஃபாயில்

சிலர் உணவுப் பொருட்களை அலுமினிய ஃபாயில் சுற்றி வைக்கிறார். இது வேலையை எளிதாக்குவதாக நினைக்கிறார்கள். இன்னும் சில பேக்கிங் செய்வதற்கு இவற்றை உபயோகிக்கிறார்கள். அலுமினியம் குறிப்பாக அமில தன்மை நிறைந்த அல்லது சூடான உணவு பொருட்களில் கலந்துவிடும் அபாயம் அதிகம்.

அலுமினியத்தை அதிக அளவில் தொடர்ந்து பயன்படுத்துவது நரம்பியல் கோளாறுகள் மற்றும் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தலாம். உணவை மூடி எடுத்து செல்ல வாழை இலைகளை பயன்படுத்துவது சிறந்தது. பேக்கிங் செய்ய ஃபாயில் பேப்பரை பயன்படுத்துவதற்கு பதிலாக கண்ணாடி அல்லது பீங்கான் பேக்கிங் பாத்திரங்களை உபயோகிக்கவும்.

பிளாஸ்டிக் டப்பாக்கள்

பெரும்பாலும் டப்பர்வேர் போன்ற பிளாஸ்டிக் உணவு கொள்கலன்களில் உணவை எடுத்து செல்வது பாதுகாப்பானது என நினைக்கிறார்கள். அவற்றிலும் BPA, பித்தலேட்டுகள் மற்றும் டையாக்சின்கள் போன்ற நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை மைக்ரோவேவில் வைத்து உணவை சூடாக்கும் போது உணவில் கலக்கின்றன.

இவற்றில் புற்றுநோய்க்கான காரணிகள் இருப்பதாக சில சுகாதார நிறுவனங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. முடிந்தவரை உணவை கண்ணாடி, ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் அல்லது சிலிகான் பாத்திரங்களில் வைக்கவும். "மைக்ரோவேவ்-பாதுகாப்பானது" என குறிப்பிட்டிருந்தாலும் பிளாஸ்டிக்கில் வைத்து உணவை எப்போதும் சூடாக்காதீர்கள்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

தாவர எண்ணெய்களில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. இவற்றை எண்ணெய் தயாரிப்பில் தீவிர வெப்ப செயலாக்கத்திற்கு உட்படுத்தும் போது, இது தீங்கு விளைவிக்க கூடிய டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்கும். இது புற்றுநோய், பெருங்குடல் சார்ந்த பிரச்சனை, மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

இவற்றிற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் போன்ற குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்தி ஆரோக்கியத்தை தக்க வைக்கலாம். பலமுறை பொரிக்க அதே எண்ணெய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

வாசனை மெழுகுவர்த்திகள்

வாசனை திரவியங்கள் கலந்த மெழுகுவர்த்திகள் வீட்டில் ஒரு நல்ல சூழலை உருவாக்கலாம். ஆனால் அவை பென்சீன் மற்றும் டோலுயீன் போன்றவற்றை வெளியிடலாம். இவையும் புற்றுநோய் காரணிகள் வரிசையில் இருக்கின்றன. பொதுவாகவே மெழுகுவர்த்திகளில் பயன்படுத்தப்படும் பாரஃபின் மெழுகு எரிக்கப்படும் போது ஏற்படும் நச்சுப் புகை, சுவாசம் மற்றும் நுரையீரல் தொடர்பான புற்றுநோய்களின் அபாயத்தை கொண்டிருக்கிறது.

இவற்றுக்கு மாற்றாக தேன் மெழுகு அல்லது சோயா மெழுகுவர்த்திகள் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். நச்சுகள் இல்லாத ஒரு நல்ல நறுமண சூழலுக்கு எஸ்ஸென்ஸியல் ஆயில் டிஃப்பியூசர்களைத் தேர்வு செய்யலாம்.

பிளாஸ்டிக் வெட்டும் பலகைகள்

நாம் வீட்டில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் வெட்டும் பலகைகள் காலப்போக்கில் தேய்ந்து போய்விடுகின்றன. நாம் காய்களை வெட்டும் போது சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலந்துவிடுகின்றன. இந்த மைக்ரோபிளாஸ்டிக்கில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதித்து, புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.

முடிந்த வரை மரம் அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட வெட்டும் பலகைகளை பயன்படுத்துங்கள். வீட்டில் பயன்பாட்டில் இருக்கும் பழைய கீறப்பட்ட பிளாஸ்டிக் வெட்டும் பலகையை முற்றிலும் தவிர்க்கவும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, March 11, 2025, 19:06 [IST]
Desktop Bottom Promotion