இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!

Blood Cancer Awareness Month: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரத்தப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம் இரத்தம், எலும்பு மஜ்ஜை (Bone Marrow) மற்றும் நிணநீர் மண்டலத்தை (Lymphatic System) பாதிக்கும் புற்றுநோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.

இந்நிலையில் இந்த இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன, அவற்றின் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை மற்றும் இது எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மருத்துவரான டாக்டர். விமலாதித்தன் என்.எஸ். அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

Blood Cancer Awareness Month Doctor Explains Top 3 Blood Cancers Symptoms amp amp How Serious Is It

இரத்தப் புற்றுநோயின் வகைகள்

இரத்தப் புற்றுநோயில் முக்கியமான மூன்று வகைகள் உள்ளன. அவை லுகேமியா (Leukemia), லிம்போமா (Lymphoma) மற்றும் மல்டிபிள் மைலோமா (Multiple Myeloma) ஆகும். இவை அனைத்தும் இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்பட்டாலும், ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான நோய்களாகும்.

1. லுகேமியா (Leukemia)

லுகேமியா என்பது பெரும்பாலும் எலும்பு மஜ்ஜை போன்ற இரத்த அணுக்கள் உருவாகும் திசுக்களில் தொடங்குகிறது. இதில், அசாதாரண இரத்த அணுக்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து, ஆரோக்கியமான இரத்த அணுக்களின் செயல்பாட்டை பாதிக்கின்றன.

அறிகுறிகள்

தொடர்ந்து இருக்கும் சோர்வு, அடிக்கடி தொற்று ஏற்படுதல், காரணமில்லாத காய்ச்சல், எளிதில் உடலில் காயங்கள் ஏற்படுதல் அல்லது இரத்தக்கசிவு, தோல் வெளிர்தல் மற்றும் காரணமில்லாமல் உடல் எடை குறைதல் போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம். சில வகையான லுகேமியா வேகமாக முன்னேறலாம்; சில வகைகள் மெதுவாக வளரலாம்.

Blood Cancer Awareness Month Doctor Explains Top 3 Blood Cancers Symptoms amp amp How Serious Is It

2. லிம்போமா (Lymphoma)

லிம்போசைட்டுகள் (Lymphocytes) எனப்படும் வெள்ளை இரத்த அணுக்களில் உருவாகும் புற்றுநோய் லிம்போமா எனப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தில் (Immune System) லிம்போசைட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. லிம்போமாவின் முக்கிய வகைகள் ஹாட்ஜ்கின் லிம்போமா (Hodgkin Lymphoma) மற்றும் நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா (Non-Hodgkin Lymphoma) ஆகும்.

அறிகுறிகள்

கழுத்து, அக்குள் அல்லது தொடைப்பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் (Lymph Nodes) தொடர்ந்து அல்லது வலி இல்லாமல் வீக்கம் ஏற்படுதல், காரணமில்லாத காய்ச்சல், இரவில் அதிகமாக வியர்த்தல், உடல் எடை குறைதல், சோர்வு மற்றும் தோலில் அரிப்பு போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம்.

நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் ஏற்பட்டாலே அது புற்றுநோய் என்று அர்த்தமில்லை. தொற்று காரணமாகவும் வீக்கம் ஏற்படலாம். ஆனால் வீக்கம் நீண்ட நாட்கள் நீடித்தாலோ, பெரிதாகிக் கொண்டிருந்தாலோ அல்லது காரணம் தெரியாமல் இருந்தாலோ மருத்துவரிடம் பரிசோதனை செய்வது அவசியம்.

3. மல்டிபிள் மைலோமா (Multiple Myeloma)

மல்டிபிள் மைலோமா என்பது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களில் (Plasma Cells) உருவாகும் ஒரு வகை புற்றுநோயாகும். இது இயல்பான இரத்த அணுக்கள் உருவாவதை பாதிப்பதுடன், எலும்புகள் மற்றும் சிறுநீரகங்களையும் பாதிக்கக்கூடும்.

அறிகுறிகள்

தொடர்ந்து இருக்கும் எலும்பு வலி, சோர்வு, அடிக்கடி தொற்று ஏற்படுதல், உடல் பலவீனம் மற்றும் காரணமில்லாமல் எலும்பு முறிவு ஏற்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.

இரத்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

"பல சந்தர்ப்பங்களில் இரத்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியாது. இரத்த அணுக்கள் அல்லது நோய் எதிர்ப்பு செல்களில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் (Genetic Changes) அவை கட்டுப்பாடின்றி வளரவும் பெருகவும் காரணமாக இருக்கலாம்.

வயது அதிகரித்தல், முன்பு கீமோதெரபி (Chemotherapy) அல்லது கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy) பெற்றிருத்தல், குடும்பத்தில் இதுபோன்ற புற்றுநோய் பாதிப்பு இருப்பது மற்றும் சில நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்புகள் போன்றவை சில வகையான இரத்தப் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். ஆனால், ஒருவருக்கு இதுபோன்ற அபாயக் காரணிகள் இருப்பதால் அவருக்கு இரத்தப் புற்றுநோய் நிச்சயம் ஏற்படும் என்று அர்த்தமில்லை" என்று டாக்டர் கூறினார்.

இரத்தப் பரிசோதனையில் இரத்தப் புற்றுநோயை கண்டறிய முடியுமா?

"முழுமையான இரத்தப் பரிசோதனை (Complete Blood Count - CBC) போன்ற வழக்கமான பரிசோதனைகளில் சில மாற்றங்கள் இருந்தால், லுகேமியா போன்ற நோய்கள் குறித்து மருத்துவருக்கு சந்தேகம் ஏற்படலாம்.

ஆனால், அனைத்து வகையான இரத்தப் புற்றுநோய்களையும் ஒரு இரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியாது. சந்தேகிக்கப்படும் நோயைப் பொறுத்து ஸ்கேன் (Scan), சிறப்பு இரத்தப் பரிசோதனைகள், நிணநீர் முடிச்சு பரிசோதனை அல்லது எலும்பு மஜ்ஜை பரிசோதனை (Bone Marrow Examination) போன்ற கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படலாம்" என்று டாக்டர் கூறினார்.

இரத்தப் புற்றுநோய் எவ்வளவு தீவிரமானது?

"இதற்கு ஒரே பதில் இல்லை. இரத்தப் புற்றுநோயில் பல்வேறு வகைகள் மற்றும் துணை வகைகள் உள்ளன. சில வகைகள் வேகமாக முன்னேறி உடனடி சிகிச்சை தேவைப்படலாம். மற்ற சில வகைகள் மெதுவாக வளர்ந்து பல ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும்.

நோயின் வகை, துணை வகை, நோய் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நிலை மற்றும் சிகிச்சைக்கு உடல் அளிக்கும் பதில் போன்ற பல காரணிகளைப் பொறுத்து நோயின் தீவிரமும் சிகிச்சை முடிவுகளும் மாறுபடும்.

சிகிச்சையில் கீமோதெரபி (Chemotherapy), இலக்கு சிகிச்சை (Targeted Therapy), நோய் எதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy), சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கதிர்வீச்சு சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை (Stem Cell Transplantation) மற்றும் சில வகையான இரத்தப் புற்றுநோய்களுக்கு CAR-T Cell Therapy போன்ற புதிய சிகிச்சை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன" என்று டாக்டர் கூறினார்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

"தொடர்ந்து காரணமில்லாமல் சோர்வு, காய்ச்சல், அடிக்கடி தொற்று ஏற்படுதல், வழக்கத்திற்கு மாறாக இரத்தக்கசிவு அல்லது உடலில் காயங்கள் ஏற்படுதல், காரணமில்லாத உடல் எடை குறைதல், தொடர்ந்து எலும்பு வலி அல்லது நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தாலே புற்றுநோய் என்று அர்த்தமில்லை. ஆனால், மருத்துவப் பரிசோதனை மூலம் அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியும்.

இரத்தப் புற்றுநோய் என்பது ஒரே ஒரு நோய் அல்ல; பல்வேறு வகைகளைக் கொண்டது. ஒரு அறிகுறி இருப்பதால் உடனடியாக புற்றுநோய் என்று பயப்பட வேண்டியதில்லை. ஆனால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து நீடித்தால், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், தேவையான சிகிச்சையை சரியான நேரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்" என்று டாக்டர் கூறினார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, September 9, 2026, 15:53 [IST]
Desktop Bottom Promotion