For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!!

By Karthikeyan Manickam
|

இவ்வுலகில் உள்ள எல்லா விலங்குகளுமே தங்களுக்கென்று சில தகவல் தொடர்புக்கான திறமைகளைப் பெற்றுள்ளன. அந்த வகையில் நம் வீட்டுச் செல்லப் பிராணிகளும் நம்மிடம் தாவிக் குழைந்து ஏதோ சொல்லத் துடிப்பதைக் கவனித்துள்ளீர்களா?

ஒரு நாய் தன் வாலை ஆட்டிக் கொண்டு குழைவதும், ஒரு பூனை தன் முன்னங்காலைக் கொண்டு அழகாக ஹேண்ட் ஷேக் செய்வதும்... இப்படி நம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு மொழி தான்! ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

அப்படி என்ன தான் நம்மிடம் அவை பேச விரும்புகின்றன? அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கம்பிகளைக் கடிக்கும் வெள்ளெலி

கம்பிகளைக் கடிக்கும் வெள்ளெலி

ஒரு சிறு கூண்டுக்குள்ளே அடைபட்டிருக்கும் வெள்ளெலி, தனக்கு போரடித்தாலோ தன்னை யாரும் கவனிக்காமல் இருந்தாலோ அந்தக் கூண்டிலுள்ள கம்பிகளைப் பிராண்டித் தின்னுமாம். இதைத் தவிர்க்க, வேறு ஒரு கூண்டை அதற்கு ஏற்பாடு செய்து, அது விளையாடுவதற்கு சில பொம்மைகளையோ சிறிய டப்பாக்களையோ அதற்குள் போட்டு வைக்க வேண்டும். முடிந்தால், அடிக்கடி அதை கூண்டுக்கு வெளியே கொண்டு சென்று விளையாட வைக்க வேண்டும்.

கால்களில் தஞ்சம் புகும் நாய்

கால்களில் தஞ்சம் புகும் நாய்

தீபாவளி அல்லது புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்கும் போது, நம் வீட்டு நாய் அரண்டு போய் மிரட்சியுடன் நம் கால்களுக்கிடையில் தஞ்சம் புகுந்து கொள்ளுமே! எதற்காக? ஒரு அன்பு கலந்த பாதுகாப்பைத் தேடித் தான்! அதேபோல், நாம் வெளியில் போய்விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பும் போது, ஒருவிதமான சத்தத்துடன் நம் மேல் பாய்ந்து வந்து விழும் நம் செல்ல நாய். இச்செய்கை, 'இவ்ளோ நேரம் ஏன் என்னைத் தனியா விட்டுட்டு போனீங்க?'ன்னு அது நம்மிடம் கேட்பது போலிருக்கும்.

ருசி தேடும் நாய்

ருசி தேடும் நாய்

பிஸ்கட், பன் போட்டால் அவற்றை சாதாரணமாக சாப்பிடும் நம் வீட்டுச் செல்ல நாய், 'அவ்ளோ தானா, வாய்க்கு ருசியா சிக்கன் மட்டன் எதுவும் கிடையாதா?'ன்னு கேட்கிற மாதிரி ஒரு லுக்கு விடும் பாருங்க. நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அது எதிர்பார்க்கிற மாதிரி நாமும் சிக்கனோ மட்டனோ சாப்பிட வைத்தால், அது நம்மிடம் காட்டும் அன்பே தனிதான்!

மூக்கால் கொஞ்சும் முயல்

மூக்கால் கொஞ்சும் முயல்

முயல்கள், தாம் மிகவும் சந்தோஷமாக இருப்பதைத் தங்கள் மூக்கினால் நம்மை முணுமுணுவென்று உரசுமாம். அதேபோல், நல்ல மனநிலை இருக்கும் போது, வாயில் எதுவுமே இல்லாதபோதும் எதையோ மெல்லுவது போல் நடிக்குமாம் இந்த முயல்கள்!

சத்தம் தரும் பூனை

சத்தம் தரும் பூனை

நாய்களுக்கு அடுத்தபடியான ஒரு வளர்ப்புப் பிராணி பூனை என்று சொல்லலாம். அதன் 'மியாவ்' சத்தத்தை மிமிக்ரி செய்யாதவர்களே இருக்க முடியாது. ஆனால், அந்த 'மியாவ்' சத்தத்திற்குள்ளும் பல மொழிகள் உண்டு. பசியால் பால் தேடும் போதும், இரை தேடும் போதும், ஒவ்வொரு விதமான ஒலியை பூனைகள் எழுப்புகின்றன.

கண்களை மெதுவாக இமைக்கும் பூனை

கண்களை மெதுவாக இமைக்கும் பூனை

சில நேரம், நாம் ஒரு பூனையை சற்றே நெருங்கி உற்றுப் பார்க்கும் போது, அது ஸ்லோ மோஷனில் தன் கண்களை இமைப்பது தெரியும். அப்பூனை நம்மை முழுவதுமாக நம்புகிறது என்று இதற்கு அர்த்தமாம்.

தரையில் புரளும் குதிரை

தரையில் புரளும் குதிரை

தாங்கள் மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருப்பதை உணரும் குதிரைகள், அதே இடத்தில் மண்ணில் உருண்டு புரளுமாம். தன் தோலில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், அவை இவ்வாறு மண்ணில் புரளுவதுண்டு. ஆகவே அதை உடனடியாகக் கவனித்து நாம் சரிசெய்ய வேண்டும்.

நம் வளர்ப்புப் பிராணிகளின் மொழிகள் சில சமயங்களில் நமக்குப் புரியாவிட்டாலும், அவை தம் அன்பையும், நட்பையும், விசுவாசத்தையும் நம்மிடம் பரிமாறிக் கொள்ளத் தான் இப்படிச் செய்கின்றன என்பதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Secret Languages Of Pets

Did you ever wonder what your pets are saying to you? Do you wish you could understand the secret languages of your pets? 
Story first published: Saturday, May 3, 2014, 18:27 [IST]
Desktop Bottom Promotion