For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்டி என் புள்ளைய நானே சாவக்கொடுத்துட்டேனே...... My Story #216

திருமணத்திற்கு பின்பு பெண்கள் சந்திக்கிற கொடுமைகள் ஒவ்வொன்றும் சொல்லி முடியாது, கொடுமை தாங்காமல் தீக்குளித்த பெண்ணொருவரின் உண்மைக்கதை.

|

அப்பா உனக்கு எப்பேர்ப்பட்ட பையன் பாப்பேன் தெரியுமா? இந்த டயலாக் நான் நடக்கத்துவங்கியதிலிருந்து அப்பாவின் வாயிலிருந்து உதிரும். பெரும்பாலான இந்திய குடும்பங்களைப் போலவே தான் எங்களது குடும்பமும். அம்மா, அப்பா நான், இரண்டு தங்கைகள்.

சராசரியாக ஒரு பெற்றோருக்கு என்ன கனவு இருக்கும். இங்கே என்ன மகளை படிக்க வைத்து பட்டம் வாங்க வைக்க வேண்டும் என்றா நினைக்கிறார்கள். காலாகாலத்தில் ஊரே மெச்சுர மாதிரி ஜாம் ஜாம்னு கல்யாணத்த பண்ணிடனும்.... மூணு பொம்பளப்பிள்ளைங்க வேற அடுத்தடுத்து பண்ணா தான் கொஞ்சம் மூச்சு விடவாவது நேரமிருக்கும். எங்கள் வீட்டிற்கு வருபவர்கள், உறவினர்கள், அண்டை வீட்டினர் தவறாமல் உதிர்க்கும் அட்வைஸ் இது.

அப்பா அவருடைய வசதிக்கு ஏற்ப மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை எனக்கு தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். பெற்றோரின் கனவு, எல்லார் முன்னாலும் மேடையில் மகள் கழுத்தில் தாலி ஏறுவதோடு நின்று விடுகிறதோ என்னவோ?

அப்பாடா பிள்ளைய கட்டிக் கொடுத்தாச்சு இதோட நம்ம கடமை முடிஞ்சது. என்று அவர்களின் திருப்தி தான் மகள்களுக்கு பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரி நீயே சொல்லு :

சரி நீயே சொல்லு :

அப்பா எங்களை எப்போதுமே அம்மா என்று தான் அழைப்பார். கடைசி பிள்ளை எப்போதும் செல்லமாய் இருக்கும், பல வீடுகளில் கடைசி குழந்தைக்கு செல்லப்பெயர் எல்லாம் இருக்கும் என்று சொல்வார்கள் ஆனால் எங்கள் வீட்டில் அவளும் அப்பாவுக்கு அம்மா தான்.

ஸ்கூலுக்கு கிளம்பீட்டிங்களாம்மா, சாப்டீங்களாம்மா என்று தான் எப்போதும் அவர் வாயிலிருந்து வரும். ஞாயிற்றுக் கிழமைகளில், அல்லது இரவு உணவுக்கு பிறகு ஓய்வாக உட்கார்ந்திருக்கும் நேரங்களில் உங்களுக்கு எப்டிப்பட்ட பையன் வேணும்னு சொல்லுங்கம்மா என்பார்.... மூவரையும் உட்கார வைத்து எதோ பெரிய சாகச கதைகளை சொல்வது போல எங்களது திருமண விழா எப்படி நடக்கும், யாரையெல்லாம் அழைப்பார், மாப்பிள்ளையை எங்கிருந்து தேடி கண்டுபிடிப்பார், மாப்பிள்ளை எப்படியிருப்பான் என்று விவரித்துக் கொண்டேயிருப்பார்.

வாழ்நாள் லட்சியம் :

வாழ்நாள் லட்சியம் :

விவரமறியா வயதுகளில் அப்பா சொல்வதை வாயை பொளந்து கொண்டு கேட்போம், அப்பாவின் வாழ்நாள் லட்சியம் அது தான் போல.... அப்பா பாரு எப்பவும் நம்மல பத்தியே யோசிக்கிது.... நம்ம அப்பா மாதிரி யாருமே இருக்கமாட்டாங்க என்னக்கா என்பாள் சின்னவள்.

ஒன்னுக்கு மூணு பொம்பள பிள்ள என்று சொல்லி சொல்லியே சிறு வயதில் மிகவும் கட்டுப்பாடாக, வறுமையிலும் பட்ஜெட்டிலும் இறுக்கி பிடித்து வாழ்க்கையை ஓட்டினோம்.

வரன் :

வரன் :

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு எனக்கு வரன் பார்க்கப்பட்டது. மூன்று பேரில் யாராவது ஒருவரையாவது டிகிரி படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க வில்லை. பல வரன்கள் வந்தது, மாசம் பதினைந்தாயிரம் சம்பளம், சொந்த வீடு இருக்கிறது.என்று சொல்லி திருமணம் செய்து வைக்க சம்மதித்தார்கள்.

அப்பா எதிர்ப்பார்த்த அளவு இல்லையென்றாலும், எங்களால் முடிந்தளவு திருமணம் நடந்தேறியது.

கனவுகள் :

கனவுகள் :

18 வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது அப்படியென்ன பெரிதாய் கனவு இருந்துவிடப்போகிறது..... ஒரு வித பயம், புது இடம் புது மனிதர்களை பழகிக் கொள்ளவே தயக்கம் என்று தான் இருந்தது. அதுவும் வெளியுலகத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் இல்லை.

அப்பா பாத்துப்பார், அப்பாட்ட சொன்னா தீர்த்து வைப்பார், அப்பா தான் வந்து கூட்டிட்டு போகணும் என்ற ரீதியில் தான் எங்களை அம்மா வளர்த்தெடுத்தார்.

அதிர்ச்சிகள் :

அதிர்ச்சிகள் :

நான் நினைத்தது போலவோ அல்லது அப்பா நினைத்தது போலவோ என் திருமண வாழ்க்கை அமையவில்லை அடுத்தடுத்து பேரிடியாய் விஷயங்கள் உடைபட்டது. எங்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் மாதம் ஐந்தாயிரத்திற்கும் குறைவான சம்பளம். இருப்பது மூதாதயர்கள் வீடு, இருக்கிற 500 சதுர அடிக்கு நான்கு தாத்தாக்களின் பதிமூன்று மகன்களும் அவர்களின் பேரப்பிள்ளைகளும் பங்குக்கு நிற்கிறார்கள்.

இதில் பெண்களும் சேர்க்கப்பட்டால் எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

Image Courtesy

வேலை :

வேலை :

ஒப்பந்த காலம் முடிந்தது, நோகாமல் வீட்டிற்கு வந்து உட்கார்ந்து கொண்டார் கணவர். அத்தை, மாமா, கணவர், நான் என நான்கு பேரும் அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏங்க நான் வேணா பக்கத்துல எங்கயாவது வேலைக்கு போட்டுமா? பாவம் வயசான காலத்துல மாமா எப்டி வேலைக்கு போக முடியும்? என்றேன்.

ஏன் எவன்கூட படுக்குறதுக்கு ப்ளான் போடுற? முதல் கேள்வியிலேயே சுருக்கென்று தைத்து விட்டார். பதறித்துடித்தேன்..... ஐயையோ என்னடா இது இப்படி அபாண்டமாக பேசுகிறாரே நான் எந்த தவறும் செய்யவில்லை அப்படியான எண்ணமும் என்னிடத்தில் இல்லை, குடும்ப கஷ்டத்தை பங்கெடுக்க நினைத்ததற்கு இப்படியொரு பெயரா?

ஆயிரம் ரூபாய் :

ஆயிரம் ரூபாய் :

எங்கள் பகுதியில் இருந்த பள்ளிக்கு வாட்ச் மேனாக மாமனார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் மாதாம் 3500 சம்பளம். அதிலும் அவருக்கு சிகரெட், நண்பர்களுடன் சீட்டாட, நொறுக்குத்தீனிக்கு என ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொண்டு மீதியைத் அத்தையிடம் கொடுப்பார்.

விடுமுறை எடுத்ததற்கு, தாமதமாக வந்ததற்கு எல்லாம் பிடித்தம் செய்யப்பட்டாலும் அவரது ஆயிரம் ரூபாயில் எந்த குறையும் இருக்காது. எப்படியும் கிட்டதட்ட இரண்டாயிரம் ரூபாய் வரை கைக்கு கிடைக்கும். இதில் மாதம் முழுவதும் நாங்கள் சாப்பிடுவது உட்பட எல்லா அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

கொடுமைகள் :

கொடுமைகள் :

மக கஷ்டப்படறாளேன்னு உங்கப்பன்காரன் எதாவது கொடுக்குறானா? என்ன உங்கப்பன் உன்னைய கட்டிக் கொடுத்ததோட தலைமுழுகிட்டானா? திரும்பி கூட பாக்க மாட்றான் என்று ஜாடை மாடையாக பேச ஆரம்பித்தார் அத்தை.

ஒரு வேளை சாப்டலன்னா ஒண்ணும் கொறஞ்சு போய்டாது.... எனக்கு காலை உணவு நின்றது. இந்த லட்சணத்தில் கணவருக்கு குடிப்பழக்கமும் தொற்றிக் கொண்டது. வாட்ச்,செல்போன், வண்டி,நகை என ஒவ்வொன்றாக விற்று குடிக்க ஆரம்பித்தார்.

அப்பா :

அப்பா :

மாமனாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கினார். வருகிற சொற்ப வருமானமும் நின்று போனது. நிலைமை கைமீறிச் சென்று விட்டது.

நண்பர்களுடன் சேர்ந்து பிஸ்னஸ் செய்யப் போகிறேன் உன் வீட்டிலிருந்து ரெண்டு லட்சத்தை வாங்கிக் கொண்டு வா என்று ஆரம்பித்தார் கணவர். இரண்டு லட்சமா? திடீரென்று இத்தனை பணத்திற்கு எங்கே போவது அப்பாவிடம் கேட்டால் ஆடிப்போய் விட மாட்டார். ஒவ்வொரு ரூபாயையும் எப்படி மிச்சப்படுத்தலாம் என்று பட்ஜெட் போட்டு இறுக்கி பிடித்து ஒரு மாதத்தில் ஐநூறு ரூபாய் மிச்சப்படுத்தினாலே பெரும் சாதனையாக கருதும் அப்பாவிடம் திடிரென்று இரண்டு லட்சத்தை எப்படி கேட்பது.

வேலைக்கு ஆரம்பம் :

வேலைக்கு ஆரம்பம் :

பிறந்ததிலிருந்து ஏன் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அப்பாவின் கனவாக என்னுடைய திருமணம் இருந்திருக்கிறது. மகளை நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பல நாள் கனவு நிறைவேறிவிட்டது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு அடுத்தடுத்து அவருக்கு கடமைகளும் இருக்கிறது மீண்டும் அவருக்கு நான் தொல்லை கொடுக்க விரும்பவில்லை.

வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன், இப்போது வேறு வழியில்லை என்பதால் ஒரு வழியாக சம்மதித்தார் கணவர்.

அடி உதை :

அடி உதை :

முன்னால் வீட்டிற்கு வெளியே குடித்துக் கொண்டிருந்தவர் இப்போது வீட்டிற்குள்ளேயே குடிக்க ஆரம்பித்துவிட்டார். தினம் தினம் அடி உதை தான்கிட்டத்தட்ட சைக்கோ போல நடந்து கொள்ள ஆரம்பித்தார் அடிக்கும் போது எங்கே படுகிறது என்றெல்லாம் தெரியாது. கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து தூக்கி வீசுவது கில்லுவது, கடிப்பது என ரணக்கொடூரமான தாக்குதல்கள் அரங்கேறும்.

உங்க பையன் இப்டி போட்டு அடிக்கிறாரு ஒரு வார்த்தை வந்து கேட்டீங்களா என்று கேட்டால்.... புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரமிருக்கும் என்று நழுவிக் கொண்டு விடுவார்கள் கணவனைப் பெற்றவர்கள்.

எல்லை மீறியது :

எல்லை மீறியது :

காலை ஒன்பது மணிக்குச் சென்றால் மாலை ஐந்து மணிக்கு திரும்பும் வரையில் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும். சாப்பாட்டு இடைவேளை பதினைந்து நிமிடங்கள் கொடுக்கப்படும் அப்போது மட்டும் உட்காரலாம். பணிச்சுமை, வீட்டில் கணவனின் அடி உதை, ராசியில்லாத பொண்ணு இன்னும் ஒரு புள்ள வவுத்துல வர்ல.... அதான் உங்கப்பன் போய் தொலையுதுன்னு இங்க தள்ளிவிட்டானா என்று வார்த்தைகளால் வதைத்தெடுப்பார்.

நீ கேக்கலன்னா என்ன நான் போய் கேக்குறேன், உங்க பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு நினச்சா ரெண்டு லட்சம் கொடுங்க அப்பதான் உங்க பொண்ணோட நான் வாழ்வேன்னு சொல்லிட்டு வரேன் என்றார்.

அப்பாகிட்ட சொன்ன அவ்ளோதான் :

அப்பாகிட்ட சொன்ன அவ்ளோதான் :

இத்தனை காலமும் வெளியில் சொல்லாமல் அடியை வாங்கிக் கொண்டது அப்பாவிற்கு தெரியக்கூடாது என்பதற்குத் தான் அதற்கே உலை வைக்கிறானே என்று நினைத்துக் கொண்டு அப்பாட்ட சொன்ன அவ்ளோ தான்.... அவரயாச்சும் நிம்மதியா வாழ விடுங்க எங்கோ ஒரு மூலைல என் பொண்ணு இருக்கான்ற திருப்தி அவருக்கு இருக்கட்டும் என்று கதறினேன்.

சம்பள நாள் :

சம்பள நாள் :

வீட்டிற்கு நுழைந்ததும் சம்பளம் எங்க டி? இன்னக்கி போடலங்க..... நேரமாகிடுச்சுன்னு ஆபிசர் கிளம்பிட்டாரு இதுக்கு தான ப்ளான் பண்ண.... நாளைக்கு சம்பளம் வாங்கிக்க பேங்க் வர சொன்னாருன்னு சொல்லிட்டு போவ அப்டியே அவன் கூட ஓடிப் போய்ட்லாம்னு தான் ப்ளானு... தெரியும்டி உன்னையபத்தி டெய்லியும் மினுக்கிட்டு அலங்காரம் பண்றப்பவே நீ இப்டித்தான் போவன்னு தெரியும் என்று அடிக்கப் பாய்ந்தார்.

என்ன நினைத்தேனோ யோவ் நிறுத்துயா..... இன்னும் எத்தனவாட்டி இப்டி சாவடிப்ப ஒரே அடியா போய் சேர்ந்திடறேன் என்று சொல்லி அருகில் இருந்த மண்ணெணையை ஊற்றி தீவைத்துக் கொண்டேன். குப்பென்று பற்றியெறிந்தது.

அணிந்திருந்த சேலை கருகி தோலோடு ஒட்டிப் போனது.

மருத்துவ மனையில் :

மருத்துவ மனையில் :

உதடுகள் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயம் முகம் முற்றிலுமாக சிதைந்து விட்டது, சுத்தமாக கண் தெரியவில்லை கண் இமைகள் எல்லாம் கருகிவிட்டிருந்தது. யாருக்கு தெரியக்கூடாது என்று நினைத்தேனோ அவர் வாசலில் உட்கார்ந்து மார்பில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.

என்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தா கூட்டி வந்திருப்பேனே.... இப்டி என் புள்ளைய நானே சாவக்கொடுத்துட்டேனே என்ற அப்பாவின் புலம்பல் காதில் விழுந்தது.

Image Courtesy

இங்க தான் இருப்பா :

இங்க தான் இருப்பா :

முழுதாக ஆறு மாதங்கள் கிட்டத்தட்ட பன்னிரெண்டு அறுவை சிகிச்சைகள். உயிர் பிழைத்தேன், வலது கண்ணில் ஓரளவுக்கு பார்வை கிடைத்தது. புதிய வாழ்க்கை எப்படியிருக்கும் என்றெல்லாம் தெரியாது, ஆனால் அந்த வீட்டில் கணவனுடன் வாழக்கூடாது என்று மட்டும் முடிவு செய்து கொண்டேன்.

வீட்டில் சொன்னேன்..... ஊரு என்ன சொல்லும் வாழவெட்டியா பொண்ணு பொறந்த வீட்டுக்கே வந்து உக்காந்துட்டான்னு பேசமாட்டாங்களா....அதே ஊருதான்ம்மா என்னைய இப்டி முடமாக்கிச்சு. என் புள்ள இனி இங்க தான் இருக்கும் முந்திக் கொண்டு அப்பா சொன்னார்.

Image Courtesy

 செய்திகளில் :

செய்திகளில் :

போலீஸ் புகார் அளிக்கப்பட்டிருந்தது, சில தொண்டு நிறுவனங்களிலிருந்து என்னை அணுகி பேச வந்தார்கள், பிசியோதெரபி,கவுன்சிலிங் கொடுப்பதாய் எல்லாம் சொன்னார்கள், வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாய் சொன்னார்கள்.

தெருவில் இறங்கி நடந்தால் பார்த்து விட்டு முகத்தை சுழிப்பதும் பயந்து கொண்டு ஒதுங்குவது, அறுவறுப்பாய் பார்ப்பதும் பழகிப்போனது, பேருந்தில் நிம்மதியாய் பயணிக்க முடிந்தது.

யதார்த்தமாய் சம்பவம் நடந்த அன்று வெளியான செய்தித்தாளை படிக்க நேர்ந்தது. ‘கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை', ‘சம்பளப் பணத்தை கொடுக்கமாட்டேன் என பிடிவாதம் பிடித்த மனைவியிடம் கணவர் சம்பளப் கேட்டதால் தீக்குளிப்பு', ‘பணத்தகராறில் பெண் தீக்குளிப்பு'.....

காரி உமிழ்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women Who Burnt Herself Because Domestic violence

Women Who Burnt Herself Because Domestic violence
Desktop Bottom Promotion