For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தைய பெத்துக்கிட்டா இப்டித்தான்! My Story #193

அவளுக்கு திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்து விட்டிருந்தது, அதன் பிறகு அந்த காதலர்களின் வாழ்க்கையும், அந்த குழந்தையின் வாழ்க்கையும் எப்படியிருந்தது என்பதைச் சொல்லும் கதை.

|

அவனை முதன் முதலாக பன்னிரெண்டாம் வகுப்பில் தான் பார்த்தேன், ஒன்பதாம் வகுப்போடு அட்மிஷன் முடிந்தது, மேற்கொண்டு எந்த வகுப்புகளுக்கும் எங்கள் பள்ளியில் அட்மிஷன் கொடுக்கமாட்டார்கள், கேட்டால் ரிசல்ட் பாதிக்கும் என்று சாக்கு சொல்வார்கள். பன்ன்னிரெண்டாம் வகுப்பிற்காக அடிமாடுகளாக எங்களை ஒன்பதாம் வகுப்பிலிருந்தே தயார்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது பின்னர் தான் புரிந்தது.

இந்த சூழ்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பின் போது, அதுவும் வகுப்புகள் எல்லாம் ஆரம்பித்து சரியாக ஒரு மாதம் கழித்து அவன் வந்து சேர்ந்தான். ஏற்கனவே பதினோராம் வகுப்பு பாதியிலிருந்தே பன்னிரெண்டாம் வகுப்பு எடுக்க ஆரம்பித்திருந்தாலும் அதிகாரப்பூர்வமாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கான வகுப்பறையில் உட்கார்ந்து ஒரு மாதம் ஆகியிருக்கும் சூழ்நிலையில் தான் வந்து சேர்ந்தான்.

எங்கள் வகுப்பறையில் இருந்த எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், யாராக இருக்கும் எப்படி பன்னிரெண்டாம் வகுப்பில் சேர இவனுக்கு அனுமதி கொடுத்தார்கள். என்ன காரணத்தால் பள்ளி மாற்றியிருப்பான், படிப்பில் படுகெட்டிக்காரனாக இருந்தால் ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து விலக அனுமதித்திருக்கமாட்டார்கள். சற்றே சுமாராகத்தான் படிப்பான் என்றால் இங்கே அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள். அன்றைக்கு வகுப்பில் எல்லாரும் அவனைப் பற்றி தான் பேச்சு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமை :

தனிமை :

முதல் இண்ட்ரவல் ப்ரேக்கில் போய் அவனிடம் பேசலாம் என்று நினைத்தால் வெளியில் போய்விட்டிருந்தான் சரியாக வகுப்பு ஆரம்பிக்கும் போதே உள்ளே வந்தான். இதே போலத்தான் சாபாட்டு இடைவேளையின் போதும், எங்கே போகிறான் என்ன செய்கிறான் என்பது யாருக்கும் தெரியாமல் மர்மமாகவே இருந்தது.

இப்படி ஒரு வாரம் கடந்தது, வகுப்பிற்கு வரும் ஆசிரியர்களுக்கு எல்லாம் பரிச்சயமாகிவிட்டான். முதல் மாதப் பரிட்சை எப்போதும் முதல் மதிப்பெண் வாங்கும் தோழியை விட அதிகமாக மதிப்பெண் பெற்று முதல் ரேங்க் எடுத்திருந்தான். இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமானால் மொழிப்பாடங்களைத் தவிர மற்ற அனைத்திலும் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தான்.

நீ ஏன் இப்டி இருக்க ? :

நீ ஏன் இப்டி இருக்க ? :

இதற்கு பிறகு சொல்லவா வேண்டும் ஆசிரியர்கள் எல்லாரும் அவனை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். வகுப்பில் யாருடனும் பேசமாட்டான், யாராவது வழியச் சென்று பேசினால் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்,சிரிக்கும் போது அளவோடு சிரிப்பான், ஒரு இன்ச் கூட அதிகமாக இருக்காது. அவன் குரல் எப்படியிருக்கும் என்று கூட எங்களுக்கு தெரியாது.

ஒரு நாள் மாலை ஸ்டடி ஹவரில் எல்லாரும் க்ரவுண்டில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க ஒரு சில மாணவர்கள் மட்டும் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தோம். அப்போது, தான் அவனிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பள்ளியில் மூன்று மாதங்களாக தொடர்ந்து பார்த்துக் கொண்டாலும் அப்போது தான் முதன் முதலாக பேசுகிறேன்.

இதை எப்படி கையாளுகிறான் :

இதை எப்படி கையாளுகிறான் :

முதலில் பேசத் தயங்கியவன் பின் கொஞ்சம் கொஞ்சமாக சகஜமானான். எண்களை பரிமாறிக் கொண்டோம். ஒரு வாரத்தில் என்னுடன் சற்று அதிகமாக பேசும் நபராகிவிட்டான், ஒரு நாள் யதார்த்தமாக பேசும் போது அம்மா அப்பாவைப் பற்றி கேட்க முகமே மாறிவிட்டது. எழுந்து வெளியே சென்று விட்டான்.

அதன் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி கேட்கவேயில்லை. வீட்டிற்குச் சென்றதும், மாலையில் போனில் அப்படி எழுந்து போனதற்கு மன்னிப்பு கேட்டு பேசினான், அப்போது சொன்ன விஷயம் இந்த சிறிய வயதில் எப்படி இதையெல்லாம் கையாளுகிறான் என்ற ஆச்சரியத்தை கொடுத்தது அதோடு அவனின் இன்னொரு முகமும் வெளிப்பட்டது.

நீ வேணும் :

நீ வேணும் :

அம்மாவும் அப்பாவும் காலேஜ் டேஸ்ல இருந்தே லவ் பண்ணியிருக்காங்க கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே நான் பொறந்துட்டேனாம், அம்மா கர்ப்பமா இருந்தப்பவே பாட்டி வீட்ல அம்மாவ சேத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க, அப்பாவும் அம்மாவும் மட்டும் தனியா இருந்திருக்காங்க, அப்போ நான் பொறந்தப்போ எதோ லிவர் டிசீஸ் இருக்கு பேபி ஹெல்தியா இல்லன்னு சொல்லியிருக்காங்க அதோட கால் வேற எதோ ரொம்ப ஒல்லியா இருந்துச்சாம் அம்மாவுக்கு என்னைய புடிக்கவேயில்லையாம்.

அப்பா குழந்தைய வளர்க்கலாம்னு சொல்றப்போ அம்மா வேண்டாம்னு சொல்லியிருக்காங்க இதனால ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம், அப்பா சொல்ல சொல்ல கேக்காம அம்மா என்னைய ஒரு ஹோம்ல சேத்துட்டாங்க, குழந்தையோட வந்தா தான் உன்னைய கல்யாணம் பண்ணிப்பேன்னு அப்பா சொல்லவும் அம்மாவுக்கு பயங்கர கோபம் அப்பாவ விட்டும் போய்ட்டாங்க இப்போ எங்கயிருக்காங்க என்ன பண்றாங்கன்னு தெரியாது.

அப்பா :

அப்பா :

அப்பறம் ஹோம்லயிருந்து அப்பா கூட்டிட்டு வந்தாங்க ஏற்கனவே ஹோம்ல நீங்க தான் அப்பான்றதுக்கு என்ன அத்தாட்சின்னு சொல்லி கொஞ்சம் பிரச்சனையாகியிருக்கு அங்கயிருந்து சண்ட போட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா இது யாரோட குழந்தை, சொந்தக்காரங்கட்ட இந்த குழந்தைய என்னன்னு சொல்லி காட்றது.

என் புள்ள கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு குழந்தைக்கு அப்பனாய்ட்டான்னு சொல்லவா? இதச் சொன்னா எந்த பொண்ணாவது கல்யாணத்துக்கு சம்மதிப்பாளா... வெளிய யாராவது நம்ம குடும்பத்த மதிப்பாங்களா.... கல்யாணம் பண்ணி பொண்ணோட வந்திருந்தாளாவது, என்ன பண்றது பையன் ஆசப்பட்டுட்டான் அதான் கட்டிவச்சிட்டோம்னு சொல்லலாம் நீ என்னடான்னா ஒரு குழந்தையோட வந்து நிக்கிற கேட்டா அவ என்னைய விட்டு போய்ட்டான்னு சொல்ற, இந்த குழந்தை வேண்டாம்னு அப்பா ஃபேமிலில இருக்குறவங்க எல்லாரும் சொல்லிருக்காங்க

மீண்டும் அனாதை :

மீண்டும் அனாதை :

அவங்க எதிர்ப்பையும் மீறி அப்பா ஒரு ஆறு மாசம் வீட்ல வச்சிருந்தாங்க, அப்பறம் ரொம்ப எதிர்க்குறாங்கனதும் வேற வழியில்லன்னு சொல்லி ஒரு ஹோம்ல சேர்த்தாங்க டெய்லி என்னைய வந்து பாத்துட்டு போறதுன்னு போச்சு. அப்பறம் அப்பாவுக்கு கல்யாணமாகி குழந்தையும் பொறந்துருச்சு கொஞ்சம் கொஞ்சமா அப்பா என்னைய பாக்க வர்றது கொறஞ்சது.

அன்னைக்கு ஸ்கூல்ல எஸ்கர்சன் போறதுக்கு ஃபீஸ் கேட்டிருந்தாங்க அப்பா கொடுக்குறேன்னு சொல்லியிருந்தாரு ஆனா வரவேயில்ல சரி வீட்லயே போய் வாங்கிடலாம்னு வீட்டுக்கு போனா அவரோட வொய்ஃப் இருந்தாங்க.

ஊர வீட்டே வந்துட்டேன் :

ஊர வீட்டே வந்துட்டேன் :

அப்பாவ பாக்கணும்....ன்னு சொன்னதும் அவங்களுக்கு டவுட் யாரு என்னனு விவரத்த கேக்க நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன், அவங்க யார் யாருக்கோ போன் பண்ணாங்க ஐஞ்சு நிமிஷத்துல நாலஞ்சு பேர் வந்து என்னைய போட்டு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க

அப்பறம் அப்பா வந்தாரு, இந்த பையன ஹோம்ல பாத்ருக்கேன், அனாதப்பையன் மாசாமாசம் ஹோமுக்கு நான் பணம் கொடுக்குறது நிஜம், அப்போ அங்க இருக்குற பசங்க அண்ணா.... அப்பான்னு கூப்டுவாங்க அன்னக்கி ஏதோ ஃபீஸ் கட்டணும்னு கேட்டான், நான் தரேண்டான்னு சொன்னேன் ஆனா மறந்துட்டேன் பாத்தா வீட்டுக்கே வந்துட்டான்னு சொன்னாரு.

கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே.... நான் உங்க வார்டன் கிட்ட பேசுக்கிறேன் இப்டியெல்லாம் வரக்கூடாது புரிஞ்சதா பாத்து ஹோம் போய் சேருன்னு சொல்லி அனுப்பிட்டாரு.

வெறுப்பு :

வெறுப்பு :

அப்பா.... நான் அனாதப்பையன் இல்லப்பா உன் பையன்னு கத்தி சொல்லணும்னு தோணுச்சு ஆனா ஏனோ வாயத்தொறக்க முடியல, அத்தன வருஷம் ஹோம்ல இருந்தாலும் எனக்கு அப்பா இருக்காருன்ற ஒரு தைரியம் இருந்துச்சு ஆனா அன்னக்கி அப்பா அப்டி பேசினதுக்கு அப்பறம் ரொம்பவே பயமா இருந்துச்சு அதவிட நான் என்ன பண்ணேன் என்னைய ஏன் எல்லாரும் வெறுக்குறாங்க எல்லா குழந்தைகளுக்கும் அம்மா அப்பா இருக்காங்க எனக்கு ஏன் இல்ல... ஹோம்ல ப்ர்தட்டே செலிப்ரேட் பண்ண நிறைய பேரு வருவாங்க அவங்க எல்லாம் அவங்க குழந்தை மேல் எவ்ளோ பாசமா இருக்காங்க

போலீஸ் ஸ்டேசன் :

போலீஸ் ஸ்டேசன் :

அப்டி பாசமா என்னைய ஒரு நாளும் எங்கம்மா கொஞ்சியிருக்க மாட்டாங்க, பொறந்தப்பவே நான் வேண்டாம்னு சொல்லி போய்ட்டாங்களே.... எங்க போறதுன்னு தெரியாம இந்த ஊருக்கு பஸ் ஏறிட்டேன், எந்த ஊருக்கு போறேன், ஏன் போறேன் அங்க போய் என்ன பண்ண போறேன் எதுவும் தெரியாது.

வந்து இறங்கி பஸ் ஸ்டாண்டுலயே ரொம்ப நேரம் உக்காந்துட்டு இருந்தத பாத்து போலீஸ்காரங்க வந்து கேட்டாங்க ஹோமுக்கு எல்லாம் போன் பண்ணி சொன்னாங்க.

அந்த ஊரே வேண்டாம் :

அந்த ஊரே வேண்டாம் :

நைட்டு பஸ்ல ஊருக்கு அனுப்புறோம், இனிமே இப்டி எல்லாம் வரக்கூடாதுன்னு சொன்னாங்க இல்ல.... இனி அந்த ஊருக்கு நான் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு அழுதேன், அப்பறம் அந்த ஹோம் ஃபாதர் வந்து என்கிட்ட பேசினாரு.

இல்ல ஃபாதர் அங்க இருந்தா அப்பா நியாபகம் வரும் நான் அந்த ஊருக்கே வர்லன்னு சொல்லிட்டேன். சரின்னு, இங்க ஒரு ஹோம்ல சேத்துட்டு ஸ்கூல்லயும் சேத்து விட ஏற்பாடு பண்ணாரு. போறப்ப ஃபாதர் சொன்ன ஒரே விஷயம், நீ நல்லா படி.... படிப்பு மட்டும் தான் உனக்கு துணையா வரப்போகுது. லைஃப்ல இவ்ளோ கஷ்டமான்னு யோசிக்காதான்னு அட்வைஸ் பண்ணாரு சும்மா உக்காந்தா விளையாடப்போனா என் கவனம் மாறும், வீட்டு நினைப்பு அம்மா அப்பா நினைப்பு வரும்னு எங்கயும் போகாம முழு மூச்சா படிச்சிட்டு இருக்கேன்.

நான் யாரு ? :

நான் யாரு ? :

படிச்சு என்ன பண்ண போறேன்.... எதுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்கணும் எனக்காக யார் இருக்கா எதுவும் தெரியாது. நான் ஏன் பொறந்தேன்னே தெரியாத போது இந்த கேள்விக்கெல்லாம் பதில் கிடச்சுருமா என்ன....

யோசிக்க யோசிக்க தான் மனசு வலிக்கும். இது தான் என்னுடைய வாழ்க்கைன்னு ஏதுட்டு நடக்க பழகிட்டேன்.... அவ்ளோ அடி, அவ்ளோ அவமானம், அவ்ளோ உதாசீனம் யாரும் பாத்துருக்க மாட்டாங்க. அம்மா அப்பா இல்ல, யாருன்னு தெரியாதுன்னு சொல்றவங்க கூட எதோ அம்மா இருந்திருந்தா.... அப்டின்னு நினச்சுட்டே நிம்மதியா இருப்பாங்க ஆனா எனக்கு??????

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

She Delivers A Baby Before Her Marriage

She Delivers A Baby Before Her Marriage
Desktop Bottom Promotion