For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணத்துக்கு முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா நான் சம்மதிச்சிருக்கவே மாட்டேனே.... my story #148

திருமணம் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதையும், வரதட்சனை கொடுமை எந்த அளவிற்கு தன்னுடைய வாழ்க்கையை சீரழித்தது என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் ஒரு பெண்.

|

எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்தாச்சு இந்த நேரத்துல வந்து இப்டி சொன்னா நாங்க எங்க போவோம்.....

வருங்கால மாமனாரிடம் அப்பா கையேந்தி நிற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அப்பா நீ ஏன் அவங்கிட்ட எல்லாம் கெஞ்சுற கேட்டத விட அதிகமாவே கொடுத்தாச்சு.... இன்னும் கேட்டேட்டேயிருந்தா என்ன அர்த்தம். பேசாம இந்த கல்யாணத்த நிறுத்திடலாம்.

இப்படி துணிச்சலாக வாயெடுத்து சொல்ல ஆசை தான்.ஆனால் என்ன பண்றது அப்படி பேசினாள் வந்தவர்கள் திட்டுகிறார்களோ இல்லையோ என்னைப் பெற்றவர்களே என்னைத் திட்டி சபித்து விடுவார்கள். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் சம்பிரதாயம் துவங்கும் போதிருந்தே அவங்க அப்டித்தான் பையன் வீடுல்ல நம்ம தான் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போனோம் என்று சொன்னார்கள்.

இவ்ளோ கஷ்டப்பட்டு நகை போடணுமா?

அப்பதான வாழ்ற இடத்துல நிம்மதியா இருக்க முடியும் என்று பதில் வரும். என்னவோ செய்துவிட்டுப் போங்கள் என்று விட்டதை விட ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து அமைதி காத்தது தான் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோழி :

கோழி :

பெண், பெயருக்கு ஒரு டிகிரி, மாலை ஆறு மணிக்குள் வீடு வந்து சேர்ந்து விடுகிற மாதிரியான வேலை, வெளியூருக்குச் சென்றால் அதிக சம்பளம் கிடைக்கும் என்றாலும் வேண்டாம் நீ உள்ளூரிலேயே கிட... என்று பொத்தி பொத்தி வளர்த்த பெட்டைக் கோழியை கசாப்பு கடைக்காரனுக்கு கொடுத்தது போல திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள்.

21 வருடங்கள் பொத்தி வளர்த்த கோழியாயிற்றே.... திடிரென்று எல்லாவற்றையு தூக்கியெறிந்து விட்டு இனி நான் இப்படித்தான் இருப்பேன் என்று சொல்ல முடியுமா என்ன? அவர்கள் சொல்வதற்கு தலையாட்டுவதைத் தவிர வேறு வழியில்லை இந்த கோழிக்கு.

இஞ்சினியர் :

இஞ்சினியர் :

வெளியூர்ல வேல மாசம் பத்தாயிரம் சம்பளம் மாப்பிள்ளையும் பாக்க லட்சணமா இருக்காரு ரெண்டு பசங்க மூத்தவருக்கு போஸ்ட் ஆபீஸ்ல வேல மாப்ள இளையவரு நல்லா சொத்து இருக்கு இதுக்கு மேல என்ன வேணும் பேசாம கட்டிக் கொடுங்க,மாப்ள இஞ்சினியருக்கு படிச்சிருக்கு....

பெரிய படிப்பு, இந்த காலத்துல இஞ்சினியர் படிச்ச மாப்பிளைங்க எல்லாம் இஞ்சினியர் படிச்ச பொண்ணுதான் வேணும்னு கேக்குறாங்க ஆனா இவங்க ஒரு டிகிரி போதும்னு சொல்றாங்க. வரதட்சணையும் கம்மி என்று மூளைச்சலவை செய்து சம்மதிக்க வைத்திருந்தார் தூரத்து உறவினர் ஒருவர்.

நிச்சியதார்த்தம் என்னும் பேரம் பேசும் படலம் :

நிச்சியதார்த்தம் என்னும் பேரம் பேசும் படலம் :

நிச்சியதார்த்தம் நடந்து கொண்டிருந்தது. பெரியவர்கள் எல்லாம் கூடி என்னென்ன நகை, எவ்வளவு பவுன்,ரொக்கம் எவ்வளவு, தலைப்பிரசவம் யார் பார்ப்பது என குழந்தைக்கு காது குத்து வரை எல்லா விவரங்களையும் விவாதித்தார்கள்.

கல்யாணம் முடிஞ்ச பத்தாவது மாசம் கையில ஒரு பேரன் இருக்கணும் இல்லன்னா அவ்ளோ தான் அங்கேயே மிரட்டினார் மாமியார். பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. சில இடங்களில் அப்பா மிரண்டு தயங்கி நிற்க அவர்கள் மிகவும் தைரியமாக முடியலன்னா சொல்லுங்க நாங்க வேற இடம் பாத்துக்குறோம் என்றார்கள். உறவுகளை எல்லாம் கூட்டி நிச்சியதார்த்தம் நடக்கும் போது யாராவது வேண்டாம் என்பார்களா என்கிற தைரியம் தான்.

அப்பா வேண்டாம்பா :

அப்பா வேண்டாம்பா :

தன்னுடைய சேமிப்பு அத்தனையையும் விற்றால் கூட இவர்களது ஆசையை பூர்த்தி செய்ய முடியாது என்று தோன்றியது. ஏற்கனவே மாதக்கூலிக்கும் வாரக்கூலிக்கும் தன்னை உருக்கிக் கொண்டிருக்கும் அம்மாவையும் அப்பாவையும் இதற்கு மேல் உறிஞ்சிட முடியாது.

நம்ம சக்திக்கு மீறி எதுக்கு கொடுக்கணும். இந்த இஞ்சினியர் மாப்ள வேண்டாம்பா....

படிச்சிவர கட்டிக்கிட்டா நாளைக்கு நீயும் உன் பிள்ளையும் இப்டி கூலிக்கு கஷ்டப்பட மாட்டீங்கள்ல

நாளைக்குத் திருமணம் :

நாளைக்குத் திருமணம் :

மறுநாள் திருமணம், அதிக கலேபரம் ஏதுமின்றி ஆட்கள் நடமாட்டமும் உபசரிப்புகளும் நடந்து கொண்டிருந்தது. அப்போது மதிய உணவை முடித்துக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் இக்கதையின் ஆரம்ப உரையாடல் துவங்கியது.

மாப்பிள்ளைக்கு பைக் வேண்டும், கூடுதலாக வெளியூருக்குச் சென்று உங்க பொண்ணு வீடு எடுத்து தங்க வேண்டாமா? அதுக்கு அட்வன்ஸ் கொடுக்கணும்ல அதுக்கு ஒரு ஐம்பதாயிரம். எல்லாம் உங்க பொண்ணுக்காகத்தான். உங்க பொண்ணு தான் கௌரவமா பைக்ல போகும் சொகுசா பெரிய வீட்ல இருக்கும்.

வாயை அடைத்து விடு :

வாயை அடைத்து விடு :

பொண்ணுக்காக என்றதும் எங்கள் வீட்டில் எல்லாரும் கப்சிப். சொத்துக்களை எல்லாம் விற்று தான் திருமணத்தையே நடத்திக்கொண்டிருக்கிறார் மேலும் ஒரு லட்சம் என்றால்.... திருமணத்திற்கு பிறகு தருகிறோம் என்று உறுதியளித்தார்.

அதெல்லாம் முடியாது, கல்யாணம் முடிஞ்சு தர்லன்னா இப்போ எடுத்து வைங்க....

வேறு வழியில்லை. எதையும் கடைசி நேரத்தில் நிர்பந்தித்தால் நடக்கும் என்று தெரிந்து கொடுத்தே ஆகவேண்டும் என்று நிற்கிறார்கள். சரி நான் ஏற்பாடு பண்ணிட்டு வரேன் என்று கிளம்பினார் அப்பா ஒரு மணி நேரம் கழித்து வந்தவர் நாற்பதாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

மீதி பணத்த கல்யாணம் முடிஞ்சு கொடுத்திடறேன் என்று சத்தியம் செய்யாத குறையாக கெஞ்சினார்.

எங்கயிருந்து இவ்ளோ பணம் :

எங்கயிருந்து இவ்ளோ பணம் :

வந்தவர் கிளம்பியதும் அப்பாவிடம் கேட்டேன்....

அதெல்லாம் உனக்கு எதுக்கு போய் மருதாணி வை... நாளைக்கு விடியக்காலைல எந்திரிக்கணும். என்று எல்லாரையும் தங்களது வேலைகளை வேகமாகச் செய்ய சொல்லி பேச்சை மாற்றினார்.

அப்பாவிடம் பதில் கிடைக்கவில்லை என்று அம்மாவிடம் சென்றேன்.

அப்பா வருகிறாரா என்று எட்டிப் பார்த்துக் கொண்டே கடைசியா நான் போட்டிருந்த செயினையும் தோடையும் போய் அடகு வச்சு வந்துட்டாரு. இதோ இப்போ போட்டிருக்குறது கவரிங் என்று காண்பித்தாள்.

அறுபதாயிரத்துக்கு.... :

அறுபதாயிரத்துக்கு.... :

ஏதோ ஆஸ்பத்திரிக்கு போனா பணம் கிடைக்குமாமே... ஏதோ ஊசி போடுவாங்களாம், ரெண்டு நாள் வவுத்த வலிக்குமாம் அப்பறம் சரியாப் போகும் அப்டி பண்ணா அம்பாதயிரம் வரைக்கும் வாங்கித்தரேன்னு யாரோ சொல்லிருக்கு கல்யாணத்துக்கு மறுநா ஆஸ்பத்திரி போகணும்னு சொல்லிச்சு உங்கப்பா.

உடல் உறுப்பை விற்கும் அளவிற்கு துணிந்து விட்டாரா? தன்னுடைய உடலை விற்றாவது மகளுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று யார் சொன்னா..... அதுவும் இந்த தள்ளாத வயதில் மீண்டும் யாரோ சுரண்டப் பார்கிறார்கள். ஐம்பதாயிரம் வரை கிடைப்பது கடினம். எல்லாமே நடுவில் இருக்கும் ஏஜெண்ட்டுகளுக்குத் தானே செல்லும். அம்மாவிடம் விவரத்தைச் சொல்லி புரியவைத்தேன்.

திருமணம் :

திருமணம் :

திருமணம் நடந்து முடிந்தது.மாதம் பத்தாயிரம் என்றார்களே அப்படியான செலவினங்கள், செலாபத்துக்கள் எதுவுமே இல்லை. கிளம்பும் போது மாப்பிள்ளை போல ஜம்மென்று கிளம்பிச் செல்கிறவர் இரவு வீடு திரும்பும் போது நைந்து தான் வந்து சேர்வார். ஆனாலும் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் குறைவிருக்காது.

திருமணமான புதிதில் வீராப்பாக நீ வேலைக்கு எல்லாம் போக வேணாம் அதான் நான் சம்பாதிக்கிறேன்ல என்று சொல்லிவிட்டார். பின்னர் வீட்டுத் தேவைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடினார், பத்தாயிரம் சம்பள வாங்குபவர் அவரிடம் பணம் இருக்கும் என்று பல முறை கேட்டு திட்டு வாங்கியது தான் மிச்சம். வீட்டுக்கும் தரமாட்றீங்க நீங்களும் செலவு செய்ய மாட்றீங்க என்ன தான் பண்றீங்க பணத்த ஒரு முறை கேட்டுவிட்டேன்.

ஒடுகாலி நாயே :

ஒடுகாலி நாயே :

அவ்வளவு தான் வீடே இரண்டாகும் போல கத்தினார் . நீ எதுக்கு பணம் கேக்குற.... இங்கயிருந்து வாங்கி அப்டியே உங்க ஆத்தா வீட்டுக்கு முடிச்சு கட்டலாம்னு பாக்குறியா? என்று ஆரம்பித்து காதில் கேட்க கூசும் வார்த்தைகளை கொட்டினார்.

அவர் கொஞ்சம் அப்டித்தான் சட்டெனு கோபம் வரும் என்று சொல்ல பழகிக் கொண்டேன். இந்நிலையில் எங்களுக்கு ஒன்றரை வருட வித்யாசத்தில் ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தார்கள்.

நாங்கள் இருவர் இருக்கும் போதே கஷ்ட ஜீவனம் என்றால் இப்போது நான்கு பேர் என்றால் சொல்லவே வேண்டாம்.

நான் வேணா வேலைக்கு போகவா :

நான் வேணா வேலைக்கு போகவா :

ஒரு வழியாக சம்மதித்தார். மகனை பால்வடியில் விட்டுவிட்டு மகளை மட்டும் தூக்கிக் கொண்டு வேலைக்குச் செல்வேன். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி. அவ்வப்போது எடுபிடி வேலைகளையும் செய்ய வேண்டும். வீட்டிலிருந்து பக்கம் என்பதால் சேர்ந்து கொண்டேன்.

சரியாக பன்னிரெண்டு மணிக்கு மகனை பால்வாடியிலிருந்து அழைத்து வந்து வீட்டில் விடுவேன் பக்கத்து வீடுகளில் இருப்போர் அவனை கவனித்துக் கொள்வார்கள். ஐந்து மணிக்கு வேலை முடிந்து விடும்.

கணவருக்கும் சேர்த்து வேலை :

கணவருக்கும் சேர்த்து வேலை :

நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் வீட்டு செலவுக்கு என்று கணவர் தருகிற பணம் சுத்தமாக நின்றது. கஷ்டமென்றாலும் மூன்று வேலை உணவு தடையில்லாமல் கிடைத்தது.

எங்க ஆபிஸ்லயே மேனேஜர் வேலைக்கு ஆள் எடுக்குறாங்க நீங்க அப்ளை பண்ணுங்க ஹெச் ஆர்ட்ட பேசிட்டேன். அவங்க ரெஸ்யூம் கொண்டு வரச்சொன்னாங்க கொடுங்க நான் போய் கொடுத்திடறேன்.

என்னாத்துக்கு அந்த வேலை.... இங்க வேற ஆள் இல்ல, நான் நல்லா வேலை பாக்குறேன்னு, இந்த பாஸ் என்னைய விடமாட்டேங்கிறாரு.... ரொம்ப வருஷம் இங்கயே இருந்துட்டேன். சட்டெனு வேலைய விட்டுப் போறேன்னு சொல்ல முடியாது.

அடப்பாவிகளா :

அடப்பாவிகளா :

ஆனாலும் விடவில்லை அடுத்து பசங்க ரெண்டு பேரும் வளர்ந்துட்டாங்கன்னா ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், செலவு அடுத்தடுத்து இருக்கு என்று நச்சரித்துக் கொண்டேயிருந்தேன், ஆனாலும் வேலை வேண்டாம் என்பதில் வம்படியாக இருந்தார்.

ஒரு நாள் நானாக ஏன் வேலைக்கு வரமாட்டேன் என்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும், அப்படி என்ன முதலாளி மீது பாசம் நன்றாக வேலை செய்கிறவர் என்றால் சம்பளம் அதற்கேற்ப இருக்க வேண்டுமே... பத்தாயிரம் சம்பளம் என்று சொல்கிறார்கள் ஆனால் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே எவ்வளவு தான் அவர் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்விகள் துளைத்தெடுக்க பீரோவைத் துளாவினேன்.

நான் சந்தேகப்பட்டது சரி தான். இஞ்சினியர் என்று சொல்லி திருமணம் செய்து வைத்தார்களே அந்த உத்தமர் இஞ்ஞினியரிங் டிப்ளமோ படித்திருக்கிறார். அதுவும் டிஸ்கண்டினியூ.... இவர் எங்கோ மெக்கானிக் அல்லது கீழ்நிலை ஊழியராகத்தான் இருக்கிறார். போஸ்ட் ஆபீசில் வேலைப் பார்ப்பதாகச் சொன்னவருக்கோ ஏதோ கொரியர் கம்பெனியில் வேலை. கொரியரை போஸ்ட் ஆபீஸ் என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அதனை சில உறவினர்களிடமும் ஊரில் இருந்தவர்களிடமும் கேட்டு உறுதி செய்து கொண்டேன்.

ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் :

ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் :

உண்மையில் நான் இந்த நிலையில் இருக்கிறேன், என்று உண்மையை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்களேன்.... ஏதோ நீங்கள் மெத்தப்படித்தவர்கள், செல்வ செழிப்புடன் வாழ்பவர்கள் போல ஏன் இந்த ஆட்டம்.

மாலை வீடு திரும்பியதும் கேட்டேன்..... தாம்தூம் என்று கத்தத்துவங்கினார். ஆரம்பத்தில் பயந்து நடுங்கியது போல இப்போது பயப்படவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்கள். என் பெற்றோரின் உழைப்பை சுரண்டித் தான் இவர்கள் திருமணத்தையே நடத்தியிருக்கிறார்கள் என்ற எண்ணம் என் மனதை மாற்றியிருந்தது. தைரியத்தை கொடுத்திருந்தது. எதிர்த்து கேள்வி கேட்டேன்... என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று சபித்தேன்.

என்ன செய்ய :

என்ன செய்ய :

எல்லாம் தெரிந்தும் என்ன செய்ய.... இரண்டு குழந்தைகளை காரணம் சொல்லி என்னை பொறுத்துக் கொள்ளச் சொல்வீர்கள், பிழைத்தாலும் செத்தாலும் கணவர் வீட்டில் வாழ்வது தானே பெண்ணுக்கு அழகு என்று சொல்லி தாய்வீட்டிலும் என்னைத் தங்க அனுமதிக்க மாட்டீர்கள்.

இன்று வரை வேலைக்குச் சென்று கிடைக்கிற வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற பெற்றோரை கடன் வாங்க வைத்து சொத்துக்களை எல்லாம் விற்க வைத்து அவர்களைச் சுரண்டித்திங்கிற இவர்களை, வழக்கம் போல ஏமாற்றிவிட்டார்களே என்று புலங்கிக் கொண்டும், எல்லாம் விதி என்று நொந்து கொண்டும் காலத்தை நகர்த்த வேண்டியது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl share about her marriage life

Girl share about her marriage life
Story first published: Friday, January 19, 2018, 10:25 [IST]
Desktop Bottom Promotion