For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகள் காதலித்ததால் குடும்பமே சேர்ந்து நடத்திய தற்கொலை நாடகம்! My story # 85

காதலித்தவனை கரம் பிடிக்க உயிரையே பணயம் வைக்க வேண்டிய கட்டாயம்,காதல் ஜோடியின் உண்மைக்கதை.

|

காதலித்து திருமணம் செய்வது எவ்வளவு பெரிய விஷயம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அவற்றில் இருக்கும் சுவாரஸ்யமே அந்த போராட்டம் தான். சில நேரங்களில் அது வாழ்வா சாவா போராட்டத்தில் வந்து நிற்கும் போது தான் அதனுடைய வீரியம் நமக்குப் புரியும்.

காதல் திருமணம் என்ன அவ்வளவு கேடு தரக்கூடியதா? அவ்வளவு பயங்கரமானாதா? உலகில் வேறு யாரும் செய்யாத மிகப்பெரிய குற்றத்தையா செய்துவிடுகிறார்கள்? மன்னிப்பு பற்றி யோசிக்கக்கூட முடியாத அவ்வளவு பெரிய தவறா அது?

இந்த விவாதத்திற்குள் எல்லாம் நாம் செல்ல வேண்டாம். சமீபத்தில் தோழி ஒருவரைச் சந்திக்க, அவள் தன் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என்று ஒரு தம்பதியரை அறிமுகப்படுத்தினார்.

பேசினோம்...

அவர்களின் முன் கதையை கேட்டதும்... மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்படியான சூழலலையும் சிலர் சந்திக்கிறார்கள். நீ எப்படி எங்களை முடக்கினாலும் சரி நாங்கள் எழுந்து வருவோம். உன்னை எதிர்த்து நிற்போம் என்று போராடுகிறார்கள் என்பது புரியும்.

Shocking struggles to get married their love

அவர்களைப் பார்த்து அவர்களின் மன தைரியத்தை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமானது இருக்கிறது. பாதுகாப்பு கருதி அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடுக்குமாடி :

அடுக்குமாடி :

தோழி என்னை அழைத்துச் சென்றது ஐந்து மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு. இவள் செல்லும் தையல் வகுப்பில் தான் இருவரும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை கூட்டி வருகிறேன் என்று சொன்னதுமே பதறியடித்துக் கொண்டு வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல இவள் சமாதானப்படுத்தி எனக்கு மிகவும் நெருக்கமானத் தோழி தான் பயப்படாதே என்று சொன்னாள். ஒரு வழியாக அவர் சம்மதித்து மாலையில் கணவர் வந்து விடுவார் அதன்பிறகு அழைத்து வா என்று சொல்லியிருந்தார்.

மாலையில் சென்றோம். வீட்டில் ஒரு குழந்தை இருப்பதாக சொன்னதால் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு நானும் என் தோழியும் சென்றோம்.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

சோபி.. என்று அவளின் பெயரைச் சொல்லிக்கொண்டே என் தோழி வீட்டிற்குள் நுழைய விளையாடிக் கொண்டிருந்த மகன் அம்மா அத்த என்று ஓடினான்.

வந்துட்டியா என்று உள்ளறையிலிருந்து வெளிப்பட்டவரை பார்த்து ஒரு கணம் விக்கித்துப் போனேன். பாதி முகம் சிதைந்த நிலையில் இருந்தது. தாடையும் கழுத்துப் பகுதியும் சேர்ந்து அப்பகுதியே அகோரமாக இருந்தது. இடது பக்க முன் தலையில் முடியே இல்லை இரண்டு கண்களிலும் பார்வையில்லை போல கண்கள் மேலேயே எதையோ தேடிக் கொண்டிருந்தது.

அண்ணி... என் ஃபிரண்டு சொன்னேன்ல என்று இழுத்தாள். அவர் எதையும் கேட்கவில்லை போல நேராக சென்று வாசலில் இருக்கும் க்ரில் கேட்டை மூடி பூட்டு போட்டார்.

தூரமாக சென்று உட்கார்ந்து கொண்டார். அவர் மகனை அழைத்து வாங்கி வந்திருந்த தின்பணடங்களை கொடுத்தேன்.

அதட்டல் :

அதட்டல் :

அம்மா புது அக்கா எனக்கு கேக்கு வாங்கிவந்திருக்கு வாங்கவா என்றான்.

அவர் இப்போது இடது பக்கம் தன் பார்வையை திருப்பியிருந்தார். டேய் சும்மாயிருக்க மாட்டா அடி வாங்குவ அப்பாட்ட சொல்லட்டா என்று அதட்டினார்.

இல்லல்ல... திட்டாதீங்க நான் தம்பிக்கு கொடுக்க தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொன்னதும் அவர் அமைதியாகிவிட்டார். குழந்தை என் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டான்.

ஏன் தூரம் ? :

ஏன் தூரம் ? :

இங்கயே உக்காரலாமே என் தூரமா தள்ளிப்போய் உக்காந்திருக்கீங்க என்று மெல்லக்கேட்டேன்.

இல்லப்பா எல்லாரும் என் முகத்த பாத்து பயந்துருவாங்க அதனாலயே....

பழகிடுச்சு.

என்னைப் பற்றி, என் படிப்பு, வேலை, குடும்பம் என்று பேச்சு நீண்டது. அவர் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்திருந்தார்.

என்ன காரணம் :

என்ன காரணம் :

ஏதோ ஒரு விபத்து ஏற்பட்டதில் தான் இப்படி அவர் முகம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் கேட்கவும் தயக்கமாய் இருந்தது.

மகன் எதையோ கேட்டு அடம் பிடிக்க என் தோழி அவனை தூக்கிக் கொண்டு சமாதானம் செய்து கொண்டிருந்தாள். அவர் எனக்கு டீ போட்டு கொடுக்கிறேன் என்று சமையலறைக்குச் சென்றார். நானும் உள்ளே சென்றேன்.

அண்ணன் பையன் :

அண்ணன் பையன் :

உங்களுக்கு கண்ணுல பவர் ஜாஸ்தியா? என்று மறைமுகமாக கேட்டேன்.

இல்லப்பா இடதுபக்கம் சுத்தமா பார்வையில்ல வலது பக்கம் மட்டும் லேசா தெரியும். படிக்க எல்லாம் முடியாது. எதோ உருவம் வருதுன்னு கெஸ் பண்ணுவேன். பத்து வருஷம் ஆச்சுல்ல பழகிடுச்சு.

தம்பி அவ தூக்கினதும் சமாதானமாகிட்டானே பராவயில்ல....

அது பொழுதன்னைக்கும் அவங்க வீட்ல தான் கிடக்கும். ஸ்கூல் முடிஞ்சு வந்தா நேரா அவங்க வீட்ல தான். அவங்க அம்மாவே இவனுக்கு சாப்பாடு போட்டு டிரஸ் மாத்தி விட்ருவாங்க அப்பறம் நைட்டு தூங்குறப்ப இவங்கப்பா கூட்டிட்டு வருவாரு.

சிரித்தேன். ச்ச... பரவாயில்ல அவ போன்ல பேசும்போது கூட சொன்னதில்ல ஒரேயொரு தடவ பேச வச்சா யாருன்னு கேட்டேன் அண்ணன் பையன்னு சொன்னா நான் கூட ஏதோ ரிலேட்டிவ்னு நினச்சேன் என்றேன்.

சூடாக டீ தயாராகியிருந்தது.

லவ் பண்றியா? :

லவ் பண்றியா? :

இப்போது அவர் எங்கள் உரையாடலில் முழுவதும் ஐக்கியமாகியிருந்தார் என்றே சொல்லவேண்டும்.

தயக்கம் ஏதுமில்லை . நானும் சகஜமாக பேச ஆரம்பித்தேன். இப்போது விபத்தைப் பற்றி கேட்டு விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

அவராக ஆரம்பித்தார்.

எப்போபா கல்யாணம்?

தெரிலக்கா... பாப்போம்

லவ் பண்றியா.........

பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே மழுப்பினேன்.

லவ் மட்டும் பண்ணாதப்பா. லவ் பண்ணா என்ன நடந்தாலும் சரி நாங்க சேர்ந்து காட்டுவோம்னு உறுதியா இருக்க முடியும்னா மட்டும் லவ் பண்ணு. இல்லன்னா இந்தா இப்டித்தான் என்று தன் முகத்தை காட்டினார்.

நான் ஆரம்பித்தேன் :

நான் ஆரம்பித்தேன் :

லவ்னாலயா? என்னக்கா சொல்றீங்க நான் கூட ஏதோ ஆக்ஸிடண்ட் ஆகியிருக்கும்னு நினச்சேன்.

ஆக்ஸிடண்ட் தான் ஊரே அப்டித்தான் சொல்லுது ஆனா.... தொடர்ந்து அவர் ஏதோ சொல்ல வாயைத் திறக்க வெளியில் ஹாரன் சத்தமும் வண்டிகள் உறுமும் சத்தம் கேட்டது சட்டென விக்கித்து ஜன்னல் வழியே பார்த்தார்.

பிறகு ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிதானமாக மூச்சை வாங்கினார்.

என்னது ஊரு சொல்லுது? இது ஆக்ஸிடண்ட் தான என்றேன்.

கதையை சொல்ல ஆரம்பித்தார்.

கடைசி மகள் :

கடைசி மகள் :

எங்க வீட்ல நான் தான் கடைக்குட்டி. கூடப்பிறந்தது ஒரு அக்கா, ஒரு அண்ணா . அக்காவுக்கு சீக்கிரமே படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க என்னை எப்டியாவது டிகிரி படிக்க வைக்கணும்னு டவுனுக்கு அனுப்பி படிக்க வச்சாங்க.

நல்லா படிச்சேன். எங்க ஊர்ல இருந்து காலேஜுக்கு போறப்போ பஸ்ல தான் இவரப்பாத்தேன். பாத்ததும் பிடிச்சு போச்சு. அவரும் என்னைய பாத்து சிரிப்பாரு. அவரு எம்.காம் படிச்சிட்டிருந்தாரு. வேற காலேஜ் ஒரு நாள் இந்த பஸ்ல வந்து என்னைய பாத்துட்டு என்னைய பாக்குறதுக்காகவே தினமும் இந்த பஸ்ல வர ஆரம்பிச்சுட்டாரு.

காதல் :

காதல் :

அப்போ போன் எல்லாம் இல்ல கையில கூட இருந்த ஃபிரண்ட்ஸ் மூலமா லெட்டர்ல பேசிப்போம். இல்லன்னா இப்டி போறப்போ வர்றப்போ பாத்துக்கறதோட அவ்ளோ தான். வெளிய பேசிக்கிறது எல்லாம் ரொம்ப ரிஸ்க்.

ஒரு நாள் காலேஜ்ல சீக்கிரமே எக்ஸாம் முடிஞ்சிடுச்சு. மதியான நேரம் ஊருக்கு கிளம்பினா எதார்த்தமா பஸ்ல அவரு உக்கார்திருக்காரு... என்னால நம்ப முடியவேயில்ல. கிட்டத்தட்ட ஆறு மாசமா சும்மா பாத்துட்டு மட்டும் தான் இருந்தோம். அப்பறம் என்னைய பாத்ததும் எனக்கு பின்னாடி சீட்ல வந்து உக்காந்தாரு.

பேரென்னனு ஆரம்பிச்சு.... வரிசையா பேச ஆரம்பிச்சு பேசிட்டே வந்தோம். ஒரு மணி நேரம் எப்டி போச்சுன்னே தெரியல.

ஊரு வந்திருச்சு நான் கிளம்புறேன்னு எந்திருக்க உடனே அவரு என்னை நிறுத்தி உன்னைய எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு.

நான் பயத்துல வீட்டுக்கு ஓடி வந்திட்டேன்.

தொடர்ந்த காதல் :

தொடர்ந்த காதல் :

அப்பறம் எனக்கும் பிடிச்சுப்போக நானும் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டேன். அது இதுன்னு சொல்லி ஊர் சுத்துறது, பக்கத்து டவுனுக்கு போறதுன்னு சந்தோசமா போச்சு. ஒரு நாள் காலேஜ்ல இருந்து அரை நாள் லீவ் போட்டுட்டு அவன பாக்க பஸ்ல போய்ட்டு இருக்கேன்.

நடுவுல எங்க அப்பா. என்னடி இந்தப்பக்கம்?

வயித்த வலிப்பா....

அதுக்கு ஊருக்கு போற பஸ்ல ஏறாம இதுல ஏறிருக்க...

என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க சரி வா இறங்கு என்று சொல்லி அவரும் இறங்கி எங்கள் ஊருக்குச் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டார்.

அன்றைக்கு இரவு வரை அவன் எனக்காக காத்திருந்திருக்கிறான்.

மாட்டிக் கொண்டோம் :

மாட்டிக் கொண்டோம் :

அவன் எதோடு தேர்வு எழுதியிருப்பதாகவும் தேர்வானாள் அரசாங்க வேலை கிடைக்கும் என்றும் சொல்லியிருந்தான். அவனுக்காக அவன் பாஸ் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கோவில் பிரசாதத்துடன் அவனை எங்கள் கல்லூரி பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம்.

என்னுடன் வந்த தோழிகள் எல்லாரும் சென்று விட்டனர். நானும் அவனும் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம். வேலை உறுதியானதும் அவன் என் வீட்டிற்கு வந்து பெண் கேட்பதாக சொன்னான். எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்னை எப்படி பார்த்துக் கொள்வான் என்றெல்லாம் விவரித்துக் கொண்டிருந்தான்.

அவ்வழியாக கடந்து சென்ற பேருந்து ஒன்றில் என் உறவினர் யாரோ உட்கார்ந்திருப்பார் போல

பஸ்ல உக்காந்துட்டு நம்மலயே ஒருத்தன் குறுகுறுன்னு பாக்குறான் என்று வேற எங்கோ பார்த்தப்படி அவன் சொல்ல, நான் சட்டென பஸ்ஸை பார்த்தேன்.

அப்பாவும் மாமாவும் இருந்தார்கள்.

கல்லூரிக்குத் தடை :

கல்லூரிக்குத் தடை :

அன்று மாலை வீட்டில் பயங்கர சண்டை, கூட படிக்கிற பையன் நோட்டு கொடுக்க வந்தான். என்று நான் சொன்ன எந்த கதையையும் அவர்கள் கேட்கவேயில்லை. அப்பா அடித்து உதைத்தார்.

அக்காவும் அம்மாவும் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு கெஞ்சியும் பலனில்லை மானத்த வாங்கிட்டேயேன்னு சொல்லி சொல்லி அடித்தார்கள்.

நீ படிச்சு கிழிச்சது எல்லாம் போதும். இனிமே காலேஜுக்கு போகாத என்று சொல்லிவிட்டார்கள்.

கடிதம் :

கடிதம் :

என்னிடம் பேச வேண்டும், என்னைப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் அவனால் என்னை சந்திக்க கூட முடியவில்லை. என்னைப் பார்க்க வந்த தோழியொருத்தியிடம் எப்படியாவது இந்த கடிதத்தை கொடுத்து விடு என்று சொல்லி நான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை வந்து அழைத்துச் சென்று விடு என்று எழுதி அவளிடம் கொடுத்தனுப்பினேன்.

அவள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டாள். பதில் கடிதம் கொண்டு வந்திருந்தாள்.

தயாராக இருக்கவும் :

தயாராக இருக்கவும் :

புத்தகத்திற்குள் வைத்துக் கொண்டு வந்த லெட்டரை என்னிடம் கொடுத்தாள். நான் பின் வாசலுக்குச் சென்று யாராவது வருகிறார்களா என்று பார்த்து விட்டு படிக்க ஆரம்பித்தேன்.

நிலைமை புரிகிறது. இனியும் தாமதித்து எந்த பயனும் இல்லை வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பன்னிரெண்டு மணிக்கு எல்லாரும் தூங்கியதும் பின் வாசல் வழியாக பஸ்ஸாண்டுக்கு வந்துவிடு.

பின் வாசல் அருகே என் நண்பன் ஒருவன் சைக்கிளுடன் நிற்பான், அவனோடு நீ பஸ் ஸ்டாண்ட் வந்து விடலாம். அங்கே இன்னொரு நண்பன் இருப்பான் அவன் ஊர் எல்லைக்கு அழைத்து வருவான். பின்னர் இருவரும் சேர்ந்து பஸ் பிடித்து வெளியூருக்குச் சென்று விடலாம். தயாராகயிரு இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரியப்படுத்து என்று படித்துக் கொண்டிருக்க

என் கையிலிருந்தது பிடுங்கப்பட்டது.

தோழிக்கு டோஸ் :

தோழிக்கு டோஸ் :

என்னடி இது... அவன் கொடுத்தானா? உனக்கு எவ்ளோ சொன்னாலும் ஏறாதா

இல்லக்கா.... என்று நான் ஆரம்பிக்கும் முன்னரே

அப்பா இந்தப்புள்ளைய பாரு எவ்ளோ சொன்னாலும் ஏற மாட்டேங்குது என்று கத்த வீடே ஒன்று கூடியது.

ஏய் இதுக்கு தான் உங்கப்பனும் ஆத்தாளும் படிக்க அனுப்பாறாகளா? படிக்கிற வேலைய மட்டும் பாரு இல்லன்னா கொன்றுவேன் என்று தோழியை மிரட்ட அவள் பயந்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் இனிமே வீட்டுப்பக்கம் வந்திராத அவ்ளோதான் சொல்லிட்டேன் என்று மிரட்டி தொரத்தி விட்டார்கள்.

அவனே வேண்டும் :

அவனே வேண்டும் :

நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். அவனுக்கு அரசாங்க வேலை கிடைக்கப்போகிறது நிறைய படித்திருக்கிறான் என்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று என்னென்னவோ சொல்லிப் பார்த்தேன் எதுவும் கேட்கவில்லை.

அவன் எந்த ஊர் பையன் தெரியுமா? அந்த ஊர்னாலே ......... இந்த சாதியாத்தான் இருப்பாங்க. அவங்களுக்கும் நமக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. படிச்சா எல்லாம் சரியாப்போச்சா? பாட்டி, சித்தி, அம்மா, என்று எல்லாரும் வந்து கெஞ்சினார்கள்.

அப்பா இங்கேயே கொன்று விடுவதாக மிரட்டினார். என்னால் எப்படி புரியவைக்க என்று தெரியவில்லை அவனிடம் எப்படி இத்தகவலை சேர்க்கபிக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை. அதனால் கோபத்துடன் நீங்க என்ன சொன்னாலும் சரி நான் அவன தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்றேன்.

கறிக்குழம்பு :

கறிக்குழம்பு :

என்னை தூக்கி ஓர் அறையில் வைத்து பூட்டினார்கள். காவலுக்கு அண்ணன் வாசலில் உட்கார்ந்து கொண்டான். அழுது அழுது அப்படியே தூங்கிப் போனேன்.

சில மணி நேரங்கள் கழித்து கறிக்குழம்பு ஊற்றி தட்டு நிறைய சோற்றுடன் அம்மா வந்தாள். இந்தா எந்திரி இத தின்னுட்டு படு.. ஏண்டி இப்டி பண்ற அப்பா சொல்ற பேச்ச கேட்டுத் தொலைக்க வேண்டியது தான.

நல்ல இடமா பார்த்து நாங்களே உனக்கு கட்டி வைக்கிறோம் என்றாள் நான் எதுவும் பேசவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டு அம்மா கொண்டு வந்ததை சாப்பிட ஆரம்பித்தேன்.

பாட்டி, சித்தி,அக்கா,அப்பா,மாமா, சித்தப்பா என்று வரிசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை வந்து வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள். அண்ணே சாப்பிடுது என்று சித்தப்பா அப்பாவிடம் சொல்ல அவர் விதி என்பது போல மேலே கையை காண்பித்தார். சித்தியும் அக்காவும் குசுகுசுவென்று தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டனர். அம்மா அழுது கொண்டேயிருந்தாள்.

இன்னும் கொஞ்சம் கொழம்பு ஊத்தவா?

மார்க் குறைந்ததால் தற்கொலை :

மார்க் குறைந்ததால் தற்கொலை :

சாப்பிட்டு முடித்தேன் அசதியாக இருந்தது. கை கழுவி விட்டு அப்படியே படுத்துக் கொண்டேன்.

திடீரென்று... பாட்டியின் ஓலம் படுபாவி இப்படி பண்ணிட்டியே டி... உன்ன யாருடி படிக்கச்சொன்னா இருக்குற அம்புட்டு சொத்தும் உனக்கு தான மார்க் கம்மியா போச்சுன்னு பால்டாயில குடிச்சிட்டாலே என் ராசாத்தி என்று வாசலில் நின்று கத்தினாள்.

அம்மா மாரில் அடித்துக் கொண்டு அழுதாள். அக்கம் பக்கத்தினர் பதறியடித்துக் கொண்டு உள்ளே வர நான் அரை மயக்கத்தில் தான் இருக்கிறேன் என்பதை அறிந்து தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள்.

காப்பாற்றப்பட்டேன் .

விவரமறிந்து என்னைப் பார்க்க மருத்துவமனைக்கு அவன் வந்தான்.

என்னைக் காப்பாற்று :

என்னைக் காப்பாற்று :

அம்மாவே எனக்கு விஷம் கொடுத்தாள். அங்கே என் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று சொல்ல, அவன் யோசித்தான். பிறகு சரி நாளை டிஸ்சார்ஜ் செய்வதாக சொன்னார்கள். நாம் இன்றைக்கே இந்த ஊரை விட்டு ஓடிவிடலாம் என்றான்.

இம்முறை என்ன நடக்கும் என்றெல்லாம் தெரியாது எங்கிருந்தோ ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களா என்று பயமாகவும் இருந்தது.

பயப்படாத இன்னக்கி நைட்டு ஒன்பது மணிக்கு கரண்ட் போகும். நீ எழுந்து ஹாஸ்பிட்டலுக்கு வெளிய வா நான் இருப்பேன் என்றான்.

அபு எல்லாம் நல்லபடியா நடக்கும்ல. நம்ம காதல் நம்மள கை விடாத பயப்படாம வா நானிருக்கேன் என்றான்.

மருத்துவமனை வாசலில் :

மருத்துவமனை வாசலில் :

சொன்னது போலவே ஒன்பது மணிக்கு பவர் கட் ஆனது. அறையில் இருந்த பாட்டி எதையோ துழாவிக் கொண்டிருக்க நான் கையில் ஒட்டப்பட்டிருந்த ட்ரிப்ஸ் ஏற்றப்படும் ஊசியை பிடுங்கினேன்.

அதனை அழுத்திப் பிடித்துக் கொண்டே. வெளியேறி படி வழியாக இறங்கி கீழே வந்து விட்டேன். வாசலில் அப்பா பணம் கட்டுவதற்காக நின்று கொண்டிருந்தார். ரிசப்சனில் மட்டும் ஒரேயொரு விளக்கு.

பயந்து கொண்டு தலையை முக்காடிட்டு வெளியில் ஓடி வந்தேன். வாசலில் வண்டியுடன் அபு தயாராய் இருக்க, அதில் உட்கார்ந்து கொண்டு இருவரும் பறந்து விட்டோம்.

 இனி எல்லாம் ஜெயம் :

இனி எல்லாம் ஜெயம் :

இனி நாம் சேர்ந்து வாழப்போகிறோம். விடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம், திருமணத்தை பதிவு செய்து விட்டால் போதும் யாராலும் நம்மை பிரிக்க முடியாது. என் காதல் எனக்கு கிடைத்து விட்டது என்று எக்கச்சக்க மகிழ்ச்சி.

அபு இனி நம்ம எப்பவும் அழக்கூடாது சரியா? என்றேன். என்கூட இருக்கும் போது நீ ஏண்டி அழணும்

இனிமே நம்ம எப்பவும் சந்தோசமாத்தான் இருப்போம்.

மூன்று மாதங்கள் :

மூன்று மாதங்கள் :

மறு நாள் கோவையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் அங்கிருந்து சேலம் சென்று அங்கே அபுவின் நண்பன் அறையில் தங்கி இருவரும் வேலை தேடிக் கொண்டிருந்தோம்.

அவனுக்கு ஒரு கம்பெனியில் கணக்கர் வேலை கிடைத்தது. தனியாக வீடு எடுத்து எங்களின் புது வாழ்க்கையை ஆரம்பித்திருந்தோம்.கல்லூரியில் டிகிரி சர்டிஃபிக்கேட் கொடுப்பதாகவும் தான் செல்ல வேண்டும் என்றும் சொல்லி ஊருக்குப் புறப்பட்டான்.

ஜாக்கிரதை :

ஜாக்கிரதை :

அவனை அனுப்புவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. பாரு ஜாக்கிறத.... இப்போ கண்டிப்பா போயாகணுமா?

பயப்படாத... போய் ஃபிரண்டஸ் பாத்துட்டு சர்டிஃபிக்கேட் வாங்கிட்டு அன்னைக்கே நான் கிளம்பிடறேன். நான் போறது யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு நாள் தான். சர்டிஃபிக்கேட் கையில இருந்தா தான் நான் மேற்கொண்டு படிக்கவோ இல்லாட்டி பெரிய கம்பெனில வேல தேடவோ முடியும்.

அரை மனதோடு சம்மதித்தேன்.

மறுநாள் :

மறுநாள் :

மறுநாள் என் விடியற்காலை ஆறு மணிக்கு கதவு தட்டும் சத்தம். அவன் தான் வந்திருப்பான்.

அப்பாடா நிம்மதியா வந்து சேர்ந்துட்டான் என்று கதவைத் திறக்க, வாசலில் அப்பா, சித்தப்பா,மாமா நின்று கொண்டிருந்தார்கள். அபு ஓரமாக நின்றிருந்தான். அவனைப் பார்த்தேன்.

சட்டென சுதாரித்து, உள்ள கூப்டு என்று என்னிடம் சொல்லிவிட்டு அவர்களிடம் உள்ள வாங்க என்றான். நிற்கவே இடம் சரியாக இருந்தது.

வீட்ல எவ்ளோ வசதியா வாழ்ந்த பொண்ணு... என்று நிறுத்தினார் சித்தப்பா. சரிம்மா நாங்க தப்பு பண்ணிட்டோம். அதுக்காக இப்டி பண்லாமா? வீட்ல உங்கம்மா சாப்டாம படுத்த படுக்கையாகிட்டா வீடே கலையிழந்து போச்சு.எல்லாரும் உன் பொண்ணு எங்க? எங்கனு கேக்குறப்ப எல்லாம் என்ன சொல்றதுன்னு தெரியாம வெளியூர்ல வேலைப்பாக்குதுன்னு சொல்லி சமாளிச்சோம்.

ஊருக்குப் போலாம் :

ஊருக்குப் போலாம் :

ஊருக்கு வா. நல்ல நாள் பாத்து நாங்களே கோவில்ல கல்யாணம் பண்ணி வச்சிடறோம். காலேஜ்ல தம்பிய பாத்தேன் என்று உடைந்த குரலில் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனும் இடைமறித்து ஆமா சோபி, அவங்க நம்மள சேத்து வைக்கிறேன்னு சொல்றாங்க. அப்பா என் கால்லயே விழுந்துட்டாரு என்று அவனும் உணர்ச்சிப் பொங்க சொன்னான்.

உன் கால்லயும் விழறேன். வீட்டுக்கு வந்திடும்மா.... என்று அப்பா என் காலில் விழ வர

நான் அவர் காலில் விழுந்து அழ ஆரம்பித்தேன். அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா என்று சொல்லி அழ, விடும்மா நடந்தது நடந்துப்போச்சு வா ஊருக்குப் போலாம்.

வேலைக்கு நேர்காணல் :

வேலைக்கு நேர்காணல் :

அபுவும் நானும் சேந்து வரேம்ப்பா....

அப்டியா சரிம்மா டேய் ஏதோ இண்டர்வியூ சொன்னல்ல அது ஒரு வாரம் கழிச்சு வைக்க முடியுமா என்று சித்தப்பாவிடம் கேட்க.

இல்லண்ணே இன்னக்கி தான் கடைசி டேட். ஏற்கனவே ரெண்டு ரவுண்ட் முடிஞ்சதாம். நம்ம ரொம்ப கெஞ்சி கேட்டனால மதியம் வர சொல்லியிருக்காங்க என்று அடுக்கினார்.

எல்லாம் உங்க நல்லதுக்கு தான். ரொம்ப பெரிய கம்பெனி. நம்ம க்ளைண்ட் தான். படிச்சா மட்டும் போதுமா சம்பாதிக்க வேணாமா அதான் வேலைக்குச் சொல்லியிருக்கேன் என்றார் அப்பா.

சோபி நீ கிளம்பு :

சோபி நீ கிளம்பு :

அபுவுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரி சோபி நீ அப்பாவோட கிளம்பு நான் இண்டர்வியூ முடிச்சுட்டு சாய்ந்தரம் கிளம்பி வந்திடறேன் என்று சொன்னான்.

மாப்பிள அப்போ நீங்க இங்கேயே இருந்து வேலைய முடிச்சதுக்கு அப்பறம் வர்றீங்களா என்று மாமாவிடம் கேட்க... அவரும் சரிங்க மாமா என்று சொல்லி விட்டார்.

நான் என் அப்பா மற்றும் சித்தப்பா மூவரும் கிளம்பினோம்.

வீட்டில் :

வீட்டில் :

பாட்டி , அம்மா என்னை அழுது கட்டிப்பிடித்து வரவேற்றார்கள். என்னடி இப்டி இளச்சுட்ட என்று அம்மா என்னைப் பார்த்து பார்த்து அழுதாள். எனக்கு பிடித்தது எல்லாம் சமைத்துப் போட்டார்கள்.

மதியம் சாப்பிட்டு முடித்து அபுவுக்கு போன் செய்தேன் முழு ரிங் போய் கட்டானது. மீண்டும் போன் செய்தேன் இப்போது பாதியிலேயே கட் செய்யப்பட்டது. சரி நேர்காணலில் இருப்பான் என்று சொல்லி விட்டு விட்டேன்.

இரவானது அவனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை, அவன் கிளம்பினானா இல்லையா என்று கூட தெரியவில்லை.

கருவாடு :

கருவாடு :

இரவு எட்டு மணியிருக்கும். இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வத்தக்கொழம்பு செஞ்சா கருவாட பொறிச்சு வைன்னு எத்தனவாட்டி சொல்லியிருக்கேன். அப்பளத்த பொறிச்சு வச்சிருக்க.... ஒண்ணாவது உருப்படியா செய்றியா?

என்னை கரிச்சு கொட்டலன்னா தூக்கம் வராதே... காலைலயிருந்தே எவ்ளோ வேல பாக்குறேன் என்று இருவருக்கும் வாக்குவாதம் எகிற..

யம்மா... ஏன்மா இப்ப சண்ட போடற இப்ப என்னப்பா கருவாடு தான வேணும் இருங்க நான் போய் வறுதுட்டு வர்றேன் என்று சொல்லி உள்ளே சென்றேன்.

கருவாடை பொறிப்பதற்காக எண்ணெயை ஊற்றி சூடாக காத்திருந்தேன். என்னடி சமையல் எல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டியா? என்ன சொல்றாரு உன் வீட்டுக்காரரு இங்க இருக்கும் சுடு தண்ணி கூட வைக்க மாட்ட.... என்றாள். சிரித்தேன்.

தீ விபத்து :

தீ விபத்து :

அவள் என்னிடம் பேசிவிட்டு சிறிது நேரத்தில் வெளியேறினாள். நான் கருவாடை பொறிக்க ஆரம்பித்தேன்.

கதவு சத்தம் கேட்க, திரும்பி பார்த்தேன். கிச்சன் கதவு வேகமாக சாத்தப்பட்டது. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் என் சேலை மளமளவென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. எரிச்சலில் கை தவறுதலாக பட்டி சட்டியில் சூடாகியிருந்த எண்ணெயும் அப்படியே என் உடலில் கொட்டிவிட்டது.

ஐந்து நிமிடத்தில் மளமளவென்று பரவி முழுவதுமாக எரிய ஆரம்பித்தது.

அம்மா.... கதவத் தொற அப்பா..... என்று கத்தி அலற எதுவும் நடக்கவில்லை.

அப்படியே விழுந்தேன். ஐம்பது சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

அபு :

அபு :

அப்போது தான் இந்த விபத்து எப்டி நடந்தது என்று யோசிக்க ஆரம்பித்தேன். என்னை திட்டமிட்டபடி சமையலறைக்கு தனியாக அனுப்பி இருக்கிறார்கள்.

என்னுடன் சகஜமாக பேசுவதாக உள்ளே நுழைந்த அக்கா சேலையில் தீப்பற்றிவிட்டு சென்றிருக்கிறாள்.

மருத்துவமனையில் சாகக்கிடந்த போதும் அபு என்னை பார்க்க வரவில்லை. மயக்கம் தெளிந்து என்னைப் பார்க்க வந்த அவனின் நண்பர்களிடத்தில் கேட்டேன். யாருமே எதுவும் சொல்லவில்லை.

நான் வற்புறுத்தி கேட்க அவனுக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் சேலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

அபுவை பார்க்க வேண்டும் :

அபுவை பார்க்க வேண்டும் :

எப்படியாவது அபுவிடம் பேசவேண்டும் என்று கெஞ்சி அழ... அவனோடு இருக்கும் நண்பனுக்கு போன் செய்யப்பட்டது.

அவன் அபுவிடம் கொடுக்க என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னாச்சு எப்டி ஆக்ஸிடண்ட் பெரிய அடி ஒண்ணுமில்லையே என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவனும் அழுது கொண்டே இல்ல பாப்பா... நீ பயப்படாத கைல லேசா ஃபிராக்சர் மாவுக்கட்டு போட்டா சரியாகிடும்னு சொல்லியிருக்காங்க என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தினான்.

ஒரு மாதம் :

ஒரு மாதம் :

என்னை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். ஒரு மாதமாக மருத்துவ சிகிச்சையில் இருந்தேன். ஒரு மாதமும் அவன் என்னை பார்க்க வரவில்லை.

அவ்வப்போது அவனிடம் போனில் பேசுவதும், என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு என்று கெஞ்சுவதும் தொடர்ந்தது. ஒரு மாதம் கழித்து சேலத்திற்குச் சென்றேன். முதல் வேலையாக அவனை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து கேட்க இன்னும் மருத்துவமனையிலேயே இருப்பதாக சொன்னார்கள்.

வெறும் ஃபிராக்சர் தான எதுக்கு இவ்ளோ நாள் ஹாஸ்பிட்டல் ? என்று அவன் இருந்த அறைக்குச் சென்றேன். தலை மற்றும் கால் கட்டு போடப்பட்டிருந்தது. வலது கையையே காணவில்லை.

எனக்கு உலகமே இடிந்து விழுவது போல் இருந்தது.

என்னாச்சு :

என்னாச்சு :

டேய்....என்னடா சின்ன ஆக்ஸிடண்ட்னு சொன்ன? இப்டி கிடக்குற என்று கேட்க அவனும் அழ ஆரம்பித்தான் சிதைந்து போன என் முகத்தைப் பார்த்து.

பிறகு தான் இது விபத்தல்ல, நேர்காணலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி எங்கேயோ அழைத்துச் சென்று அடித்து உதைத்ததாகவும்.அங்கே கை காலை வெட்டி விபத்து என்று நம்ப வைக்க தண்டவாளத்தில் வீசிச் சென்று விட்டார்கள்.

பிறகு அவ்வழியாக சென்றவர்கள் தான் மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்றான். என்னோட டிகிரி சர்டிஃபிக்கேட்டையும் எரிச்சிட்டாங்க இப்டி வாழ்றதுக்கு நம்ம போய் சேர்ந்திருக்க கூடாதான்னு தோணுது சோபி என்று அழுதான்.

புதிய வாழ்கை :

புதிய வாழ்கை :

அங்கிருந்து சென்னைக்கு வந்தோம். பத்து வருடங்கள் கிடைத்த சின்ன சின்ன வேலைகளை செய்து எனக்கும் அவனுக்கும் மருத்துவத்திற்கே மிகவும் சிரமப்பட்டோம்.

படிப்பைப் பிடுங்கி, ஊனமாக்கி, முகத்தை சிதைத்து இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்துவிட்டுப் போ நாங்கள் எழுந்து வர வேண்டும் என்று சபதமேற்று நாங்கள் அன்றாடம் சந்திக்கும் கஷ்டங்களையும், நிராகரிப்புகளையும், அவமானங்களையும் சுமந்து கொண்டு இன்றைக்கு ஓரளவுக்கு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அவர் இந்தக் கதையை சொல்ல, எனக்கு கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

அவரது கணவரும் வந்திருந்தார். நாள் முழுவதும் ஒற்றைக்கையால் சம்பாதித்து காதல் வாழ்க்கை வாழும் இவர்கள் தான் காதலின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking struggles to get married their love

Shocking struggles to get married their love
Desktop Bottom Promotion