For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் கண்களுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

தகையணங்குறுத்தலில் உறவுகள் சிறக்க திருவள்ளுவர் திருக்குறளில் கூறியிருப்பவை!

|

Relationship Tips From Thagaiyananguruthal Kamathuppaal Thirukkural!

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதில் துவங்கி, கவிதை / பாடலின் முதல் வரியில் பெண் என்ற பெயர் எழுதினால் அதற்கு எதுகை மோனையாக கண் என எழுதாத கவிஞனே இல்லை.

பெண்கள் பற்றியோ, பெண்களின் அழகை பற்றியோ பேசும் போது, அவர்களுடைய இரண்டு கண்களை பற்றி பேசாதிருக்க இயலாது. இது அரும்பு மீசை இளசுகள் முதல், முதிர்ச்சி அடைந்த மாபெரும் கவி வரை அனைவருக்கும் பொருந்தும்.

உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும் இதற்கு விதிவிலக்கல்ல. தனது தகையணங்குறுத்தல் எனும் காமத்துப் பாலில் இடம்,பெற்றுள்ள அதிகாரத்தில் பெண்களின் கண்கள் எத்தகையது என பல வகைகளில் காதலுடன் எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர் பெருந்தகை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறள் 1081:

குறள் 1081:

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.

மு.வரதராசனார் உரை:

தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

சாலமன் பாப்பையா உரை:

அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.

குறள் 1082:

குறள் 1082:

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.

மு.வரதராசனார் உரை:

நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

குறள் 1083:

குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

மு.வரதராசனார் உரை:

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

சாலமன் பாப்பையா உரை:

எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

குறள் 1084:

குறள் 1084:

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?.

மு.வரதராசனார் உரை:

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

சாலமன் பாப்பையா உரை:

பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.

குறள் 1085:

குறள் 1085:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

மு.வரதராசனார் உரை:

எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:

என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

குறள் 1086:

குறள் 1086:

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

மு.வரதராசனார் உரை:

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

சாலமன் பாப்பையா உரை:

அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

குறள் 1087:

குறள் 1087:

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.

மு.வரதராசனார் உரை:

மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

குறள் 1088:

குறள் 1088:

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!.

மு.வரதராசனார் உரை:

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!.

சாலமன் பாப்பையா உரை:

களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.

குறள் 1089:

குறள் 1089:

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

மு.வரதராசனார் உரை:

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை:

பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

குறள் 1090:

குறள் 1090:

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.

மு.வரதராசனார் உரை:

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

சாலமன் பாப்பையா உரை:

காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relationship Tips From Thagaiyananguruthal Kamathuppaal Thirukkural!

Relationship Tips From Thagaiyananguruthal Kamathuppaal Thirukkural!
Story first published: Monday, January 1, 2018, 11:32 [IST]
Desktop Bottom Promotion