வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க..

Posted By:

Vendaikkai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காய் என்றாலே அலறி அடித்து ஓடுவார்களா? அப்படிப்பட்ட அவர்களை வெண்டைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் வெண்டைக்காய் பொரியல் செய்யுங்கள். அதுவும் ஸ்பெஷலாக ஒரு மசாலாவை அரைத்து, அதை சேர்த்து பொரியல் செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் பொரியலை செய்யும் போது, அதில் உள்ள வழுவழுப்புத்தன்மை முற்றிலும் நீங்கும் மற்றும் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Vendaikkai Poriyal How To Make Okra Fry Recipe

உங்களுக்கு இந்த வெண்டைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா வறுத்து அரைப்பதற்கு..

* பச்சை வேர்க்கடலை - 1/4 கப்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* காய்ந்த கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி

பொரியல் தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெண்டைக்காய் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, ஒரு துணியால் துடைத்து காய வைக்க வேண்டும்.
* பின் அதை சிறு துண்டுகளாக வெட்டி, 20 நிமிடம் அப்படியே தனியாக வைத்து விட வேண்டும். இப்படி செய்யும் வெண்டைக்காயில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை ஓரளவு குறையும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் கடலைப் பருப்பு, துவரம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லி, சீரகம், வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் மற்றும் காய்ந்த கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, அதை ஒரு தட்டில் போட்டுக் குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் வறுத்த மற்ற பொருட்களையும் சேர்த்து, ஓரளவு கொரகொரவென்று அரைத்து பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு 4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வெண்டைக்காயை வேக வைக்கும் போது அதில் உள்ள வழுவழுப்புத்தன்மை நீங்கிவிடும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் வறுத்து அரைத்த பொடியில் இருந்து தேவையான அளவு பொடியை சேர்த்து நன்கு கிளறி, எவ்வளவு மொறுமொறுவென்று வெண்டைக்காய் வேண்டுமோ, அந்த அளவு வேக வைத்து இறக்கினால், சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, June 12, 2026, 14:25 [IST]
Desktop Bottom Promotion