வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும்

Posted By:

Varalakshmi Vratam Special Kasa Kasa Payasam Recipe in Tamil: வரலட்சுமி விரதம் என்பது இந்து மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த நாளில் பெண்கள் தங்களின் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்பத்தின் நல்வாழ்வுக்காகவும் லட்சுமி தேவியை வழிபடுகிறார்கள். இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபட விஷேச உணவு தயாரிப்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். இந்த வரலட்சுமி நாளில் பொதுவாக மக்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் விருந்து சமைப்பார்கள். இந்த நாளில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

Varalakshmi Vratam Special Recipe How to Make Kasa Kasa Payasam Recipe in Tamil

இந்த வரலட்சுமி விரத நாளில் உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் சேமியா அல்லது பால் பாயாசம் செய்யாமல், கசகசாவை வைத்து கர்நாடகா ஸ்டைலில் அருமையான பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் வழக்கமான பாயாசம் போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் அதேசமயம் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த வரலட்சுமி விரத ஸ்பெஷல் கசகசா பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் கசகசா பாயாச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 3 ஸ்பூன் கசகசா
- 2 ஸ்பூன் அரிசி
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 4 ஸ்பூன் வெல்லம்
- 1 கப் பால்
- 2 ஏலக்காய்
- ஒரு சிட்டிகை உப்பு
- 2 ஸ்பூன் நெய்
- 10 முந்திரிப் பருப்பு
- 10 உலர் திராட்சை

செய்முறை:

- கர்நாடகா ஸ்டைல் கசகசா பாயசத்தை செய்ய, முதலில் ஒரு வாணலியில் கசகசா மற்றும் அரிசியைச் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அவற்றை ஆறவிடவும்.

- இந்த கலவை ஆறியதும் இதை ஒரு மிக்ஸி ஜாடிக்கு மாற்றி, சற்று கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும். பிறகு துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் மென்மையான விழுதாக அரைக்கவும்.

- ஒரு பாத்திரத்தில் பாலை மிதமான தீயில் சூடாக்கி கொதிக்க விடவும். பால் கொதித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள கசகசா-தேங்காய் கலவையை சேர்த்துக் கிளறவும்.

- பின்னர் நசுக்கிய ஏலக்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

- பாயசம் நன்கு இறுகி கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

- ஒரு தாளிப்புக் கரண்டியில் நெய்யை மிதமான தீயில் சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை 2 நிமிடங்கள் வறுக்கவும்.

- முந்திரிப் பருப்பு பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு, இதை பாயசத்தின் மீது ஊற்றிப் கிளறினால் சுவையான கர்நாடகா ஸ்டைல் கசகசா பாயாசம் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Thursday, August 20, 2026, 22:45 [IST]
q
Desktop Bottom Promotion