4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..

Posted By:

Thakkali Kurma Recipe In Tamil: இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் குருமா செய்யுங்கள். ஆனால் குருமா செய்ய வீட்டில் தேங்காய் இல்லையா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேங்காய் சேர்க்காமல், பொட்டுக்கடலை இருந்தாலே அட்டகாசமான சுவையில் குருமா செய்யலாம். அதுவும் தக்காளியும், பொட்டுக்கடலையும் கொண்டு அருமையான சுவையில் தக்காளி குருமாவை செய்தால், இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Tomato Kurma Without Coconut How To Make Thakkali Kurma Recipe

உங்களுக்கு தேங்காய் சேர்க்காத தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 ஸ்பூன்
* கடுகு - 1/2 ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* பூண்டு - 5 பல் (இடித்தது)
* தக்காளி - 5 (அரைத்தது)
* தண்ணீர் - 1/4 டம்ளர் + 2 டம்ளர்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த பொட்டுக்கடலை
* கொத்தமல்லி - சிறிது

வறுத்து அரைப்பதற்கு...

* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* பொட்டுக்கடலை - 4 ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை நறுக்கி சேர்த்து நன்கு அரைத்த தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த பொடியை எடுத்துக் கொண்டு, நீரை ஊற்றி கட்டிகளின்றி கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் அதில் இடித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, அத்துடன் 1/4 டம்ளர் நீரை ஊற்றி கலந்து, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போக 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை கலவையை சேர்த்து, 2 டம்ளர் நீரை ஊற்றி கலந்து, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தக்காளி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 9, 2026, 20:17 [IST]
Desktop Bottom Promotion