முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும்

Posted By:

Egg Pulao Recipe in Tamil: மதியம் சிம்பிளாக அதேசமயம் சுவையான ஒரு சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், முட்டையும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி அட்டகாசமான முட்டை புலாவை செய்து பாருங்கள். முட்டையை வழக்கமாக பொரியல் அல்லது குழம்புதான் செய்வோம். ஆனால் இந்த முட்டை புலாவ் இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும்.

Tasty Egg Pulao Recipe How to Make at Home in Tamil

ஒரே மாதிரியான புலாவ், பிரியாணி சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த முட்டை புலாவ் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த அட்டகாசமான முட்டை புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் செய்து குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான முட்டை புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு சுவையான முட்டை புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- பாஸ்மதி அரிசி - 3 கப்
- வெங்காயம் - 3
- தக்காளி - 2
- தயிர் - ¾ கப்
- பச்சை மிளகாய்கள் - 3
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- எலுமிச்சை பழம் - 1
- சீரகம் - 1 ½ டீ ஸ்பூன்
- ஏலக்காய் - 6
- பிரியாணி இலை - 2
- பட்டை - 2 இன்ச் அளவு
- அன்னாசி பூ - 1
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- முழு மிளகு - சிறிதளவு (தோராயமாக 8)
- நெய் அல்லது எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

முட்டையை வறுக்க:

- முட்டைகள் - 12
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
- முழு மிளகு - 1/4 டீ ஸ்பூன் (புதிதாக இடித்தது)

விழுது அரைக்க:

- பச்சை மிளகாய் - 4
- பூண்டு - 12 பல்
- இஞ்சி - 2 இன்ச் அளவு

செய்முறை:

- முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக இரண்டு மூன்று முறை அலசி 45 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற விடவும்.
- முட்டையை தண்ணீரில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து 8 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைத்து ஓடு நீக்கி எடுத்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சை பகுதியை நீக்கி விட்டு, நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் உரித்த பூண்டு, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை கழுவி காம்பை நீக்கி சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- நன்கு பழுத்த தக்காளியை காம்பு பகுதியை நீக்கி விட்டு நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி வைக்கவும்.
- கொத்தமல்லி மற்றும் புதினாவை மண் இல்லாமல் அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறி எடுத்து கொள்ளவும்.
- முட்டை புலாவ் செய்ய, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்.
- அதில் வேகவைத்த முட்டைகளை சேர்த்து, அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் மிளகை நன்றாக இடித்து சேர்த்து கிளறி, முட்டைகள் லேசாக பழுப்பு நிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு ஆழமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
- அதனுடன் சீரகம், பச்சை ஏலக்காய், பட்டை, முழு மிளகு மற்றும் அன்னாசி பூ சேர்த்து பொரிய விடவும்.
- அதில் அரைத்து வைத்த பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- நறுக்கி வைத்த தக்காளி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.
- பிறகு தயிரை நன்கு அடித்து சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு, நறுக்கி வைத்த புதினா, கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.
- ஊறவைத்த அரிசியில் நீரை வடிகட்டி சேர்த்து மெதுவாக கிளறவும்.
- வறுத்து வைத்த முட்டையின் மேல் லேசாக கீறல் போட்டு சேர்க்கவும்.
- அரிசிக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, தண்ணீர் முக்கால் பங்கு வற்றும் வரை வேக விடவும்.
- பாத்திரத்தை மூடி மிதமான தீயில் அரிசி முழுமையாக வேகும் வரை சமைக்கவும்.
- பின் கடைசியாக கரண்டியின் பின் பகுதியால் மென்மையாக கிளறி இறக்கினால் சுவையான முட்டை புலாவ் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, October 25, 2026, 13:40 [IST]
Desktop Bottom Promotion