குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Kutty Bonda With Kara Chutney Recipe In Tamil: மழைக்காலம் என்பதால் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது நன்கு காரசாரமாகவும், மொறுமொறுவென்றும் சாப்பிட நிச்சயம் வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். அப்போது வழக்கமாக செய்வது போன்று பஜ்ஜி, வடை போன்றவற்றை செய்வதற்கு பதிலாக, வீட்டில் தோசை மாவு இருந்தால், அதைக் கொண்டு குட்டி போண்டாக்களையும், அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியையும் செய்யுங்கள். இந்த போண்டா செய்வதற்கு வெறும் 15 நிமிடங்களே போதும். அந்த அளவில் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Snacks Recipes How To Make Kutty Bonda With Kara Chutney

உங்களுக்கு இந்த குட்டி போண்டா மற்றும் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குட்டி போண்டா மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

போண்டாவிற்கு..

* புளித்த தோசை மாவு - 1 லிட்டர்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* தக்காளி - 3 (நறுக்கியது)
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்

சட்னி தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் தோசை மாவை எடுத்துக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் ரவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து நன்கு கலந்து கொண்டு மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மாவை கலந்து பார்க்கும் போது மாவானது இட்லி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாகி போண்டா மாவு பதத்தில் இருக்கும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கைகளை நீரில் நனைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், குட்டி போண்டா தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளியை சேர்த்து, அத்துடன் நறுக்கிய தக்காளி மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகம் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 22, 2026, 18:34 [IST]
Desktop Bottom Promotion