பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..

Posted By:

Restaurant Style Paneer Mushroom Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு பெரும்பாலும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் பன்னீரும், காளானும் உள்ளதா? இதுவரை இவ்விரண்டையும் தனித்தனியாகத் தான் சமைத்து சுவைத்திருப்பீர்கள்.

Restaurant Style Paneer Mushroom Masala How To Make Mushroom Paneer Masala Recipe

ஆனால் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒருமுறை செய்து பாருங்கள். சுவை வேற லெவலில் இருக்கும். அதுவும் இப்படியான ரெசிபியை ரெஸ்டாரண்ட்டுகளில் தான் சுவைத்திருப்பீர்கள். அதை வீட்டில் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் மஸ்ரூம் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் மஸ்ரூம் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பட்டன் காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

ப்ரை செய்வதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

தாளிப்பதற்கு...

* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - 2 டீஸ்பூன்
* ஊற வைத்த காளான்
* ப்ரை செய்த பன்னீர்
* முந்திரி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - 3/4 கப்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகுத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட காளானை சேர்த்து நன்கு பிரட்டி தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு கிளறி, ஊற வைத்த காளானை சேர்த்து பிரட்டி, 3-4 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ப்ரை செய்த பன்னீர் மற்றும் முந்திரி பவுடரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 3/4 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, மேலே 2 பச்சை மிளகாயை வைத்து மூடி வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, ஒருமுறை கிளறி விட்டு, கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி, மூடி வைத்து, மீண்டும் 4 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் மஸ்ரூம் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 4, 2026, 21:05 [IST]
Desktop Bottom Promotion