தயிர் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்... வாழைக்காய் சுக்கா வறுவல்

Posted By:

Raw Banana Chukka Varuval: இன்று சமைக்க பிடிக்கவில்லையா? தயிர் சாதம் தான் செய்யப் போகிறீர்களா? அந்த தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக்க ப்ளாக் பண்ணியிருந்திங்களா? அதற்கு பதிலாக சுவையான சைடு டிஷ் ஏதாவது செய்யலாம் அல்லவா?

உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு சுக்கா வறுவலை செய்யுங்கள். இந்த வாழைக்காய் சுக்கா வறுவல் தயிர் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Raw Banana Chukka Varuval Recipe In Tamil

முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு வாழைக்காய் சுக்கா வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே வாழைக்காய் சுக்கா வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய வாழைக்காய் - 3 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பை எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து, வாழைக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
* வாழைக்காய் வெந்ததும், நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி, துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் வேக வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு ஒருசேர கிளற வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* வாழைக்காயில் மசாலா நன்கு ஒன்று சேர்ந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான வாழைக்காய் சுக்கா வறுவல் தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Saturday, August 19, 2023, 13:20 [IST]
Desktop Bottom Promotion