நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Navratri Special Suraikai Payasam Recipe In Tamil: நவராத்திரி என்பதால் சிலர் தங்கள் வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள். அப்படி கொலு வைத்திருப்பவர்கள் தினமும் பிரசாதம் செய்து படைத்து மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம். உங்கள் வீட்டிலும் நவராத்திரிக்கு கொலு வைத்துள்ளீர்களா? அப்படி கொலு வைத்திருக்கும் போது ஒரே சுவையில் பிரசாதம் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக சுரைக்காயைக் கொண்டு பாயாசம் செய்யுங்கள். இந்த சுரைக்காய் பாயாசம் புதுமையான சுவையில் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Navratri Special Suraikai Payasam How To Make Bottle Gourd Kheer Recipe

உங்களுக்கு இந்த சுரைக்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சுரைக்காய் - 300 கிராம் (துருவியது)
* நெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/2 லிட்டர்
* ஏலக்காய் - 2
* சர்க்கரை - 1/4 கப்
* கண்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது

செய்முறை:

* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், துருவிய சுரைக்காயை சேர்த்து 5-7 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 லிட்டர் காய்ச்சிய பாலை ஊற்றி கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காயை தட்டி சேர்த்து, அத்துடன் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்த முந்திரி, திராட்சையை கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சுரைக்காய் பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 16, 2026, 13:39 [IST]
Desktop Bottom Promotion