மட்டன் வாங்குனா.. ஒருவாட்டி மட்டன் திரக்கல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Mutton Therakkal Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் செய்ய போகிறீர்களா? அப்படி வாங்கினால் எப்போதும் செய்வது போன்று மட்டன் செய்யாமல், ஒருமுறை மட்டன் திரக்கலை செய்யுங்கள். இந்த திரக்கலை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

முக்கியமாக இந்த மட்டன் திரக்கல் பார்க்க சுக்கா போன்று இருக்கும். ஆனால் சுவை வித்தியாசமாக இருக்கும். மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைப்பவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

Mutton Therakkal How To Make a Mutton Thirakkal Recipe

உங்களுக்கு மட்டன் திரக்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் திரக்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 1/2 கிலோ
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* மல்லி - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7
* சின்ன வெங்காயம் - 25 (நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 7 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மட்டன் மசாலா - 1 ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மட்டன் கழுவி குக்கரில் போட்டு, சிறிது உப்பு மற்றும் 1 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 6 சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மட்டன் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, நீர் வற்றும் வரை நன்கு மட்டனை வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மட்டன் திரக்கல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, February 21, 2026, 23:33 [IST]
Desktop Bottom Promotion