முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Mullangi Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் முள்ளங்கி என்றாலே வேண்டாம் என்பார்களா? அப்படிப்பட்டவர்களை முள்ளங்கி சாப்பிட வைக்க வேண்டுமா? பொதுவாக முள்ளங்கியை சாம்பார் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இப்படி வைக்கும் சாம்பாரை பல விதங்களில் செய்யலாம். அதில் ஒருவிதம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்குவத்தில் முள்ளங்கி சாம்பாரை செய்யும் போது பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Mullangi Sambar How To Make Radish Sambar Recipe

உங்களுக்கு இந்த முள்ளங்கி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/2 கப்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* முள்ளங்கி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப் + தேவையான அளவு
* புளித்தண்ணீர் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குக்கரில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் நறுக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் முள்ளங்கி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, புளி தண்ணீரை ஊற்றி, பின் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி, வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி மற்றும் துருவிய தேங்காயைத் தூவி இறக்கினால், சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, July 25, 2026, 15:15 [IST]
Desktop Bottom Promotion