மங்களூர் ஸ்டைல் முருங்கைக்காய் குழம்பு

Posted By:

Mangalore Style Drumstick Curry: நீங்கள் சமைப்பதில் ஆர்வம் கொண்டவரா? அடிக்கடி ஏதாவது வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் முயற்சிக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அடிக்கடி வித்தியாசமாக சமைத்துக் கொடுக்க நினைப்பீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? அந்த முருங்கைக்காய் கொண்டு வேறு மாநில ரெசிபி செய்ய தயாரா?

அப்படியானால் ஒருமுறை உங்கள் வீட்டில் இருப்போருக்கு மங்களூர் ஸ்டைல் முருங்கைக்காய் குழம்பு செய்து கொடுங்கள். இந்த மங்களூர் ஸ்டைல் முருங்கைக்காய் குழம்பு சற்று இனிப்பு கலந்து இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Mangalore Style Drumstick Curry Recipe In Tamil

உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் முருங்கைக்காய் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஸ்டைல் முருங்கைக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முருங்கைக்காய் - 4 (1 இன்ச் துண்டுகளாக்கப்பட்டது)
* நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

மசாலாவிற்கு...

* வரமிளகாய் - 3-4 (காரத்திற்கு ஏற்ப)
* மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் துண்டுகளாக்கப்பட்ட முருங்கைக்காயை சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மல்லி விதைகள், சீரகம், மிளகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும். பின் அதில் புளி பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள முருங்கைக்காயை நீருடன் சேர்த்து கிளறி, அதன் பின் அரைத்த மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மங்களூர் ஸ்டைல் முருங்கைக்காய் குழம்பு தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Friday, June 23, 2023, 13:57 [IST]
Desktop Bottom Promotion