கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Catering Style Kovakkai Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கோவைக்காய் என்றால் பிடிக்காதா? கோவைக்காய் செய்தாலே அலறி அடித்து ஓடுவார்களா? அப்படிப்பட்டவர்களை கோவைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் கேட்டரிங் ஸ்டைலில் கோவைக்காய் வறுவலை செய்து கொடுங்கள். இப்படி கோவைக்காய் வறுவல் செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த வறுவல் அனைத்து விதமான சாதத்துடனும் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.

Kovakkai Varuval How To Make Catering Style Ivy Gourd Fry Recipe

உங்களுக்கு இந்த கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கோவைக்காய் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

வறுத்து பொடி செய்வதற்கு...

* வரமிளகாய் - 3
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் கோவைக்காயை நீரில் கழுவி, அவற்றை மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு ஈரப்பதம் போக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் கோவைக்காய் வெந்ததும், அதில் வறுத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ஒருவேளை காரம் போதவில்லை என்றால், சிறிது மிளகாய் தூளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் நன்கு வதக்கி வேக வைத்து இறக்கினால், சுவையான கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 24, 2026, 14:15 [IST]
Desktop Bottom Promotion