கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும்

Posted By:

Kongu Special Pazha Kachayam Recipe in Tamil: டீ, காபி குடிக்கும் போது அவற்றுடன் சில சைடிஷ் வைத்து சாப்பிடுவது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. அது பெரும்பாலும் பஜ்ஜி, வடை அல்லது போண்டா என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கும். ஆனால் எவ்வளவு நாட்கள்தான் வடை, பஜ்ஜியையே சாப்பிட்டுக் கொண்டிருப்பது. ஏதாவது புதிதாக ஒரு நொறுக்குத்தீனியை செய்ய விரும்புகிறீர்களா?

Kongu Special Pazha Kachayam Recipe How to Make at Home in Tamil

உங்கள் வீட்டில் வாழைப்பழமும், மைதா மாவும் உள்ளதா? அப்ப அதை வைத்து கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயத்தை ஒருமுறை செய்து பாருங்கள். இந்த பழ போண்டா கோயம்புத்தூர், கரூர், திருப்பூர் போன்ற கொங்கு கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும். இந்த சுவையான பழ கச்சாயத்தை செய்வது மிகவும் சுலபமானதாகும். சொல்லப்போனால் இந்த சுவையான நொறுக்குத்தீனி செய்ய 15 நிமிடங்களே போதுமானதாகும். இந்த போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.

உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் மசித்த வாழைப்பழம்(நன்றாக பழுத்தது)
- 1 கப் மைதா மாவு
- 1/2 கப் ரவை
- 1/2 கப் பொடித்த சர்க்கரை( மிக்சியில் அரைத்தது)
- 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி
- 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை:

- ஒரு பாத்திரத்தில் நன்றாகப் பழுத்த வாழைப்பழங்களை சேர்த்து மசிக்கவும். அத்துடன் மைதா மற்றும் மெல்லிய ரவையைச் சேர்க்கவும்.

- பின்னர் அரைத்த சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.

- மாவை நன்றாகக் கலக்கவும். இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும். மாவில் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

- சர்க்கரை மற்றும் வாழைப்பழம் சேர்ப்பதால், சில நிமிடங்களிலேயே மாவு தானாகவே சற்று நீர்த்துப்போகும். எனவே, மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது வறண்டதாகவோ இருந்தால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.

- பேக்கிங் சோடாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவை 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும்.

- ஒரு வாணலியில் எண்ணெயை மிதமான சூட்டில் சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும், மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போடவும்.

- மாவு உருண்டைகள் இருபுறமும் சமமாக வேகும் வகையில் அவற்றை அவ்வப்போது திருப்பி விடவும்.

- பொன்னிறமாகும் வரை நன்கு பொரித்தெடுக்கவும். பின்னர் அவற்றை வெளியே எடுத்து, அதிகப்படியான எண்ணெயை நீக்க பேப்பர் டவலில் வைக்கவும்.

- சூடாக பரிமாறவும்.

- கூடுதல் சுவைக்கு தேங்காயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வதக்கி மாவுடன் சேர்த்து பொரித்தெடுத்தால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 7, 2026, 22:09 [IST]
Desktop Bottom Promotion