கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்

Posted By:

Karnataka Chicken Donne Biryani Recipe in Tamil: உங்களுக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடுவீர்களா? இல்லாவிட்டால் வீட்டிலேயே பிரியாணி செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் பிரியாணி செய்வீர்களா? நீங்கள் செய்யும் பிரியாணி சுவை குறைவாக தக்காளி சாதம் போன்று இருக்குமா?

Karnataka Chicken Donne Biryani Recipe How to Make at Home in Tamil

ஒரே மாதிரியான பிரியாணி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் அடுத்தமுறை பிரியாணி செய்வதாக இருந்தால், கர்நாடக ஸ்டைல் தொன்னை சிக்கன் பிரியாணியை செய்யுங்கள். இந்த சிக்கன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்த பிரியாணி கர்நாடகா முழுவதும் மிகவும் புகழ் பெற்றதாகும், அங்குள்ள அனைத்து கடைகளிலும் இந்த பிரியாணியை நாம் பார்க்கலாம். முக்கியமாக இதை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்த பிரியாணி வழக்கமான பிரியாணி போல அல்லாமல் பச்சை நிறத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் தொன்னை சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா தொன்னை சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கனை மேரினேட் செய்ய:

- 1 கிலோ எலும்புடன் கூடிய சிக்கன்
- 1/4 கப் தயிர்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் உப்பு

மசாலா அரைக்க:

- 1/4 கப் புதினா இலைகள்
- 1/4 கப் கொத்தமல்லி இலைகள்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 6 பச்சை மிளகாய்
- 1 இன்ச் இஞ்சி
- 2 பல் பூண்டு
- 1 ஸ்பூன் கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக் கீரை)
- 1/4 கப் தண்ணீர்

பிரியாணி செய்ய:

- 2 கப் சீரகச் சம்பா அரிசி
- 3 ஸ்பூன் நெய்
- 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 2 மராட்டி மொக்கு
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1 அன்னாசிப் பூ
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 2 துண்டு பட்டை
- 1/2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
- 1 ஸ்பூன் கறி மசாலா தூள்
- 1/4 ஸ்பூன் மிளகுத் தூள்
- ஒன்றரை ஸ்பூன் மல்லித் தூள்
- 4 கப் சூடான தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 1/2 எலுமிச்சை பழத்தின் சாறு

செய்முறை:

- பிரியாணி செய்யத் தொடங்குவதற்கு முன்பு அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். அரிசி 30 நிமிடங்கள் ஊற வேண்டும்.

- இந்த பிரியாணி செய்வதற்கு எலும்புடன் கூடிய சிக்கனைப் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் எலும்பில் உள்ள சுவை சமைக்கும்போது அரிசியில் இறங்கும். சிக்கனுடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து ஊறவைக்கவும்.

- அதன்பின் ஒரு மிக்சி ஜாரில் மசாலா அரைக்கத் தேவையான பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- ஒரு குக்கரில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் முழு மசாலாப் பொருட்கள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.

- வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கிய பிறகு, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.

- மசாலா பச்சை வாசனை போனதும் அதனுடன் பிரியாணி மசாலா, கறி மசாலா தூள், மிளகுத் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர் மசாலா தடவி வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாத்திரத்தை மூடியால் மூடி, சுமார் 10 நிமிடங்களுக்குச் சமைக்கவும்.

- அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும்; சமைக்கும்போது தீயைக் குறைவாகவே வைத்திருக்கவும். சிக்கன் வேகா சமைக்கத் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.

- ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். 2 கப் அரிசிக்கு 4 கப் சூடான தண்ணீரைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

- அதன்பின் ஊறவைத்துத் தண்ணீர் வடித்த அரிசி, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நீரை நன்கு கொதிக்கவிடவும்.

- குக்கரை மூடி, 2 விசில் விட்டு அதன்பின் 20 நிமிடங்கள் தம் போடவும்.

- அதன்பின் மூடியைத் திறந்தால் கமகமக்கும் கர்நாடகா தொன்னை பிரியாணி ரெடி.

- இதை ரைத்தா மற்றும் வேக வாய்த்த முட்டையுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 19, 2026, 11:04 [IST]
Desktop Bottom Promotion